ஒரு குளத்தின் கதை

அந்தரங்கமொன்றுமின்றி
அப்பழுக்கு ஏதுமின்றி
அந்தப்புரம் உள்ளதையெல்லாம்
அப்பட்டமாய் காட்டிவிடும்
ஒரு கண்ணாடிப் போர்வையைத்தான்
நீரென போர்த்தியிருந்தது
அந்தக் குளம் …!

நீரினிலும் கோலமிடலாம்
என்பதை நிரூபித்துக்
காட்டும் வண்ணம்
நீந்தின மீன்களெல்லாம்
புள்ளியிட்ட கோடுகள் போல்..!

தடயங்கள் பதிந்துவிட்டால்
தடாகமும் மீன்களுக்கு
சொந்தமாகிவிடுமோயென
தண்ணீரும் பாய்தங்கே
தடயத்தை அழித்திற்று…!

வெளிவளியும் மோகங்கொண்டு
குளம்தனை கவர்ந்திடவே
வெறிகொண்டு தாக்கியது
புழுதி மிகதூவி ஓடியது…!

தூர்வாரும் தூயவர்களென
தன்னைத்தானே அழைத்துக்கொண்டு
நற்குலத்தில் துர்கைகளிட்டு
மீன்களின் கண்களில்
புழுதி வாரியிறைத்தனர்
கைகளிருந்தும் கையாலாகாதவர்…!

கையூட்டுப் புகழ் கைகளை சுட்டெரிக்க
வெய்யோணும் உதயமானான்
கண்பூட்டு மீன்களுக்கிட்டு
கனல் கொண்டு புனல் கொன்று
ஆவியையும் களவாடிக்கொண்டான்…!

கனலைக் கக்கும்
கதிரவனை மறைத்து
தண்ணீரில் தண்ணமூட்டி
மீன்களைக் காக்கும்
திலகமென உருவெடுத்தது..
திங்களின் ஒளியை
தின்று கொழுத்து
குளமெங்கும் பரவிக்கிடந்த
இலைகள்…!

இலையின் நிழல் போதையில்
நிலைமயங்கி பழமை மறந்து
மீன்களெல்லாம் பராரியாய்
திரிந்திருந்த வேளையில்
இலைகளை ஆசனமாக்கி
இறுமாப்பாய் பூத்துவிட்டது
தாமரைப் பூக்கள் குளமெங்கும்…!

தூர் வாரியவன் கூறுகின்றான்
கலங்கிப்போன குளத்தை
துலக்கி வைத்தது
அவன் கைகளென்று..
ஆகவே…குளம் அவனுடையதென்று…!

கதிரவன் கூறுகின்றான்
கைகள் கலக்கிய குளத்தில்
கதிரொளி வீசியவன் நானென்று..
ஆகவே…குளம் அவனுக்கென்று…!

இலைகள் கூறுகின்றது..
கதிரின் கனலை கைதுசெய்து
குளத்தின்மேல் நிழல்கதவை
சாத்தியவன் நானென்று ..
ஆகவே…குளம் எனக்கென்று…!

தாமரைப் பூக்கள் கூறுகின்றது…
குளம் முழுவதும் நாங்களென்று..
குளத்தினடியிலும் எங்கள் வேர்களென்று...
ஆகவே…குளம் எங்களெக்கென்று…!

இந்தப்புனிதெரெலாம் முயற்சித்தும்
குலமென்னவோ சாக்கடையாகத்தான்
மாறிக்கொண்டிருக்கிறது ..
சாக்கடையில் ஊறிய மீன்களெல்லாம்
நீச்சல் மறந்து
ஊர்ந்துசெல்லவும் பழகிக்கொள்கிறது…!

உள்ளொன்றுவைத்து புறமொன்று
சொல்லுபவன் நானல்ல..
உண்மையில் நானுரைத்தது
ஒரு குளத்தின் கதைதான்….!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (30-Apr-17, 9:57 pm)
பார்வை : 291

மேலே