உலகப் புத்தக தினம்’-----பள்ளிக்கல்வித் துறையின் புத்துயிர்ப்பை வரவேற்போம்

‘உலகப் புத்தக தினம்’--
தமிழகமெங்கும் புத்தகக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படும் சூழலில் பள்ளிக்கல்வித் துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சில ஆரோக்கியமான சலனங்கள் நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றன.

இந்த அரசும் இதற்கு முந்தைய அரசும் செயல்படாத அரசுகள் என்ற பெயர் வாங்கியிருக்கும் சூழலில், மற்ற துறைகளும் அப்படியே பெயர் வாங்கியிருக்கும் சூழலில் தற்போது பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையனும் பள்ளிக்கல்வித் துறைச் செயலராக டி.உதயச்சந்திரனும் பொறுப்பேற்ற பிறகு இந்த மாற்றங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக்கிடந்த நூலகத் துறையும் தற்போது உயிர்பெற்றிருப்பதற்கான சமிக்ஞைகள் காணக் கிடைக்கின்றன. சமீபத்தில் பள்ளிக் கல்விச் செயலாளர் டி.உதயச் சந்திரனின் முன்னெடுப்பில், தமிழக அரசு நூலகங்கள் சற்றே உற்சாகத்தோடு விழித்துக்கொண்டுள்ளன. சமீபத்தில் மாவட்ட நூலக அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்ற டி. உதயச் சந்திரன், புத்தக வாசிப்பின் அவசியத்தையும், அதற்கு நூலகங்கள் எவ்வகையில் துணை நிற்க வேண்டுமென்பது பற்றியும் விளக்கிக் கூறியிருக்கிறார். மேலும், ‘உலகப் புத்தக தின’த்தைத் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மாவட்ட மற்றும் கிளை நூலகங்களிலும் சிறப்பாகக் கொண்டாடவும் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து அன்றைய தினம் எழுத்தாளர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டங்களை நடத்துவதற்கு அனைத்து நூலகங்களும் தயாராகிவிட்டன. சில நூலகங்களில் சிறப்பு புத்தகக் கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன.

மேலும், ‘இல்லந்தோறும் நூலகம்’ எனும் தலைப்பில் வீடுகளில் சிறப்பான முறையில் நூலகங்களை வைத்திருப்போரையும் சிறப்பிப்பதற்குச் சில மாவட்ட நூலகங்கள் திட்டமிட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பின் அவசியத்தைக் கொண்டுசெல்லும் வகையிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. உள்ளூர்ப் படைப்பாளி களையும் கெளரவிக்கச் சில மாவட்டங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றோடு, ‘உலகப் புத்தக தின’த்தை முன்னிட்டு, சென்னையில் தமிழக அரசு நூலகங்களோடு இணைந்து ‘இந்தியப் படைப்பாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்’ 25 இடங்களில் புத்தகக் கண்காட்சிகளைக் கடந்த வியாழன் அன்று தொடங்கியிருக்கிறது. இந்தப் புத்தகக் காண்காட்சிகள் மொத்தம் பத்து நாட்கள் நடைபெறவிருக்கின்றன.

இவையெல்லாமே பள்ளிக்கல்வித் துறையும் நூலகத் துறையும் புத்துயிரைப் பெற்றிருப்பதற்கான அடையாளங்கள். இது ஒரு நல்ல தொடக்கம். எனினும், மாணவர்கள், ஆசிரியர்களிடம் புத்தக வாசிப்பை வளர்ப்பதற்கான விரிவான செயல்திட்டம், நூலக ஆணைகளுக்கு உயிர்கொடுத்துப் புதிய, தரமான புத்தகங்களை நூலகங்களில் இடம்பெறச் செய்வது என்று செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் அமைச்சர் செங்கோட்டையனும் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் டி.உதயச்சந்திரனும் கவனத்தில் கொண்டு செயல்படுத்துவார்கள் என்று நம்புவோம். தற்போதைய ஆரோக்கியமான சலனங்களுக்காக அமைச்சர் செங்கோட்டையனுக்கும் டி.உதயச்சந்திரனுக்கும் முதலில் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!

எழுதியவர் : (23-Apr-17, 4:25 am)
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே