ஏப்ரல் 23 உலக புத்தகத் திருவிழா வாசிப்புக் கொண்டாட்டம்

உலகெங்கும் உலகப் புத்தக தினம்--
தமிழகத்தில் ஏற்கெனவே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. சென்னையில் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு நூலகங்களோடு இணைந்து இந்தியப் படைப்பாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் கடந்த வியாழன் அன்று 25 இடங்களில் புத்தகக் காட்சிகளைத் தொடங்கியிருக்கிறது. ஏப்ரல் 30 வரை இந்தப் புத்தகக் காட்சிகள் நடைபெறவிருக்கின்றன. இந்தப் புத்தகக் காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் தரப்படுகிறது.

பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச ஆகிய மூன்று அமைப்புகளும் தமிழகமெங்கும் சேர்ந்து நடத்தும் ‘ஆயிரம் புத்தகக் காட்சிகள்’ ஏற்கெனவே களைகட்ட ஆரம்பித்துவிட்டன. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சிகள் மே 5-ம் தேதி வரை நடைபெறுகின்றன. 50% சிறப்புத் தள்ளுபடி, படித்து முடித்த புத்தகங்களின் பரிமாற்றம், கலந்துரையாடல், புத்தகப் பேரணி, சிறுவர்கள் பங்கேற்பு, கிராமத்து வாசகர்கள் பங்கேற்பு என்று இந்தப் புத்தகக் காட்சிகள் அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன.

சென்னை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் நேற்று தொடங்கியது. வரும் 25-ம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. சுமார் 50 பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்பம்சமாக 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தப் புத்தகக் காட்சியில் ‘புத்தகர் விருது’ எஸ்.எஸ்.ஆர். லிங்கம், ரெங்கையா முருகன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. கோவை விஜயா பதிப்பகம் உலகப் புத்தக தினத்தை விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது. வண்ணநிலவனுக்கு ஜெயகாந்தன் விருதும், எஸ். செந்தில்குமாருக்கு கவிஞர் மீரா விருதும், என். ராமுக்குப் புதுமைப்பித்தன் விருதும், நூலகர் என்.பி. ரவிக்கு சக்தி வை. கோவிந்தன் விருதும் வழங்கப்படுகிறது. கூடவே, சாகித்ய அகாடமி விருது பெற்ற வண்ணதாசனுக்குப் பாராட்டு விழாவும் நடைபெறுகிறது.

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் உலகப் புத்தக தினம் சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது. எழுத்தாளர் தேவிபாரதி, த. ஸ்டாலின் குணசேகரன், பேரா. செ.சு. பழனிசாமி, எஸ். சிவானந்தம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார்கள். இன்னும் தமிழகமெங்கும் வெவ்வேறு ஊர்களில் பல்வேறு அமைப்புகளும் உலகப் புத்தக தினத்தைக் கொண்டாடுகிறார்கள், கொண்டாடவிருக்கிறார்கள். இதுவரையிலான கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

எழுதியவர் : (23-Apr-17, 4:30 am)
பார்வை : 80

மேலே