புது வீடு

சிறிய நகரத்தில் இருந்து சற்று வெளிய தள்ளி அமைந்திருந்தது அந்த புறநகர் பகுதி. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்த வீடுகளின் அளவும், அமைப்பும், அது நடுத்தர மக்களுக்கான வளர்ந்துவரும் குடியிருப்பு பகுதி என்பதை உணர்த்தியது . அனேகமாக அது தான் அந்த பகுதியின் கடைசி வீடென நினைக்கிறேன், இரண்டு சென்ட்டுக்கும் குறைவான இடத்தில் , நான்கு நபர்கள் கொண்ட சிறிய குடும்பத்தை கணக்கிட்டு கச்சிதமாக கட்டப்பட்டு இருந்தது. சற்று பழைய வீடுதான், சமீபத்தில் தான் புதுப்பிக்கப்பட்டு வாசலில் வாழைமரம், மாவிலை தோரணம் என மீண்டும் ஒரு கிரகபிரவேசத்திற்கு தயாராகி இருந்தது .

கௌரி, அவள் பெயரில்தான் வீட்டை வாங்கி இருந்தான் கணவன் சங்கர் . அவர்களது பத்து வருட திருமண வாழ்கையில் , இரண்டு குழந்தைகளின் பிறப்பிற்கு பிறகு மகிழ்ச்சியான தருணம் இதுதான். இருக்காத பின்ன, நடுத்தர மக்களின் உச்சபச்ச வாழ்க்கை லட்சியமே சொந்தமாக ஒரு வீடு என்பதுதானே.சங்கருக்கு வருவாய் துறையில் ஓட்டுனர் வேலை , அளவான வருமானம். நண்பர் ஒருவரின் மூலம் பத்து நாட்களுக்கு முன்தான் இந்த வீடு விற்பனைக்கு வந்ததை பற்றி கேள்விபட்டு இருந்தான் . வாங்கலாமா என நீண்ட யோசனையில் இருந்தவனை ,கௌரியின் நச்சரிப்பு வாங்கவைத்து விட்டது .இருக்கும் கொஞ்ச சேமிப்பு , பேங்க் லோன் , கௌரியின் நகை , கொஞ்சம் வெளிகடன் என ஒருவழியாய் வீடு கைமாறிவிட்டது .

புது வீட்டிற்க்கு வந்து ஒருவாரம் ஓடி இருந்தது. வீடு எல்லோருக்கும் ஏதோ ஒருவகையில் பிடித்துவிட்டது . சங்கரின் ஆபீசும், குழந்தைகளின் பள்ளியும் வீட்டில் இருந்து ரொம்ப தூரமாய் இருந்தது மட்டுமே ஒரு சின்ன சிரமம் . கௌரியின் நாள் காலை நான்கு மணிக்கெல்லாம் விடிந்து விடும் . பாத்திரம் கழுவி, வீட்டை கூட்டி , டிப்பன் செய்து , லஞ்ச் பாக்ஸ் கட்டி, காப்பி போட்டு , மூவரையும் எழுப்பி , குழந்தைகளை குளிப்பாட்டி , டிப்பன் ஊட்டி , யூனிபார்ம் போட்டு மூவரையும் அனுப்பி வைக்கையில் மணி எட்டு ஆகிவிடும் . இதுவரை பார்த்த வேலை எல்லாம் அவளுக்கு சிரமமே இல்லை இனி அவர்கள் ஆறு மணிக்கு வீடு திரும்பும் வரை நேரத்தை தனிமையில் ஓட்டுவதுதான் சிரமம் . பழைய வீட்டிலாவது அக்கம் பக்கம் பேச்சு துணைக்கு ஆள் இருந்தது . புது வீட்டில் அந்த வாய்ப்பும் பறிக்கப்பட்டு இருந்தது .

அன்று இரவு அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் . "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என காலிங் பெல் சவுண்டு கௌரியின் தூக்கத்தை கலைத்தது . இந்த நேரத்தில் யாராக இருக்கும் என ஒரு நொடி யோசித்தவள், கண்களை கசக்கி எழுந்து மணியை பார்த்தாள் சரியாக ஒரு மணி . கணவனை எழுப்ப நினைத்தவள் , அவன் ஆழ்ந்து தூங்குவதை கலைக்க விரும்பாமல் மெதுவாக எழுந்து பதட்டத்துடன் வாசற்கதவு அருகில் சென்றாள் . ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு லைட்டை போட்டு கதவை திறந்தவளுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு . அங்கே யாருமே இல்லை , தூக்கத்தில் வந்த பிரமை என்பதை உறுதிபடுத்தி கொண்டவளாய் மீண்டும் படுக்கைக்கு சென்றுவிட்டாள் .

