துரத்தும் நினைவுகள்

நீண்ட வாழ்க்கைப் பயணத்தை
ஒரு வானவில்லின் துணையோடு
அழகாக கடந்துவிட எத்தனிக்கும்
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்
அமர்ந்துகொண்டு துரத்தும் உன் நினைவுகள்

உன் யௌவனத்தை கடந்துபோன
காலமொன்றின் வீதியில் நின்று
கடிநாய்போல் துரத்தும் நினைவுகளிடமிருந்து
தப்பிக்கொள்வதென்பது கழுகின் கால்களில்
சிக்கிக்கொண்ட கருநாகத்தின் தவிப்பாகிறது

கதவுகளையும் சன்னல்களையும் அடைத்துவிட்டுப்
படுக்கின்ற இரவுகளின் தனிமையில்
சத்தமின்றி நுழையும் திருடனைப்போல்
எட்டிப்பார்க்கும் நினைவுகளுக்கு இமைகளால்
சிறையிட்டுப் பார்க்கின்றேன் என்றாலும்
கனவுகளாய் துரத்துகின்றது .

அருகம்புல்லைப்போல் முளைத்துக்கொள்ளும்
உன் நினைவுகளின் விளைச்சல்
என் பாலைவனத்தில் எப்படி நிகழ்கிறதென
எனக்கே ஆச்சரியம்தான்.

வைராக்கிய கயிறுகொண்டு கட்டிவைத்து
இறுமாப்பு கொள்ளும் இதயத்தின் உடும்பு பிடியை
புன்னகையால் தளர்த்திப்போன உன்னுடைய
நினைவுகளின் துரத்தல்களால்
என்னை மறந்து திரிகின்றது உயிர்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Apr-17, 2:55 am)
பார்வை : 288

மேலே