அழியும் தமிழ்க் கற்பக தரு -

தமிழர் தாயகத்தின் அடையாள சின்னமாக விளங்குவது பனை என்கின்ற கற்பகதரு ஆகும். இந்தியா உட்பட எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருப்பினும். யாழ்ப்பாணப் பனைமரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. யாழ்குடாநாட்டை குறிப்பிடும் போது குறியீட்டுப் பொருளாக பனைமரத்தைக் காண்பிப்பது வழமை. அந்த வகையில் பனை மரத்தை ஊடகங்களும் யாழ் குடாநாட்டைக் குறிப்பிடுவதற்கும் இலங்கையின் வடபகுதியைக் குறிப்பிடுவதற்கும் பனை மரத்தைக் குறிப்பிடுவது நாம் அறிந்த உண்மை.
பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது என்றே சொல்லலாம். தமிழர் தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.
ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 4 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயினும் எஞ்சியுள்ள பனை மரங்களையும் பாதுகாக்க முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காலங்காலமாகவே வடபகுதி பனைவளத்தில் தென்பகுதி சிங்களத்துக்கு
ஒரு கண் இருந்துவந்துள்ள நிலையில், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் கட்டிக்காத்து வரும் பனைவளத்தை சூறையாடும் முனைப்பில் தென்பகுதிச் சிங்களவர்கள், படையினரின் மேற்பார்வையில் பனைவளத்தை அழிக்கும் படலத்தை நடத்திவருகின்றனர்.
தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த பனை வளம் இன்று அவர்களின் கண்முன்னாலேயே, தடுக்க யாருமின்றி முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றது.
யுத்தத்தின் பின்னர், தமிழர் தாயகப் பகுதிகளில் பனைகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. பனைகள் உயர்ந்து வளரும் தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட உயரத்துடனேயே அவை முதிர்ச்சியடைவதாகவும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைக்கு, சிறிலங்கா அரசு பாவித்த இரசாயனக் குண்டுகள், பல்குழல் ஏவுகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களே காரணம் என ஆராட்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையிலேயே எஞ்சியுள்ள பனைவளத்திற்கும் சிங்கள இனவாதத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே உள்ளது.
இதனால், பனைவளத்தையும் பனைவள உற்பத்திகளையும் வாழ்வாதாரமாக நம்பிவாழ்ந்த தமிழ் மக்கள் வேறு தொழில்களை நாடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இராணுவத்தினர் பனைவளத்தை அழிக்கும் நடவடிக்கைகளும் தற்போது உச்சமடைந்துள்ளன.
கைதடி வடக்கிலுள்ள காணியொன்றில் புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக 32 பரப்பு வரையான தனியாருக்குச் சொந்தமான பனங்காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி, பனைவளத்தை அழித்து வருகின்றனர்.
குடாநாட்டில் பனைமரங்கள் தறித்தல், அழித்தல் மற்றும் பனை மரக்காலை போன்றவற்றிற்குப் பனை அபிவிருத்திச்சபை சில கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது.
பனைமரங்கள் தறிப்பவர்கள் கிராம சேவை அலுவலர்,பிரதேச செயலாளரின் அனுமதி பெற்று அவற்றை தறிப்பதற்கான அங்கீகாரத்தை தம்மிடம் பெறவேண்டும் எனவும், தறிக்கும் பனைகளை எடுத்து செல்வதற்கு பாதை அனுமதி பெறவேண்டும் எனவும் பனை அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.
தறிக்கும் ஒவ்வொரு பனை மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை பணம் செலுத்துதல் மற்றும் தறிக்கப்படும் ஒவ்வொரு பனை மரத்தினதும் மீள்நடுகைக்கான ஒரு தொகை பணம் செலுத்துதல் என்பன பனை அபிவிருத்தி சபையின் புதிய கட்டுப்பாடுகளாகும்.
பொதுமக்கள் தமது காணியில் உள்ள ஒரு பனை மரத்தைத் தறிப்பதற்கு இத்தனை சட்டதிட்டங்களை பின்பற்றவேண்டும். ஆனால், எவரின் அனுமதியின்றியும் படையினர் வகைதொகையின்றி பெருந்தொகையான பனை மரங்களைத் தறித்து அழிப்பதைப் பார்த்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஆனால், இதனைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவே இவர்கள் உள்ளனர்.
