தமிழ் எழுத்துலகில் பறந்த மணிக்கொடி

ஏப்ரல் 25, புதுமைப்பித்தன் பிறந்த நாள்.

தமிழ் சிறுகதைகளின் 'பிதாமகன்' என்ற பெருமை மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்கு உண்டு. தன் குடும்பம் சார்ந்த உறவுகளை விட, எழுத்து மற்றும் சமூகத்தை அதிகமாக நேசித்தவர்.

தமிழ் எழுத்தை உலகத்தரம் என்ற புகழேணியில் அமர்த்தி தமிழுக்கு தனி மரியாதையையும், அந்தஸ்தையும் உருவாக்கி தர தன்னையே அர்ப்பணித்தவர்.

திருவள்ளுவர், பாரதியார், ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற உலகளவில் தமிழ் மொழி இலக்கியத்திற்கு நல்லதோர் அடையாளத்தை உருவாக்கி தந்த விரல் விட்டு எண்ணி விடக்கூடிய மிகச்சிலரில் புதுமைப்பித்தன் முக்கியமானவர்.

தமிழ் சிறுகதைகளின் பெரிய ஆளுமையாக இருந்தும், தன்னை வணிக நோக்கத்திற்கு உட்படுத்திகொள்ளாமல் இறுதி வரை வறுமையில் வாடி தன் இன்னுயிரை மாய்த்த மகத்தான எழுத்தாளர்.

'மக்களுக்கான புரட்சி எழுத்தாளன்' என்ற என்னை பற்றிய கணிப்புக்கு இணையாக எனக்கு எத்தனை விருதுகள் வழங்கினாலும் அவையெல்லாம் இக்கணிப்புக்கு ஈடாகாது என பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.

தஞ்சை உட்பட பிற வட்டார பேச்சு வழக்குத் தமிழில் கதைகள் எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமை புதுமைப்பித்தனுக்கு உண்டு. இவரது கதைமாந்தர்கள், பெரும்பாலும் நெல்லை தமிழில் பேசுபவர்களாக இருந்தனர். கதைக்களங்கள் என பார்த்தால் பெரும்பாலும் அவர் வாழ்ந்த திருநெல்வேலி, சென்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன.

கதைகளின் நடையில் இயல்பான பேச்சுத் தமிழுடன், செந்தமிழும் கலந்திருப்பது, மற்றவர்களின் கதை நடையிலிருந்து இவரது கதைகளை வேறுபடுத்தி காட்டுவதாக இருந்தது.

புதுமைப்பித்தனின் பன்முக திறமைகளில் மொழி பெயர்ப்பும் ஒன்று. சர்வதேச எழுத்தாளர்களின் உலக தரமிக்க பிறமொழி சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு வாசிக்க தந்திருக்கிறார்.

புதுமைப்பித்தன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் இரண்டே வயதான மகள் தினகரியை இடுப்பில் சுமந்த படி மனைவி கமலா, 'எழுத்து எழுத்துன்னு வாழ்ந்து தமிழுக்கு புகழ் சேர்த்தீங்க, ஆனா எங்களுக்குன்னு எதுவும் சேர்க்கலையே,'' என அழுதிருக்கிறார்.

அதற்கு புதுமைப்பித்தன், ''உன்னையும், குழந்தையையும் வெறுங்கையுடன் விட்டுட்டு போகலை, நான் எழுதின நுாற்றுக்கணக்கான சிறுகதைகள் என்ற சொத்தையும், புதுமைப்பித்தன் மனைவி குழந்தை என்ற அடையாளத்தையும் விட்டுட்டு போறேன். என் அடையாளமும், படைப்புகளும் உங்களை காப்பாற்றும்,'' என்றிருக்கிறார்.

காலம் 42 வயதில் அவரை காவு வாங்கியிருக்கலாம். ஆனால் தன் படைப்புகள் வாயிலாக அவர் உலகம் உள்ள வரையில் ஒவ்வொரு வாசக இதயத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

- தாமோதரன்

எழுத்தாளர், அல்லிநகரம், தேனி

எழுதியவர் : (27-Apr-17, 6:15 pm)
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே