எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்

என்னை மன்னித்து விடுங்கள்.உங்களை பற்றி உங்களுக்கு தெரியாத சிலவற்றை நான் பட்டியல் போட்டுவைத்திருக்கிறேன்,அவை உங்களை சற்று முகம் சுளிக்கவைக்கலாம்.

"வேளைக்கு சோறு இல்லை,நாளைய சோற்றுக்கு வேலை இல்லை" என்ற புலம்பும் சாதாரண இந்திய பிரஜையின் மனநிலையில் இருந்துதான் நான் இதை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

"டீ யா இது!இதெல்லாம் மனுஷன் குடிப்பான,நீயெல்லாம் எப்போ மாறப் போறானே தெரியல!" என்று காலையில் மனைவியிடம் ஏற்படும் வாக்குவாதம் இரவில்அரசியல்வாதிகள் பங்கேற்கும் தொலைக்காட்சி
விவாதங்களை பார்த்துவிட்டு "இந்த நாடு எப்போ மாறப்போதோ !" என்ற ஏக்கத்தோடு முடிகிறது ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நாளும்.

மாற்றம்..அன்றாட வாழ்வில் இந்த சொல்லை பல இடங்களிலும் பலதரப்பட்ட மக்களிடமும் நான் கேட்டிருக்கிறேன்.ஒரு நாள் காற்றோடு கதை பேசவும்,மண்ணையும் மனிதர்களையும் திரும்பி பார்க்கவும் என் கணினி உலகத்தை விட்டு வெளியே வந்தேன்.மக்கள் கூடும் இடங்களில் ஒரு காட்சி,ஒரு குழு எம்மக்களிடம் "உங்கள் நாடு முன்னேற யாரிடம் மாற்றம் வேண்டும்?" என்ற கேள்வியை பலதரப்பட்ட மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நான் கவனித்தேன்.

அவர்கள் பதில்களின் வந்துதித்த வார்த்தைகள் அரசியல்வாதிகளிடத்தில்,அதிகாரிகளிடத்தில்,பொதுநலவாதிகளிடத்தில்,போலீஸகாரர்களிடத்தில்,பண்பாடு மறந்த மாணவர்களிடத்தில்,எழ மறுக்கும் இளைஞர்களிடத்தில் என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது.

குழப்பமான மனதுடனும்,சோர்ந்த உடலுடனும் வீட்டை அடைந்தேன்."உதவாக்கரை,ஒரு வேலைய உருப்படியா செய்றதில்ல,உன்ன யாரு மாதப்போரான்னு தெரில.."என்ற தம்பியை நொந்துகொண்டிருந்தார் அப்பா.

கொஞ்சம் சிரித்துக் கொண்டு,அதை மறைத்துக் கொண்டு என் அறையை அடைந்தேன்.அறைக்கதவினை தாளிட்டு மனக்கதவினை திறந்தேன்.எப்போதோ ஓய்வு பெற்ற என் நாட்குறிப்பை தேடி எடுத்தேன்.இப்போதுதான் என் நாட்குறிப்பில் உள்ள வெள்ளை பக்கங்களுக்கு மறுமணம் நடந்தது,என் எழுத்தாணியின் மைத்துளிகளால்.அந்த பக்கங்களில் நான் எழுதியது இது தான்...

"இந்த இந்தியாவில் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள் ஆனால் ,யாரும் மாற தயாராக இல்லை".காந்தியும் பகத்சிங்க்கும் மீண்டும் பிறப்பார்களா என்று ஏங்குகிறார்கள் தம்முள் இருக்கும் காந்தியையும் பகத்சிங்யும் மறந்து போய் .

10 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவன் இன்று தொழிலதிபராக இருக்கிறார்.100 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் போகும் என உலகம் நினைத்து கியூபா இன்று தனித்து நின்று ஜெய்திருக்கிறது.காரணம் ,அவர்கள் மாற்றத்தை வெளியில் இருந்து எதிர்பார்க்கவில்லை தம்முள் இருந்து வெளிக்கொணர்ந்தார்கள் .ஆனால் நம் இந்தியாவில் ஏழை எப்போதும் ஏழை தான் காரணம் நாம் எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற நேரத்தில் அதை உருவாக்க மறந்துபோகிறோம்.

உலகம் மாறவேண்டுமெனில்,நாடுகள் மாறவேண்டும் நாடு மாறவேண்டும் எனில் சமுதாயம் மாறவேண்டும்.சமுதாயம் என்பது தனிமனிதர்களின் கூட்டமைப்பின்றி வேறென்ன.

ஓ உறங்கிப்போன இந்தியர்களே!விழித்திகொள்ளுங்கள்.ஒவ்வொரு இந்தியனும் தன் வாழ்க்கையை சீரமைக்க தன்னைத்தானே பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.உங்களுக்குள் ஒரு லெனின்,லிஙகன்,காந்தி உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களை நீங்கள் எழுப்பும் வரை இந்த தேசத்தின் தூக்கத்தையும் துக்கத்தையும் குலைக்க முடியாது.

எல்லா தரப்பினரையும் குறை கூறிக் கொண்டிருக்கும் உன் எண்ணத்தில் வேண்டும் மாற்றம்!
தானுண்டு தன் வேலையுண்டு என்று நினைக்கிற உன் சிந்தனையில் வேண்டும் மாற்றம்..!
"நாமளாவது இந்த நாட்ட மாத்திரவதாவது ..." என்ற வரிகள் பொய்க்க உன் நம்பிக்கையில் வேண்டும் மாற்றம்...!
ஒரு தலைவன் பிறக்க மாட்டானா என்ற ஏக்கத்தில் வேண்டும் மாற்றம்...!
நம் வாழ்க்கை நிலை இப்படி தான் என்ற உன் குருட்டு நம்பிக்கையை மண்ணோடு புதைத்து விருட்சமாக உந்தி எழ வேண்டும் மாற்றம்!

துருப்பிடித்த போன உன் நாடி நரம்புகளில் லட்சிய வெறி ஏற்ற உன் மனதில் வேண்டும் மாற்றம்..!

தோழர்களே!என் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.இந்த உலகத்தில் எல்லாமே மாறுதலுக்குட்பட்டவை தான்.இந்த சமுதாயம் உங்களுக்கே தெரியாமல் உங்களை உங்களுக்குள்ளேயே ஆழமாக புதைத்து விட்டது.இப்போது இருக்கும் நீங்கள் நீங்கள் அல்ல.சாமுதாயத்தின் நாடகத்தில் சிறந்த நடிகன் விருத்திற்காக நீங்கள் நடித்துக்கொண்டிருக்கீர்கள். உங்களுக்குள் புதைக்கப் உங்களை தோண்டி எடுங்கள்,தேசத்தின் மாற்றத்திற்கான முதல் விதை உங்களுடையதாக இருக்கட்டும்.

நான் என்பதை நீங்கள் மாற்றியவுடன்,நீ என்பதை மாற்றுவதற்கான சக்தி சக்தி பிறக்கிறது உங்களிடம்.நீயும்,நானும் சேரும் போது சமுதாயத்தை மாற்றுவதற்கான சக்தி பிறக்கிறது.

மாறுவோம்,மாற்றுவோம்!


கோவை.சரவண பிரகாஷ் .

எழுதியவர் : சரவண பிரகாஷ் (1-May-17, 12:18 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
பார்வை : 346

மேலே