வேல் வேல் வேல்

ஆறுபடை வீடுடைய குருபரனின் கையில்
***அலங்கார மாயொளிரும் அழகான செவ்வேல் !
ஏறுமயில் வாகனனின்‌ மார்பொடுற வாடி
***எழிலார்ந்த குருகுகொடி யுடன்தருமே காட்சி !
கூறுமடி யார்வினைகள் வேரறுத்துக் காக்கும்
***குன்றிலுறை குமரனுக்கே கம்பீரம் கொடுக்கும் !
நீறுபூசி வழிபாடு செய்வோரின் வாழ்வில்
***நிழலாகத் தொடர்ந்துவந்து துணையாகும் வேலே !

வேலாயு தத்திற்கு மேலெதுவு மில்லை
***வெற்றிகளைக் குவித்துவரும் வீரத்தின் சின்னம் !
சூலாயு தம்கொண்ட வுமையாளின் கையால்
***சூரபத்ம னையழிக்கப் பெற்றதிந்த வேலே !
பாலாலே அபிடேகம் செய்வோர்தம் வாழ்வை
***பரிசுத்த மாக்கியொளி கூட்டிடுவான் வேலன் !
காலனவ னணுகாமல் துணைநிற்கும் செவ்வேல்
***கந்தவேளின் கருணையைப்போல் மின்னிடுமே முத்தாய் !

முத்தமிழால் வைதாரை யும்வாழ வைக்கும்
***முருகவேளின் ஆயுதமாம் வேலுக்கீ டில்லை !
முத்திக்கும் வழிகோலும் முன்வினையைத் தீர்க்கும்
***முப்போதும் முன்னின்றே ஐந்தொழிலும் செய்யும் !
சத்தியத்திற் குட்பட்டுப் போரிட்டு வெல்லும்
***சங்கடங்கள் யாவையுமே சரிந்தோடச் செய்யும் !
சித்தருடன் ஞானியரும் யோகியரும் வாழ்த்தும்
***சிறப்புகளைப் பெற்றிருக்கும் வேலைநிதம் போற்று !

போற்றிநிதம் வழிபட்டால் பொல்லாங்கு போக்கும்
***பூத்தூவி வணங்கிடிலோ புதுத்தெளிவு பிறக்கும் !
ஊற்றெடுக்கும் அன்பாலே உளமுருகி வேண்ட
***ஊழ்வினையை வேரோடு களைந்தெறியும் வல்வேல் !
கூற்றுவனும் அஞ்சிடுவான் அருகினிலே வந்து
***கொய்திடவே நல்லுயிரைத் துணையாய்வேல் இருக்க !
ஏற்றமிகு நல்வாழ்வு இவ்வுலகில் கிட்டும்
***ஈடில்லா வீடுபேற்றை யளிப்பதுவும் வேலே !

வேல்முகமோ அறிவைப்போல் சுடரிலையாய்ப் படர்ந்தும்
***வேலினடி அறிவைப்போல் ஆழமாக நீண்டும்
வேல்நுனியோ கூர்மையாயும் அமைந்துள்ள தாகும்
***வேலைவழி படுவோர்தம் வேதனையுந் தீரும் !
வேலமைத்து வணங்குதலே வேற்கோட்ட மாகும்
***வேலுக்கே அபிடேகம் பழமுதிர்ச்சோ லையிலே !
வேலைநிதம் வணங்குதலே வேலையெனக் கொண்டால்
***வேலவனும் மிகமகிழ்ந்து வரமருள்வான் நன்றே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Apr-17, 3:09 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 425

மேலே