வெங்காயம்

அந்தக் கடையில் எல்லாப் பொருட்களும் MRP-ஐ விட விலை குறைவு.

புதிதாகக் காய், பழம் பிரிவுக்கு ஒரு வயதான பெண்மணியை நியமித்திருந்தனர்..

ஒவ்வொரு முறை செல்லும் போதும் காய்கள், பழங்கள் வாங்க ஊக்குவிப்பாள்.. நேற்று சென்றபோது நூறு ரூபாய்க்கு காய், பழம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற கூடுதல் உந்துதல்..

நான் எப்பொழுதும் காய், பழம் வாங்குவது வேறு கடையில். இரண்டு நாட்கள் முன் தான் வாங்கியிருந்ததால், அடுத்தமுறை உங்களிடம் வாங்குகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டேன்.. வெங்காயம் எனக்கு உந்துதல் இல்லை ஏனெனில், எங்கள் வீட்டில் வெங்காயம் உபயோகம் குறைவு..

இன்று காலை பதினோறு மணிக்கு, பேரன் பேத்திக்கு நொறுக்ஸ் வாங்கிக் கொண்டு, அந்தக் கடையில் தோசை மாவு வாங்கினேன்.. பழம் ஏதாவது எடுக்கலாம் என்று அந்தப் பக்கம் திரும்ப அம்மணி துடிப்பாக வந்துவிட்டாள் இலவச வெங்காயத் திட்டத்துடன்..

என் மனதில், வெங்காயம் என்றவுடன் வீட்டு அம்மணியின் விமர்சனம் ஓடியது... "வீட்டில் ஒரு மூட்டை வெங்காயம் இருக்க (மூன்று நாள் முன் வாங்கியது ஒரு கிலோதான்) இத்த எதுக்கு அள்ளிண்டு வந்தீங்க...?"
வாழைப் பழம் மட்டும் எடுக்கலாம் என்று இருந்த நான், பச்சை திராட்சை (பேத்திக்குப் பிடிக்கும்), மாம்பழம் (மனைவிக்குப் பிடிக்கும்), கடைப் பெண்மணியின் சிபாரிசில் ஆப்பிள்.

பழம் எடுத்துக் கொடுத்த கையோடு வெங்காயம் எடுக்கச் சென்று விட்டாள்..
வீடு வந்தவுடன் பையைத் திறந்தவுடன் கேட்கப்பட்ட கேள்வி, அட்சரப் பிசகில்லாமல் மேலே குறிப்பிட்டது...

"இலவசமாக கிடைத்தது... வேண்டாம் என்றால் யாருக்காவது கொடுத்து விடு..."

என்ன கொஞ்சம் வெங்காயம் கூடுதல் இருந்தால் என்ன என்று மனம் பொருமினாலும், அந்தச் சிக்கனம்தான் இன்றைய சுகவாசத்திற்கு அடித்தளம்.
---முரளி

எழுதியவர் : முரளி (15-Apr-17, 9:28 am)
சேர்த்தது : முரளி
Tanglish : vengaayam
பார்வை : 158

மேலே