சொல்லும் பொருளும் 8 - ஊர்தலும், வாரியும்

சொற்களில் ஒரு சொல்லிற்கு இடத்திற்குத் தகுந்தாற் போல பல பொருள் வருவதுண்டு. கீழேயுள்ள பாடலில் நான்கு இடங்களில் ஊரும் என்ற சொல் இடம் பெறுகிறது; ஒவ்வொரு இடத்திலும் பொருள் வெவ்வேறாகிறது; வாரி என்ற ஒரு சொல்லும் வருகிறது. இவற்றிற்குப் பொருள் காண்போம்.

இன்னிசை வெண்பா

ஏரி சிறிதாயின் நீர்ஊரும்; இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ஊரும்; மேலைத்
தவம்சிறி தாயின் வினைஊரும்; ஊரும்
உரன்சிறி தாயின் பகை. 100 நான்மணிக்கடிகை

பொருளுரை:

குளம் சிறிதானால் அதிலுள்ள நீர் வற்றி விடும். வீட்டில் வருமானங் குறைவானால் மனையாள் நிலை கடந்து போவாள். முற்பிறப்பின் நல்வினை குறைவானால் தீவினை பெருகும். ஒருவன் வலிமை சிறிதானால் பகைவர் மேற்கொண்டு பெருகுவர்.

ஊரும் என்ற சொல்லின் பொருள் என்ன? ஒவ்வொரு அடியிலும் அதன் பொருள் வேறுபட்டுச் செல்கிறது. அகராதியில் வாரியின் சரியான பொருளென்ன? என்று நண்பர் கவின் சாரலன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவற்றிற்கு கிழேயுள்ளவாறு பதிலளித்தேன்.

வாரி: Income, resources; வருவாய்,

ஊர்தல் - வற்றி விடும், நிலை கடந்து போவது, தீவினை பெருகுதல், பகை பெருகுதல் என்று பல பொருள்படும்.

ஊர்தல்
1. To move slowly; to creep, as an infant; to crawl, as a snake; நகர்தல். நந்தூரும் புன்னாட்டின் (பாரத. கிருட்டிண. 11)
2. To spread, circulate, as blood; to extend over a surface, as spots on the skin; பரவுதல்.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. 1185 பசப்புறுபருவரல்

3. To flow, as juice from the sugarcane; வடிதல். கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34)
4. To come to close quarters; அடர்தல். வெஞ்சம மூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்)
5. To be unloosed, relaxed; கழலுதல். அவிர்தொடி யிறையூர (கலித். 100)
6. To itch; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது.
1. To mount; ஏறுதல். பாசதும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர் (ஐங்குறு. 101)
2. to ride, as a horse; to drive, as a vehicle; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை (குறள், 37)

ஊர்த்தல்

To suck; ஊற்றுதல். ஊர்த்துயி ருன்னை யுண்ண (சீவக. 2286).

ஊர்
1. Going, riding; ஊர்கை. ஊருடைத்திண்புரவியுலைத்தனள் (சேதுபு. தேவி. 43)
2. Village, town, city; வசிக்கும் ஊர் (தொல். பொ. 37)
3. Place; இடம். ஓரூ ரிரண்டஃக மாயிற்றெண்று (சீவக. 2987)
4. Resident population; ஊரிலுள்ளார். ஊரு மயலுஞ் சேரியோரும் (இலக். வி. 563)
5. Halo round the sun or moon; சந்திரசூரியரைச் சூழும் பரிவேடம். செங்கதிர் தங்குவதோ ரூருற்றது (கம்பரா. சரபங். 9)

வாரி

1. Income, resources; வருவாய். (பிங்)

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14 வான்சிறப்பு

2. Produce; விளைவு. மாரிபொய்ப்பினும் வாரி குன்றினும் (புறநா.35)

3. Grain; தானியம்.
4. Wealth; செல்வம்.

வாரி

1. Pole for tightening a package or pack; மூட்டைகளை இறுக்கிக்கட்ட உதவும் கழி. .
2. Lath tied length wise at the edge of a thatched roof; கூரைமுனையில் வைத்துக்கட்டுங் குறுக்குக் கழி.
3. Channel for draining off the rain water from a roof; waterway; கூரையினின்று வடியும் நீரைக்கொண்டு செல்லுங் கால்.
4. Plank; தோணிப்பலகை
5. Sluice; மடை

வாரி
வாரு
1.Comb; சீப்பு.
2. Rake; குப்பைவாருங்கருவி.

வாரித்தல்
1. To hinder, obstruct; தடுத்தல். (சூடா.)
2. To asseverate, swear; ஆணையிட்டுக் கூறுதல். (யாழ். அக)
3. To conduct, drive, as a horse; நடத்துதல். பரிமா வாரித்த கோமான் (இறை. 13, உரை, பக். 91)

வாரி

1. Impediment, obstruction; தடை. (சூடா)
2. Wall, fortification; மதிற்சுற்று. (பிங்.) வடவரை நிவப்பிற் சூழவாரியாப் புரிவித்து (கந்தபு. அசுரர்யாக. 36)
3. Stadium; செண்டுவெளி. குஞ்சரம் வாரியுள் வளைத்தவே (சீவக. 275)
4. Portion; பகுதி. (பிங்)

வாரி

கிருபானந்த வாரியார். இவர் பெயருக்கு அழகான ஒரு காரணம் உண்டு.

‘கிருபை’ என்றால் கருணை; ‘ஆனந்தம்’ என்றால் இன்பம்; ‘வாரி’ என்றால் பெருங்கடல் என்று பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரைத் தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார்.

1. Water; நீர். (பிங்.) (தக்கயாகப்.67, உரை)
2. Flood; வெள்ளம். (பிங்.) வணிகமாக்களை யொத்தவ் வாரியே (கம்பரா. ஆற்றுப். 7)
3. Sea; கடல். (பிங்.) (தக்கயாகப். 67, உரை)
4. Reservoir of water; நீர்நிலை. (பிங்)
5. Literary work; நூல். (அக. நி)
6.சரஸ்வதி (யாழ். அக)
7. A kind of lute; வீ ணைவகை. (சூடா)
8. Flute; pipe; இசைக்குழல். (பிங்)
9. யானையகப்படுத்து மிடம். வாரிக்கொள்ளா.... வேழம் (மலைபடு.572)
10. Rope for tying an elephant; யானைகட்டுங்கயிறு. (யாழ். அக)
11. Elephant-stable; யானைக்கோட்டம். குஞ்சரம்.... மதிட்புடை நிலை வாரிகள் (சீவக. 81)

வாரி

1. Entrance; வாயில்.
2. Door; கதவு. (உரி. நி)
3. Path; வழி.

வாரி

முறையில் என்னும் பொருளில் வருஞ் சொல். வகுப்புவாரி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-17, 9:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 565

சிறந்த கட்டுரைகள்

மேலே