தூக்கம் முழுவதும் களைந்து விட்டது, படுக்கையில் புரண்டு எதையோ யோசித்துக்கொண்டு இருந்தவளை "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என தொடர்ச்சியாக இரண்டு நிமிடம் அடித்த பெல் சவுண்டு நிலைகுலைய வைத்துவிட்டது . "இவ்வளவு நேரம் பெல் அடித்தும் தூங்கி கொண்டு இருக்கிறாரே " என்ற கோபத்துடன் கணவனை வேகமாக உசுப்புகிறாள் . எழுந்தவனிடம் விசயத்தை கூற , அவன் அறை குறை தூக்கத்துடன் கதவை திறந்து பார்த்ததில் யாருமே இல்லை . கௌரியை சமாதானம் செய்து தூங்க வைக்க முயற்சித்து அவன் தூங்கிவிட்டான் . கௌரிக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை என்றாலும் அதற்க்கு பிறகு காலிங் பெல் சவுண்டு கேட்காததால் ஒரு நிம்மதி .

அடுத்த நாள் காலை, இரவு நடந்ததை சுத்தமாக மறந்து வழக்கம்போல் வேலையில் இறங்கி விட்டாள் . அவர்கள் அனைவரும் வெளிய சென்ற பிறகுதான் இரவு நடந்த நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமகமாக உறுத்த ஆரம்பித்தது . இதை பற்றியே நினைத்து கொண்டு இருந்தவள், அசதியில் தூங்கி விட்டாள் . "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என காலிங் பெல் சவுண்டு கேட்டு விழித்தவளுக்கு , உடம்பு முழுக்க நடுக்கம் . என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து நின்றவளுக்கு , ஜன்னல் வழியே "அம்மா போஸ்ட் " என்ற சத்தம் உயிரை கொடுத்தது . இன்று இதை பற்றி தெளிவாக கணவனிடம் பேசிவிட வேண்டும் என நினைத்து கொண்டாள் .

அன்று இரவு 11 மணிக்கு மேல்தான் சங்கர் வீட்டுக்கு வந்தான் , வந்தவன் மிக களைப்பாக இருந்ததால் சாப்பிடாமல் கூட தூங்கிவிட்டான் . அவளும் இந்த சூழ்நிலையில் எதுவும் பேச வேண்டாமென்று விட்டுவிட்டாள் . சரியாக ஒரு மணிக்கு "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என மீண்டும் பெல் சத்தம் , அவள் தூங்காமல் விழித்துகொண்டுதான் இருந்தாள் . கணவனை எழுப்ப எவ்வளவோ முயற்சித்தாள் , அவன் இன்று ஏலவே இல்லை . இரண்டு நிமிடங்களிற்கு பிறகு மீண்டும் "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்" சத்தம் , அன்று இரவு முழுவதும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை பெல் அடிக்கும் சத்தம் கேட்டுகொண்டே இருந்தது .

காலையில் கௌரிக்கு கடும் காய்ச்சல், உடல் தீயாக கொதித்தது . அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் . ஊரில் இருந்த கௌரியின் அம்மா மங்களத்துக்கு செய்தி அனுப்பப்பட்டது . மூன்று நாள் மருத்துவமனை வாசம் . கௌரிக்கு உடல் சற்று தேறியிருந்தது , நடந்ததையெல்லாம் அம்மாவிடம் சொல்லி கலங்கினாள் . இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் பில்லி சூனியத்தின் வேலையென்பது மங்களத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை . சங்கருக்கும் அதில் சிறிது உடன்பாடு இருந்தது. நான்காவது நாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள் .


அடுத்த ஒரு வாரம் மந்திரம் , பூஜை , வேள்வி , ஹோமம் என வீடே பரபரத்தது. வீட்டை சுற்றி நான்கு மூலையிலும் எலும்பிச்சைப்பழம் புதைத்து , வீட்டு கதவிலும் சுவரிலும் மந்திரதகடு அடித்து வேலி அமைத்தார் மலையாள மந்திரவாதி . இப்போதெல்லாம் கௌரிக்கு பெல் சத்தம் கேட்பது இல்லை . பத்து நாள் கழித்து எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்த்தியுடன் ஊருக்கு கிளம்பினாள் மங்களம் . பதினைந்து நாட்களுக்கு பிறகு நிம்மதியான தூக்கம் சங்கருக்கு .

