வழி மீது விழி வைத்துப் பார்த்திருக்கிறேன்

உன்னை முதன் முதலில்
நான் கண்டேன்
இனம் புரியாத ஓர் உணர்வு
என்னைப் பற்றிக் கொண்டது

என் ஆடை முகம் நகம் கேசம்
எல்லாவற்றிலும் பலமுறை
இப்போது மீழ் பார்வை செய்கிறேன்
நான் வெளியே செல்லும் முன்பு
முகக் கண்ணாடியில்
வழமையாய் பார்த்த என் முகத்தில்
எப்போதும் காணாததோர் தேஜஸ்

உனக்காக நீ வரும் பாதையில்
பல மணி நேரம் தவம் கிடக்கிறேன்
எனக்கு நேரம் போவதே தெரிவதில்லை

உன்னைக் கண்டவுடன்
எத்தனை ரசாயன மாற்றம்
என்னுடலில் எழுகின்றது தெரியுமா ....

உன்காலடித் தடங்களில்
நான் கால்வைத்து
நடக்கிறேன் நீயறியாமல்
இருவரும் ஓரடியாய் நகர்வது
போன்றதோர் உணர்வு
என்னில் மேலெழ

காற்றில் நழுவ விட்ட உன் கைக்குட்டையை
எடுத்து பொக்கிஷமாய்க் காக்கிறேன்
என் தலையணையோடு அணைத்து
அதனை முத்தமிடும் போதெல்லாம்
நீ என்னோடு இருப்பது
போன்றதோர் சுகானுபவம்

உன்னைக் கண்டால்
பல்லாயிரம் காதல் கதைகளை
என் கண்கள் உன்னிடம் சொல்கின்றன
நீயோ அறியாதது போல் செல்கிறாய்

தைரியம் வாரா என் வார்த்தைகள்
மௌன சொரூபியாய்
உன்கண் முன்னால் நிற்கின்றன
என் சுயதத்தை உன்னிடம்
தெளிவு படுத்த முடியாமல்
பலமுறை நான் திணறுகிறேன்

எத்தனை முறை நான்
நிற்பதைக் காண்கிறாய்
என் கண்கள் விடும் காதல் தூதை
இன்னும் நீ அறிய வில்லையா ?
என் இதயத்தின் ஓசை இன்னும்
உன் காது வரை எட்ட வில்லையா ?

உன் உதடுகள் பல முறை அசைவதை
நான் பார்த்து இருக்கிறேன்
எனக்காக ஒரு முறையாவது
அவை அசையக் கூடாதா
பரவாயில்லை

ஒரு புன்முறுவலாவது செய்
அது எனக்குப் போதும்
காத்திருக்கிறேன் இன்றும் வளமை போல்
நீ வரும் வழி மீது விழி வைத்து

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (23-Apr-17, 12:42 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 377

மேலே