உணர்ந்ததில்லை வசந்தம்

​வானம் கூரையானது
வீதியோ வீடானது !
வருத்தமிகு வாழ்வே
நிரந்தரம் என்றானது !
​வழிகிறது விழிநீரும்
பிழிகிறது நெஞ்சையும் !

வறுமையும் பொறுமையும்
சொந்தம் பந்தமானது !
உணர்ந்ததில்லை வசந்தம்
உணவில்லை நித்தம் !
வழியறியா வறியவர்க்கு
மொழியொன்றே சொத்து !

வேடிக்கைப் பார்ப்பவர்கள்
வாடிக்கைதான் என்றும் !
உதவிடும் உள்ளங்கள்
உலகிலும் குறைவன்றோ !
சுயநலம் வாழ்கிறது
பொதுநலம் வீழ்கிறது !

சமூகநீதி எண்ணங்கள்
சரிவின் எல்லையில் !
சாதிமதக் கொண்டாட்டம்
சாகும்வரை வெறியாட்டம் !
சத்தங்கள் எழுப்புவதால்
சச்சரவுகள் பெருகுகின்றன !

கேடுகெட்ட அரசியலால்
நாடுகெட்டு நாற்றமடிக்குது !
பாடுபடும் உழைப்பாளிகள்
பாதைகளில் வாழ்கின்றனர் !
குறுக்கு வழியில் பிழைப்பவரோ
குறுநில மன்னராகிறார் இன்று !

ஏழ்மையெனும் எதிரியும்
சாதிமதமெனும் அரக்கனும்
நஞ்சாகிப்போன அரசியலும்
கல்லறை செல்லும்வரை
வீடெங்கும் விரிசலே
நாடென்றும் இடுகாடே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Apr-17, 9:19 am)
பார்வை : 758

மேலே