தாடி

எனக்கு நெடு நாட்களாக தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு.. ஆனால் அவை அடர்த்தியாக வளருவதில்லை என்பதாலும், அலுவலகத்தில் அரைகுறை தாடியிருந்தால் அழகல்ல என்பதாலும் என் ஆசை நிறைவேற வில்லை... மீசை மட்டும் இருந்தது, நரை வரும் வரை.. ஒவ்வொரு நரை முடியாக எடுக்கத் துவங்கியதில் மீதமுள்ள மீசை மீகவும் ஷீணமாக இருந்ததால் ஒரு நாள் மொத்தமும் எடுக்கப் பட்டு தொடர்ந்து அதையே கடைபிடித்து வந்தேன்..

கடந்த ஏழு வருடங்களாக வேலை ஒன்றுமின்றி வீட்டிலேயே இருப்பதால் இந்த தாடி வளர்க்கும் ஆசை அடிக்கடி வரும்.. பேத்தி மட்டும் ஒருமுறை சொல்லியிருக்கிறாள், தாடி நல்லா இல்லை எடுத்துவிடு என்று... Dye அடித்தாலும் அவளுக்குப் பிடிக்காது.

கடந்த மூன்று வருடங்களாக எழுத்தாளன் போல் ஒரு பிரமையில் உலாவுவதால், தாடி அதன் மதிப்பைக் கூட்டும் என்ற எண்ணத்தில், மீண்டும் தாடி, அதாவது குறுந்தாடி, ஃப்ரென்ச் பியர்ட், வைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப் பட்டது...

எனது நெடுங்கால முக, முடி அழகு கூட்டுபவர் (முகமுடி அல்ல) துணையுடன் ஆராய்ந்து, முதலில் 0.5 மிமி அளவில் குறுந்தாடி அமைக்கப் பட்டது.. வாரம் ஒரு முறை சென்று அது சீரமைக்கப்பட்டு, 0.75மிமி, 1.00 மிமி என்ற அளவில் வளர்த்து, பின் மீண்டும் 0.5 மிமி அளவில் அமைத்து ஏதேதோ ஆராய்ச்சியில் குறுந்தாடி வடிவாகிக் கொண்டிருந்தது... கடந்த இரண்டு மாதமாக இந்த முயற்சியில் விடாது விக்ரமாதித்யன் போல் வாரா வாரம், குறுந்தாடி கவனிக்கப் பட்டது... எப்போதும் சிரித்து பேசி நட்பாக இருக்கும் எனது ஃபேஸ் மெக்கானிக் என் அடிக்கடி வரவால், மிகுந்த நட்பாகி, கட்டிப் பிடித்து வரவேற்கத் துவங்கி விட்டார்...

நிற்க..

இதற்கிடையில் எனது நெருங்கிய நண்பர், திரு. ராஜன் கோபால் தனது முகப்புப் படத்தைப் மாற்ற, அதில் அவர் குறுந்தாடி மிக அருமையாக இருந்தது.. பார்த்த எனக்கு (பொறாமை) அதே போல் குறுந்தாடி வேண்டும் என்ற ஆசையுடன் எனது ஃபேஸ் மெக்கானிக்கிடம் இரண்டு நாள் முன் சென்று இதேபோல் குறுந்தாடி வேண்டும் என்று கேட்க (இதற்கு முன் அமிதாப் போல் வேண்டும் என்று கேட்டதெல்லா உண்டு) அவர் மேலும் கீழும் பார்த்தார்.. ராஜன் அவர்கள் படத்தையும், என் முகத்தையும் மாறி மாறி பார்த்தவர், முடிவில் 'இது

உங்களுக்கு செட் ஆவாது சார்' என்றார்..

சற்று வருத்தம் தான் - அவரைப் போல் கவிதைதான் எழுத வருவதில்லை, தாடி கூடவா வைத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் வருத்தத்தை மறைத்துக் கொண்டு, 'எனக்கு எது செட் ஆகுமோ அதைச் செய் என்றேன்'

'மொத்தமா எடுத்துடுவோம் சார்...' என்றார்..

திடுக்கிட்டேன்... இருப்பினும், நிபுணரின் கருத்துக்கு (எக்ஸ்பர்ட் ஒபினியனுக்கு) தலை வணங்கி தாடி வைக்கும் ஆசைக்கு சமாதி கட்டப்பட்டது..

---முரளி

எழுதியவர் : முரளி (8-May-17, 7:43 am)
சேர்த்தது : முரளி
Tanglish : thaati
பார்வை : 141

சிறந்த கட்டுரைகள்

மேலே