வேதனையில் ஒரு விவசாயி

(வளர்ச்சி பணிகளுக்கு தன் விவசாய நிலத்தை பறிகொடுத்த ஒரு விவசாயியின் மனதை சொல்லும் சிறு முயற்சி..)

வெள்ளெனவே விழித்திருந்து விடியுமுன்னே ஏர்பூட்டி
வானம்பார்த்து விதைவிதைத்து வேண்டாக் களையும் தானெடுத்து
விரல்தேய நீர்பாய்ச்சி விளைவித்தான் நெற்பயிரை -இன்னுமொரு
வாரத்தில் கதிரடித்தால் வருடத்திற்கு உணவுண்டாம்!
வயல்வெளி நோக்கியொரு விவசாயி கனவுகண்டான்..!!

வெளிர்பாலின் நிறம்கொண்ட வாகனத்தில் வந்தார்சிலர்
வந்தாரை வரவேற்று விருந்தொன்றும் தான்படைத்தான்
விசப்பாம்பு தீண்டிடினும் வேதனைக் குறைவன்றோ!
விருந்துண்டோர் உரைத்த செய்தி உணர்த்திய தவனுக்கு!!

வேறுதொழிற் சாலைக்கிந்த ஊரின்நிலம் வேண்டுவதால்
வேறிடம் தான்நோக்கி இவ்வூர்மக்கள் நகர வேண்டும்
வேம்பினிலே கம்பெடுத்து விளைநிலம் உழுதவனும்
விரும்பினால் நிற்கலாம் கம்பெடுத்து வாயிலில்!

வளர்ந்திடும் நாடிதனால் வேகமாய் என்றுரைத்தீர்!
வேலையில்லா பலருக்கு வேலைகளும் தருவதென்றீர்!
வேலைதர இவ்வூரின் விவசாய நிலம் கொடுத்தீர்!
வயிற்று பசிக்கு நெல்விளைய வேறிடம் பார்த்தீரோ?
வேதனையில் கேட்கின்றான் விவசாயி, விடையிருந்தால் கூறுங்கள் !!

எழுதியவர் : கார்த்திக் (27-Apr-17, 3:16 am)
சேர்த்தது : Karthicksamy90
பார்வை : 183

மேலே