இளைப்பாறல்

சுழலும் மின்விசிறி
ஒரு இளைப்பாறல்
குடுக் குடுக் என
சத்தமிட்டுக் கொண்டிருக்க
வியர்த்து விறுவிறுத்து
ஈரமாகி விட்ட நாற்காலி
உச்சந்தலை வழி இருப்பதை உறிஞ்சி
சக்கையை மீதம் வைத்தனுப்பிய சூரியன்
சிவத்த தோல் கறுப்பாகி சாய்கையில்
"அப்பப்பா எனக்கே இப்படியா
பெரிசுகவெல்லாம்" என நீளும் ஒரு
கோடைகால தாகத்தில்
முன்பு பெய்த
ஒரு மழைத்துளியின் ஈரம்
உலர்ந்து விட்டிருந்தது
வறண்ட நிலத்தில்
வெடிப்புகள் மட்டும் மிஞ்சியது போல்
மனமும் மாற்றம் கொள்கிறது
திடீரென
வலசை செல்லும் பறவை போல்
பச்சை பசேல் பகுதிகளுக்குள்
ஓடத் தொடங்கிய எண்ணங்கள்
கண்கள் பசுமையடையும் வரை
ஒரு வசந்தகால கனவை
கண்டுவிட்டு
ஒரு பெருமூச்சுடன் வந்து நிற்கிறது
கோடையே போ என சொல்ல
நா துடித்தாலும்
பாவம் எத்தனை கால பகையோ
எத்தனை நாள் துயரமோ
இயற்கையும் கொஞ்சம் தீர்த்துக் கொள்ளட்டுமே
இந்த மனிதனை வாட்டி
என விட்டு விட்டேன்

என்ன ஒரே ஒரு வருத்தம்
குளிரூட்டியில் அமர்ந்திருக்கும்
அறிவு மேதாவிகளின் தேகத்தை
இந்த கோடை எப்படி தாக்கும்
இயற்கையும் தன் கோபத்தை
இயலாதவன் மீதே காட்டுகிறதே என

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (12-Apr-17, 1:51 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 56

மேலே