சொல்லும் பொருளும் 4 - உடன்போக்கும், புறம்போக்கும்

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு உடன்போக்கு, புறம்போக்கு என்ற இரண்டு சொற்களை இங்கு பார்ப்போம்.

உடன்போக்கு

The going away of an unmarried young woman with her lover to his own place without the knowledge of her parents; பெற்றோரறியாமல் தலைவி தலைவனுடன் செல்கை. (நம்பியகப். 181)

உடன்போக்கு என்பது பண்டைய தமிழகத்தில் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறர்க்குச் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுவது என்று பொருள்படும். தலைவி தலைவனுடன் செல்வதால் உடன் போக்கு என்று கூறப்படுகிறது.

உடன்போக்கு என்பதற்குக் களவுக் காதலர் கற்பு வாழ்க்கை மேற்கொள்ள ஊரை விட்டுச் செல்வது என்று பொருள் கொள்ளலாம்.

காதல் பண்பாடு

காதல் என்பது பாலுணர்ச்சியால் பருவமுற்ற ஆணும் பெண்ணும் ஒருவர்பால் ஒருவர் கொள்ளும் ஈடுபாடு. மற்றவர்கள் அறியாதவாறு காதலர்கள் தங்கள் பார்வையால் அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள். காதல் என்பது உயிரோடு பிணைந்தது. காதல் கொண்ட உள்ளம் மாறுவதோ, விட்டுக் கொடுப்பதோ இல்லை. உலகெங்கினும் எல்லாப் பண்பாடுகளிலும் காதல் உறுதியானதாகவும் தெய்வீகமானதாகவும் இருக்கிறது.

தமிழர் பண்பாட்டில் காதலுக்குரிய சிறப்பிடம்தான் யாது? போன பிறவியிலே கணவன் மனைவியாக இருந்தவர்கள்தாம் இந்தப் பிறவியிலும் கணவன் மனைவி ஆகிறார்கள்; இனிவரும் பிறவிகளிலும் இவர்களே கணவன் மனைவியராக இருப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழர் பண்பாட்டில் உள்ளது.

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என்கணவனை
யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே
(குறுந்தொகை : 49)

என்று குறுந்தொகை கூறுகிறது. இந்தப் பிறவி மாறி அடுத்த பிறவியிலும் நீதான் என் கணவன் நான்தான் உன் மனைவி என்பதுதான் இதன்பொருள். நீயாகியர் என் கணவனை என்றால் நீயே என் கணவன் ஆவாய் என்பது பொருள். யானாகியர் நின்நெஞ்சு நேர்பவள் என்றால் யானே உன் நெஞ்சில் இருப்பவள் என்பது பொருள்.

களவும் கற்பும்

திருமணத்திற்கு முன் ஒருவனும் ஒருத்தியும் பிறர் அறியாதவாறு காதல் கொள்வர். தாயும் பிறரும் அறியாதவாறு சந்தித்துக் கொள்வர். இதனைத் தமிழர் பண்பாடு களவியல் என்று போற்றுகின்றது.

தலைவியின் தோழி களவுக் காதலுக்குத் துணை செய்வாள். மெல்ல மெல்லக் களவுக் காதலை ஊரார் அறிவர்; அறிந்து மூக்கில் விரல்வைத்து இரகசியமாகப் பேசுவர். ஊரார் இவ்வாறு மறைமொழியாகப் பேசும் நிலை அம்பல் எனப்படும்.

பின்னர் எல்லாரும் அறியுமாறு தலைமக்களின் காதலைப் பேசுவர். இதனை அலர் தூற்றுதல் என்பர்.

இந்நிலையில் தோழியும் தலைவியும் தலைவனைத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யத் தூண்டுவர். தலைவியின் காதல் அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டிலேயே வைத்துப் பாதுகாப்பர். பெற்றோர் முதலில் களவுக்காதலை அனுமதிக்க மாட்டார்கள். பின்பு தலைமக்களின் உள்ள உறுதி அறிந்து உடன்படுவர்.

பெற்றோர் உடன்படாத நிலையில் தலைவனும் தலைவியும் யாரும் அறியாதவாறு வேற்றூர் செல்வர். இதற்கு உடன்போக்கு எனப் பெயர்.

புறம்போக்கு

1. Land exempt from assessment, either because it is set aside for communal purposes or because it is uncultivable; சமுதாய நன்மை, சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம் விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம்

2. Public woman; பொதுமகள்

புறம்போக்குதல்

To remove, take away; அகற்றுதல். பலகை புறம்போக்க (பெரியபு. ஏனாதி. 37)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Apr-17, 11:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 225

சிறந்த கட்டுரைகள்

மேலே