இரவு சுமார் 3 மணி இருக்கும் சங்கரை ஆக்ரோஷமாக எழுப்பினாள் கௌரி . "ஏங்க , திரும்ப யாரோ பெல் அடிக்குறாங்க" என அழுது கொண்டே சொன்னாள் . சங்கர் இப்போது கௌரியை கொஞ்சம் பயத்துடன் தான் பார்த்தான் . கௌரி மருத்துவமனையில் இருந்த போதே பெல்லை கழற்றி பரணில் போட்டு விட்டான். மேலே பரணில் பார்த்தான் பெல் அங்கேய தான் கிடந்தது . அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . கௌரியின் திருப்திக்காக கதவை திறந்து பார்த்துவிட்டு வந்தான். "வெளிய யாரும் இல்ல . காலைல என்னானு பாப்போம் . எனக்கு தூக்கம் வரல. நான் வாசப்படில உக்கார்ந்து இருக்கேன். நீ தூங்கு " என சொல்லிவிட்டு வாசற்படியில் போய் உட்கார்ந்து கொண்டான் . இரவு முழுவதும் ஆழ்ந்த யோசனையில் இருந்தவன் கடைசியில் தீர்க்கமாக ஒரு முடிவிற்கு வந்திருந்தான் .

காலையில் முதல் வேலையாக கௌரியை அழைத்து கொண்டு அவன் ஆஃபீஸிற்கு அருகில் இருந்த மனநிலை மருத்துவரை சந்தித்தான் . பிரச்சனையை கேட்ட அவர் , சங்கரை வெளியே அனுப்பிவிட்டு கௌரியிடம் தனியாக ஒரு மணி நேரம் பேசினார் . இப்போது சங்கரை தனியாக அழைத்து பேச தொடங்கினார் . ஆம் , சங்கர் நினைத்ததை தான் அவரும் சொன்னார் "உங்க மனைவி மனச்சிதைவின் ஆரம்ப கட்டத்துல இருக்காங்க . தினமும் வீட்ல 10 மணி நேரம் தனிமையில இருக்கிறது அவுங்கள ரொம்ப பாதிச்சு இருக்கு . அக்கம் பக்கத்துலயும் பேச்சு தொணைக்கு கூட ஆள் இல்ல போல . இந்த தனிமை அவங்க ஆழ்மனசுல ஒருவித பயத்த உண்டு பண்ணி இருக்கு . அதுதான் இந்த மாதிரி பெல் அடிக்கிற சவுண்டு மாதிரி அவுங்க காதுக்கு மட்டும் கேட்டுட்டே இருக்கு . ஒரு மாசத்துக்கு மாத்திரை எழுதிதர்றேன் . ஆனா அவங்களுக்கு தேவையான உண்மையான மருந்து அவங்க தனிமையை உணராதபடி பாத்துகிறதுதான் ".

வாடைகைக்கு இருந்த பழைய வீட்டுக்கே குடி மாறி ஒரு மாதம் ஓடி இருந்தது. இந்த ஒரு மாதமாக கௌரிக்கு இரவில் பெல் சவுண்டு கேட்பது நின்று இருந்தது . "புது வீடு குழந்தைங்க ஸ்கூலுக்கு ரொம்ப தூரமா இருக்கு " என எல்லோரிடமும் காரணம் சொல்லப்பட்டு இருந்தது . 30 ஆயிரம் ரூபாய் கை நஷ்டத்தில் தான் அந்த வீட்டை தன்னுடன் வேலை பார்க்கும் குமாருக்கு விற்று இருந்தான் . பணம் போனாலும் கௌரி குணம் ஆகிவிட்ட திருப்தி அவனுக்கு . ஒரு மாலை நேரம் ஆபீஸ் கேன்டீனில் குமாருடன் டி குடித்து கொண்டிருந்த போது "வீடு சூப்பரா இருக்கு சங்கர் . என் வொய்ப்க்கு ரொம்ப புடுச்சுருச்சு . ரொம்ப ஆள் நடமாட்டம் இல்லாத இடம் பாருங்க , அதான் எவனோ ஒருத்தன் அப்பப்போ பெல் அடிக்கிறானு கம்பளைண்ட் பண்ராங்க . அத மட்டும் கொஞ்சம் என்னானு பாக்கணும் " என்று குமார் சொல்லி கொண்டு இருந்த போதே சங்கருக்கு உடல் முழுக்க வேர்க்க ஆரம்பித்து இருந்தது .

எழுதியவர் : சோம்பேறி (19-Apr-17, 1:00 am)
சேர்த்தது : சோம்பேறி
Tanglish : puthu veedu
பார்வை : 713

மேலே