சீமெந்துக் கற்களைப் பயன்படுத்தி நிலையானதாக அமைக்கப்படுகின்ற மேற்படி கைதடி இராணுவ முகாமில் கட்டுமான வேலைகள் நிறைவடைவதற்குள் தமது பிரதேசத்திலுள்ள மேலும் பல பனை மரங்கள் அழிக்கப்படலாம் என்றும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாவற்குழிக்கு அண்மையிலுள்ள அரச காணியொன்றிலும் ஏற்கனவே இது போன்ற இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கெனவே பனைவளம் அங்கு அழிக்கப்பட்டுள்ளது. நாவற்குழி குடியேற்றத்திட்டத்திலுள்ள அரச காணியிலும் தென்னிலங்கைச் சிங்களவர்களைக் குடியேற்றியுள்ளமை தெரிந்ததே. அந்தப்பிரதேசத்திலும் பெரும் எண்ணிக்கையிலான பனைவளம் அழிக்கப்பட்டே அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழர் தாயகத்தில் இருந்து வளங்களைச் சுரண்டும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளில் ஒன்றாகப் பளைப் பகுதியில் இருந்தும் பனைமரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மீளக் குடியேற்றப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் பளையின் பெரும்பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்தே இவ்வாறு பனைமரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
அனேகமாக இரவு வேளைகளிலேயே பனைகள் வெட்டப்பட்டு இரவோடு இரவாக தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் உள்ள இப்பகுதியில் இடம்பெற்றுவரும் இந்தச் செயலுக்கு பின்னால் சிறிலங்காப் படையதிகாரிகள் மறைமுக ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறே மன்னார் மாவட்டத்திலும் சிறிலங்கா காவல்துறையினரின் உதவியுடன் பெரும் எண்ணிக்கையான பனைகள் அழிக்கப்பட்டு தென்பகுதிக்கு கடத்தப்படுவதாக மன்னார்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய கிராமங்களில் உள்ள பல ஏக்கர் கணக்கான காணிகளில் உள்ள பனை மரங்கள் சிறிலங்கா காவல்துறையினரின் ஒத்துளைப்புடன் சட்டவிரோதமான முறையில் வெட்டப்படுவதாக பனங் காணிகளின் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிராமங்களில் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கான காணிகள் உள்ளன. குறித்த காணிகளில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.
குறித்த பனை மரங்களை நம்பி பல ஏழைக் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். குறித்த மக்கள் தமது வருமானத்தை ஈட்டுவதற்காக பனை மரத்தில் இருந்து விழும் ஓலைகளை வெட்டி மட்டை வியாபாரம் செய்தல், பனங்கள் உற்பத்தி, பனங்கிழங்கு, ஒடியல், பனாட்டு, வினாகிரி போன்ற வருமானம் தரக்கூடிய உற்பத்தித் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளுக்குள் அத்துமீறிச் செல்லும் நபர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் உதவியுடன் பனை மரங்களை வெட்டி அழித்து தென்பகுதிக்கு கொண்டு செல்லுகின்றனர். இவ்வாறு சூறையாடப்படும் பனை மரங்களை சீவி அதி கூடிய விலைக்கு விற்பனைசெய்கின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினருக்கு குறித்த தொகை இலஞ்சப் பணத்தை வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தலைமன்னார் காவல்துறையில் முறையிட்ட போதும் அவர்கள் தென்னிந்திய சினிமா பாணியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாதது போல் உள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டிய காவல்துறையினரே சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோவது கண்டு பொதுமக்கள் பொறுமையிழந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் சென்னையில் இருந்து அண்மையில் தமிழர் தாயகப்பகுதிக்கு நேரில் சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுவினர் அங்குள்ள மக்களின் நிலைமைகளை பல அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் படம்பிடித்துத் திரும்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் இருப்பதனை காணொளி ஆதாரத்துடன் வெளிப்படுத்திய புதியதலைமுறைத் தொலைக்காட்சிக் குழுவினர் தமிழர் பகுதிகளில் நீக்கமற நிறைந்துவிட்ட சிங்கள இராணுவத்தினரின் பிரசன்னத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.
வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் இருந்து தப்பித்துச் செல்லும்போது கைவிட்டுச் சென்ற கால்நடைகளும் பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டு காணாமல்போயுள்ளதையும் பறிகொடுத்த மக்களது வாக்குமூலமாக பதிவுசெய்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக பார்க்கும்போது இயல்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தோன்றினாலும் அங்குள்ள தமிழர்கள் ஒருவிதமான அச்ச சூழலில் வாழ்ந்துவருகின்றதை புதியதலைமுறை தொலைக்காட்சி படம்பிடித்துக்காட்டியுள்ளது.
புலம்பெயர் வாழ் எம் உறவுகளே. தாயகத்தில் வாழும் எம் உறவுகளின் நிலைகண்டும் காணதவர்கள் போல் இருப்போமாயின் நாம் கண் இருந்தும் குருடர்களே. வரும் மேதினத்தில் சர்வதேசத்தை நோக்கி ஓங்கிக் குரல்கொடுப்போம் வாரீர்! நாம் சிந்திக்கும் நேரமல்ல இது, செயற்படும் நேரம்.

கந்தரதன் :

எழுதியவர் : (29-Apr-17, 3:11 pm)
பார்வை : 136

மேலே