இழிவு

=========
மொட்டவிழும் முன்னரதை முள்ளாலே கீறி
=மண்மேலே களைவதுவோ முற்றிலுமே இழிவு
கட்டாயம் தருவதாகக் கைமாற்றுப் பெற்று
=காரணங்கள் பலசொல்லி கைகழுவல் இழிவு
கட்டாயம் வருவேனெனக் காத்திருக்க வைத்து
=கழுத்தறுத்து விடுவதுவோ கனவான்கள் இழிவு
மட்டமென அடுத்தவரை மனம்போக்கில் திட்டி
=மார்தட்டிக் கொள்வதுவும் மனிதர்களில் இழிவு

பதவிக்கு வருவதற்கு பலபொய்கள் சொல்லி
=பச்சோந்தித் தனமெடுத்து பாசாங்கு செய்வோர்
உதவிக்கு வாசல்வரும் ஊர்கண்டு விட்டால்
=உள்ளிருந்தே இல்லையெனல் உலகிலுள்ள இழிவு.
விதவைக்கு வாழ்வென்று வீராப்பாய் பேசி
=வீணர்கள் சகுனமென விழிகாணல் இழிவு.
முதியோர்கள் இல்லத்தில் மாதாவை விட்டு
=மனைவியுடன் இல்லறத்தில் மகிழ்வதுவும் இழிவு.

விரலோடு நகமாக விளையாண்ட நட்பு
=விரல்தாண்டும் நகமாக விலகுவதும் இழிவு
பரத்தைக்கு கண்மூடி பணமள்ளிக் கொடுத்து
=பட்டினிகள் பரிதவிக்க விடுவதுவும் இழிவு
வரம்கேட்டுத் தவமிருந்து வஞ்சியரை மயக்கி
=வரவழைத்து வசீகரித்து வஞ்சித்தல் இழிவு
பரதேசம் சென்றுழைத்து பதியீட்டும் பணத்தைப்
=பத்தினியாள் கைவாங்கி பாழ்படுத்தல் இழிவு
****
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Apr-17, 2:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 270

மேலே