சிறந்த வாழ்க்கை

வேலை வாழ்க்கை ஈடு செய்வது
-----------------------------------------------------------
எப்படி?
--------

முன்னுரை:
------------

" தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்"

என்பார் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மானிடராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்.இந்த பிறவியில் நாம் எதைச் சாதித்தோம் என்பதே நம் வாழ்வின் இலட்சியமாய் இருக்க வேண்டும்.இன்றைய சூழலில் வேலை ...வாழ்க்கை இரண்டையும் அழகாய் கையாள்பவர்கள் எத்தனை பேர் ? விரல் விட்டு எண்ணும் அளவுதான். அலுவலகப் பிரச்சனைகளை வீட்டிற்கும் வீட்டின் பிரச்சனைகளை அலுவலகத்திற்கும் சுமந்து செல்லும் இதயங்களே நம்மில் அதிகம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களே அதிகம். இதே நிலை நீடித்தால் வாழ்வின் சந்தோஷம் கேள்விக்குரியாகிவிடும்...

பளுவை இலகுவாய் கையாள்வது
---------------------------------------------------------------
எப்படி?
-------
வேலையையும் வாழ்க்கையையும் பிரித்து சந்தோஷமாய் உணர முடியாதவர்களால் நிச்சயம் ஒரு நல்ல குடும்பத்தையும் உருவாக்க இயலாது. அதைப்போல அலுவலக சூழ்நிலையையும் சாதிக்க இயலாது. பளு என்று எதை நினைக்கிறோம்? நமக்கு பிடிக்காத ஒரு விஷயம் தான் நமக்கு பளுவாக முடியும்.குடும்பத்தையும் , வேலையையும் நேசிக்க பழகுபவர் எதையும் பளுவென நினைக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும் நமக்கானது..அதை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் ,பிறரோடு சிரித்த முகத்துடன் பழகும் குணமும் இருந்தால் எந்தப் பளுவும் நம்மை பாதிக்காது.

சிரிப்பதால் என்னபலன்?
-----------------------------------------------
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நம் மனதின் கண்ணாடி நம் முகம் தான்.அங்கே அழகிய சிரிப்பொன்று தவழ்ந்தால் நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாம் இலகுவாய்
இருக்கும். சக ஊழியர்களிடமும் வீட்டில் உறவினர்களிடமும் உண்மையான அன்பை புன்னகையுடன் தந்து பாருங்கள். வாழ்க்கையும் ருசிக்கும்...வேலையும் இனிக்கும்.

வாழ்க்கை அழகானது:
-----------------------------------------
விடிகாலை வேளையில் என் கடிகாரம் சிரிக்கும் ஒலி ..எனக்குள் வாழ்க்கையை அழகாக்கி காட்டுகிறது. விடி விளக்கின் வெளிச்சத்தில் என் குழந்தைகளின் அழகு வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது. நான் பார்க்கும் பக்கமெல்லாம் படர்ந்திருக்கும் புல்வெளி என்னை சிலிர்க்க வைக்கிறது. இயற்கையின் அழகில் நான் என்னை மறந்திட துடிக்கையில் கடமையின் உணர்வு என்னை தன்பக்கம் இழுக்கிறது.இங்கு எனக்குள் ஏற்படும் ஒரு மெல்லிய உணர்வுதான் வேலையையும் வாழ்க்கையையும் சந்தோஷமாக்கி காட்டும்.நாம் எப்படி பார்க்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்.நமக்குள் மகிழ்ச்சி இருந்தால் எல்லாமே வசப்படும் எளிதாக!

நம்பிக்கையை தேடுங்கள்:
--------------------------------------------------
நம்பிக்கை நார் மட்டும்
நம்கையில் இருந்தால்
உதிர்ந்த மலர்களும்
ஒவ்வொன்றாய் வந்து
ஒட்டிக் கொள்ளும்

என்பார் கவிஞர் மு.மேத்தா..எந்த ஒரு செயலும் நம்பிக்கையை நிலைப்படுத்தியே அழகாய் உருவாகிறது. ."தண்ணீரைக் கூட கையில் கொண்டு செல்லலாம் அது பனிக்கட்டியாக உறையும் வரை பொறுத்திருந்தால்". எப்போதும் நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் வெற்றி நம்மைத் தேடி வரும்.

வெற்றிப்பாதை:
------------------------------
"எங்கு வேண்டுமானாலும்
இருந்து விட்டுப் போகட்டும்
இருட்டு....
அதற்கு உன் உள்ளத்தில்
மட்டும் இடம்தராதே!

வாழ்வின் மொத்த சந்தொஷமும் இந்த வார்த்தைகளில் இருப்பதாக உணருங்கள். .ஒவ்வொரு நிமிடத்தையும் அழகாய் செலவழியுங்கள்..குழந்தைகளோடு , கணவரோடு , உறவிணர்களோடு செலவழிக்க நேரம் ஒதுக்குங்கள்..முடிந்தவரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்த பழகுங்கள்.அலுவலகம் வந்ததும் அதை உங்களுக்கு மிகவும் பிடித்த இடமாய் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் ரசித்துப் பாருங்கள். உங்களை நீங்கள் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். வெற்றிப்பாதை உங்களைத் தேடி வரும்
"வெற்றியாளர்கள் எதுவும் வித்யாசமாகச் செய்வதில்லை. .
ஆனால் செய்யும் செயலை சற்று
வித்தியாசப்படுத்திச் செய்கிறார்கள்"

மனித உறவுகள் மேம்பட:
------------------------------------------------
நான் பெரியவன் என்ற அகந்தையை விடுங்கள்
எந்த விஷயத்தையும் பிரச்சனைகளையும் நாசூக்காக கையாளுங்கள்
அற்ப விஷயங்களை பெரிது படுத்தாதீர்கள்
மனம் திறந்து பேசுங்கள்
குறுகிய மனப்பான்மையை விட்டு விலகுங்கள்..
உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாக இல்லாமல் கொஞ்சம்
தளர்த்திக் கொள்ளுங்கள்.

முடிவுரை:
-------------------
வாழ்க்கை மிக அழகானது...
ரசிக்கப் பழகினால் எல்லாமே
ருசிக்கும்.....

வேலையையும் வாழ்க்கையையும் பிரித்து முடிந்தவரை சந்தோஷமாய் நம்மை வைத்துக் கொள்ள பழக வேண்டும். வீட்டில் கணவரோ குழந்தைகளோ நல்ல செயல்கள் செய்யும் போது மனம் திறந்து பாராட்டுங்கள்.அதைப்போல சக ஊழியர்களையும் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள் .பிறரை சந்தோஷப்படுத்தி உங்கள் கடமையை செய்யுங்கள்.வாழ்க்கை இனிக்கும் வேலையும் உங்களுக்கு பிடிக்கும். மனதை சந்தோஷமாய் வைத்திருங்கள்..நம்பிக்கையுடன் வாழுங்கள். ..வேலையும் வாழ்க்கையும் இனிக்கும்...

எழுதியவர் : Nisa (6-May-17, 11:02 pm)
சேர்த்தது : நிஷா
Tanglish : sirantha vaazhkkai
பார்வை : 520

சிறந்த கட்டுரைகள்

மேலே