மெல்ல விரியும் சிறகுகள் “ கவிதைத் தொகுப்பு ----சுப்ரா வே சுப்ரமணியன்

மெல்ல விரியும் சிறகுகள் “ – வ . பரிமளாதேவி [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
---------------------------------------------------------------------------------------------------------------------------
மரபுக் கவிதைகளை கவிதைகளின் ஆதியாகவும் , நவீன கவிதைகளை தற்போதைக்கு அந்தமாகவும் வைத்துக் கொள்ளலாம் . ஒன்றைப் புரிந்து கொள்ள , இரசிக்க மொழியின் இலக்கண அறிவும் , புழக்கத்தில் இல்லாத சொற்களின் பொருளும் தெரிந்திருக்க வேண்டியதுவும் அவசியம் . மற்றொன்றைப் புரிந்து கொள்ள படைத்தவனின் பார்வையில் இருந்து பார்ப்பதோடு அல்லாமல் வாசிப்பவன் அதைக் கட்டுடைத்து அவன் பார்வையிலும் பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாது .
இந்த இரு நிலைகளுக்கும் நடுவில் உள்ள பரந்த வெளியில் வாசிப்பவன் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் , அதே நேரத்தில் வாசிப்பவன் தன் பார்வையில் பார்த்து புதிய கோணத்தில் கவிதையை இரசிக்கவும் இயலும் வகையில் , சொற்களை அழகாகக் கோர்த்து படைக்கப் பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பே கவிஞர் வ . பரிமளாதேவியின் ” மெல்ல விரியும் சிறகுகள் . “
எளிமையான சொற்பிரயோகங்களோடு , ஒலி நயமும் இணைந்து வாசிக்கையில் நயம் கூட்டும் பல கவிதைகள் தொகுப்பில் உள்ளன . கருப் பொருளாக எடுத்துக் கொண்டவை சமூகம் சார்ந்த சிந்தனைகளாகவும் , சில சமயங்களில் நமக்குப் பழகிய சில விஷயங்களை சற்று வேறுபட்ட கோணத்தில் காண வைப்பதாகவும் அமைந்துள்ளது கவிதைகளுக்கு கூடுதல் அழகைத் தருகின்றன .
ஒரு மரத்தைச் சுற்றி நிகழ்ந்து முடிந்த பழைய அனுபவங்களைக் கிளறி விட்டபின் இப்படி முடிக்கிறார் அந்தக் கவிதையை …..
இத்தனையும்
எனக்குக் கீழ்தான் என்றது
ஐம்பதைக் கடந்த அரசமரம் .

பாரதியைப் பற்றிப் பாடாத கவிஞன் இல்லைதான் . ஆனாலும் தன் கவிதையில் பாரதியை முற்றிலும் புதிய பார்வையில் வர்ணிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது .
குயில் குருவி நாய் பூனையால்
நன்மொழி சொல்லியதால்
செல்லப் பிராணியானவன் .
ஓர் இருப்பூர்திப் பயணத்தில் காணும் காட்சிகளை வரிசைப் படுத்திய பின் இப்படி முடிக்கிறார் ஒரு கவிதையை .
இவ்வளவும்
இணையான தண்டவாளத்தில்
தாளம் தப்பாமல்
தபேலா வாசித்துக் கொண்டிருந்தது
*****************************************************************
பூக்கள்தானே என்று எண்ணாதீர்
மிளகாய் / பூவின் மாற்றம்தானே – எனத் தொடங்கும் கவிதை ,
இன்றும் / பெண்கள்
கனல் மணக்கும் பூக்களே . – என அனல் பறக்க முடிகிறது .
இயற்கை வளங்களைச் சூறையாடும் சமூக விரோதிகளைச் சாடி இறுதியில் வார்த்தைகளால் எரிக்கிறார் -
அண்டத்தையே திருடிவிட்டாய் …
திருடமுடியா நெருப்பையும்
திருடி விடுவாயா ?
***************************************************
மறைக்கவும் / மறையவும் / மனிதனல்ல நான் / நிலா . – என்ற வரிகள் பல பரிமாணங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது .
யதார்த்த வாழ்வில் காணும் துயரமான முரணை சற்று எள்ளலாக சுட்டிக் காட்டிச் செல்கின்றது ஒரு கவிதை .
வட்டத் தொந்திக்காரன் / முட்டத் தின்றதால்
குனிய முடியவில்லை
பட்டினியால் விளைந்த / ஒட்டிய வயிற்றுக்காரன்
கூனிக் குறுகியதால் / நிமிர முடியவில்லை .
வாழ்க்கைக்கும் , கவிதைக்குமான பிரிக்க முடியாத பந்தத்தைச் சொல்லும் வரிகள் -
கவிதைகள் பிறப்பது புதுப்புது
வார்த்தைகளால் !
வாழ்க்கை நடப்பது புதுப்புதுக்
கவலைகளால் .
பாரதியை மாற்றுப் பார்வையில் பார்த்தது போலவே மரங்களை வேறு ஒரு மாறுபட்ட பார்வையில் சொல்லும் வரிகள் -
சாலை ஓரச்
சன்னிதானங்கள்
இலைகளோடு கூடிய
பசுமைக் கோபுரங்கள் .
******************************************************
அதிகாலை ஆனந்தம்
அனுதினச் சுற்றுலா
நடைப்பயிற்சி . – இந்த உருவகத்தில் மயங்கியோ என்னவோ இந்த வரிகள் இரு முறை இடம் பெற்று விட்டன தொகுப்பில் .
இந்த முதல் கவிதைத் தொகுப்புக்கு கிடைக்கும் எதிர்வினைகள் நிச்சயம் மேலும் , மேலும் கனமான வரிகள் அடங்கிய நிறையத் தொகுப்புகளை அவரிடம் இருந்து வெளிப்பட வழி வகுக்கும் .
” மெல்ல விரியும் சிறகுகள் “ [ கவிதைத் தொகுப்பு ]
ஆசிரியர் – – வ . பரிமளாதேவி .
வெளியீடு – ஓவியா பதிப்பகம் , வத்தலக்குண்டு .
விலை – ரூ . 90 /
நூல் பெற – 96296 52652 , 99761 26384
-----------------------------------------------------------------------------------------




.

எழுதியவர் : (26-Apr-17, 2:41 pm)
பார்வை : 203

சிறந்த கட்டுரைகள்

மேலே