கொட்டடா பறை

எட்டு திக்கும் நன்மை எட்டக் கொட்டடா பறை - எங்கள்
ஏழை மக்கள் வாழ்வுக் காகக் கொட்டடா பறை !
முட்டு கின்ற தீமை மாயக் கொட்டடா பறை - எங்கும்
முந்து கின்ற நெஞ்சி னோடு கொட்டடா பறை
வெட்டுக் கிள்ளைக் கூட்ட மல்ல கொட்டடா பறை - நாங்கள்
வேங்கைக் கூட்டம் வெல்வ மென்று கொட்டடா பறை
தட்டு கின்ற ஒலியி டிக்கக் கொட்டடா பறை - சூழும்
தடையு டைக்க மடைதி றக்கக் கொட்டடா பறை !

உரிமை வாழ்க வாழ்க வென்று கொட்டடா பறை - எங்கள்
உணர்ச்சி யென்றும் வாழ்க வென்று கொட்டடா பறை
அரிய ஆண்மை வாழ்க வென்று கொட்டடா பறை - நெஞ்சில்
அன்பு மட்டும் வாழ்க வென்று கொட்டடா பறை
பரிதி யோடு சுற்றி வந்து கொட்டடா பறை - தீய
பண்பு யாவும் தீர்ந்த தென்று கொட்டடா பறை !
மரண மென்ன ? அச்ச மில்லை ! கொட்டடா பறை - வாழ்வில்
மான மொன்று மட்டு மென்று கொட்டடா பறை !

நமையெ திர்க்க வந்த வர்கள் ஓட வேண்டுமே - தம்பி
நல்ல மக்கள் பகைம றந்து கூட வேண்டுமே
உமைய ளித்த கவிதை நெஞ்சம் வாழ வேண்டுமே - வீர
உரக்க மெங்கும் கேட்கத் தீமை வீழ வேண்டுமே !
தமிழ ரென்ற உயிர்மு ழக்கம் கேட்க வேண்டுமே - என்றும்
தானு ணர்ந்த அறிவி னைவி ரிக்க வேண்டுமே
அமைக விந்த மாற்ற மென்று கொட்டடா பறை - தம்பி
அனைவ ருக்கும் யாவும் சேரக் கொட்டடா பறை !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (27-Apr-17, 9:06 am)
பார்வை : 85

மேலே