இலவசம் தந்தவர்கள்
=====================
நாங்கள் நீரின்றி பயிர்வளர்க்க
சிரமப்படுவதிலிருந்து மீள
நீரிறைக்கும் இயந்திரங்கள்
இலவசமாய் தந்தார்கள்.
எங்கள் குழந்தைகள்
கார்டூன் பார்ப்பதற்கும்
நாங்கள் நாட்டு நடப்புகளை
தெரிந்து கொள்வதற்கும்
எங்கள் பெண்கள் ஓய்வுநேரத்தில்
தொடர்கள் பார்த்து
தொலைந்துபோவதற்குமென
தொலைக்காட்சி பெட்டி
இலவசமாய் தந்தார்கள்.
அம்மி அரைத்து இடுப்பொடிந்த
எங்கள் குலப்பெண்கள் நலன்கருதி
மிக்சியும் கிரைண்டரும் தந்தவர்கள்
நவீன சிகையலங்கார இயந்திரங்ககும்
இலவசமாய்த் தந்தார்கள்
பேன்பார்க்கும் இயந்திரம்
கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதையும்
தந்திருப்பார்கள்.
எங்கள் கிடுகுக் கூரைகிழித்து
உள்ளிறங்கும் உஸ்ணத்தை தவிர்த்து
கோடைகாலங்களில் ஆசுவாசத்தோடு
உறங்கிக் கொள்வதற்காக மின்விசிறி
இலவசமாய் தந்தார்கள்.
ஆற்றங்கரையில்
அடித்துத் துவைத்து கும்மி பிழிந்து
அல்லல்படும் எம் மாதர்கள்
அவலம் தீர்க்க துணிதுவைக்கும்
இயந்திரமும் அதற்கு இலவசமாய்
ஸ்திரிகை பெட்டிகளும் கூட
இலவசமாய் தந்தார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
உங்கள் வாழ்வில் ஒளியேற்றுவோமென
மேடையில் ஆவேசித்தவர்கள்
இருண்டுகிடக்கும் எங்கள் ஊருக்கு
வெளிச்சம் வருவதற்காக இல்லாவிட்டாலும்
அவர்கள் கொடுத்த இலவசங்கள்
இயங்கக்கூடியதுதானா என பரிசோதிக்க
மின்சாரம் வழங்க மறந்துதான் போனார்கள் .
*மெய்யன் நடராஜ்