விடியலும் வந்திடுமா விரைந்திங்கு

​உதட்டளவில் உறவென அழைத்து
உள்ளத்தில் ​எதிர்மறை வினையாய்
உலவிடும் நெஞ்சங்களே அதிகம் ....

வாயளவில் வாழ்த்தும் கூறுவர்
வானளவு புகழ்ந்தும் தள்ளுவர்
வன்மத்தை நெஞ்சில் கொள்வர் ...

தன்னலமற்ற உள்ளம் என்பர்
தர்மத்தின் தலைவன் என்பர்
தள்ளிவிட தருணம் தேடுவர் ...

தலைமுறை கடந்தும் தொடருது
தவறாமல் நிகழ்கின்ற காட்சியிது
தரணியில் மாறிடும் காலமெது ...

அன்றாட வாழ்வே அரசியாலனது
அவரவர் நிலையே கேள்வியானது
அடுத்தடுத்த நிகழ்வே புதிரானது ...

தீர்வுகள் எட்டிடா நிலையின்று
தீர்ப்புகள் வந்தும் முடியாதின்று
தீராத குழப்பத்தில் மக்களின்று ...

விடியலும் வந்திடுமா விரைந்திங்கு
விரும்பியதும் நடக்குமா இனியிங்கு
தெளிவுநிலை பிறக்குமா நமக்கிங்கு ...?


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-May-17, 10:23 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 461

மேலே