காதல் பழக வா-17

காதல் பழக வா-17
நீ யாரென்று புரியாமல்
உன் விழிக்குள்
உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன்.....
நீயோ புன்னகையோடு
நான் தான் நீ
நீ தான் நான் என்று
வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கிறாய்......
எத்தனை முறை
நீ பதில் சொன்னாலும்
எனக்கு மட்டும்
புரிந்துவிட மாட்டேன் என
அடம் பிடிக்கிறது என்மீதான
உன் காதலும்
உன்மீதான என் காதலும்....
விடைக்காக காத்திருக்கிறேன்
விடுகதையோடு நான்.....

மிக பெரிய மாளிகை தோரணையில் இருந்த அந்த கட்டிடத்திற்குள் பெரிதாய் கூட்டமில்லை......செக்யூரிட்டி வணக்கம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் கண்ணனின் கைப்பிடிக்குள் குழப்பத்தோடு நுழைந்த ராதிக்கு சின்ன ஆச்சர்யம் காத்திருந்தது....

அங்கு கண்காட்சி நடந்துகொண்டிருந்தது....அந்த மாளிகையின் உள்ளே பல பிரிவுகளில் பலவிதமான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.....

இதுவரை கண்காட்சியென எங்கேயும் ராதி அவளாகவும் போனதில்லை, வேறு யாரும் கூட்டிச்சென்றதும் இல்லை...கண்காட்சியென்றாலே போரிங் என்று நினைத்துக்கொண்டிருந்தவளின் கருத்து பொய் தானென கண்ணன் இன்று நிரூபித்துவிட்டான்....

முதலில் பெயிண்டிங்க், அடுத்தது சிற்பங்கள், அதற்கடுத்த பகுதி அணிகலன்கள்....இப்படி ஒவ்வொரு பகுதியும் சிறந்ததாகப்பட்ட ஒவ்வொன்றும் கம்பீரமாக நிற்க ராதிக்கு அதற்க்கு மேல் பேச்சே வரவில்லை... கண்ணனோடு போட்ட சண்டையெல்லாம் மறந்து ஒவ்வொரு கலைப்பொருட்களையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே கண்ணன் பின்னால் சென்றாள்......கண்ணனும் எதற்கும் விளக்கம் கொடுக்கவில்லை, மிக சிறந்ததாய் பட்ட கலைப்படைப்பின் அருகில் இன்னும் சில நிமிடங்கள் நின்று விட்டு ராதியை பார்ப்பான், ராதியும் அந்த சில நிமிடங்கள் ஆத்மார்த்தமாக ரசித்துவிட்டு கண்ணனின் பின்னால் செல்வாள்.....

இப்படி அனைத்து பிரிவையும் பார்த்து முடித்தபின் இன்டெரியர் டெகரேஷன்காகவே பிரமாண்டமாக ஒரு பிரிவை வடிவமைத்து ராதியின் மனதை முழுதாக கொள்ளையடித்துவிட்டது அந்த கண்காட்சி..

எதை அவள் வாழ்வின் லட்சியமாக நினைத்திருந்தாலோ அதை பற்றிய பலவேறு கோணங்களை தெளிவாக எடுத்துக்காட்டிய அந்த மாதிரிகளை விட்டு ராதியால் நகர கூட முடியவில்லை.....இப்படி ஒரு கண்காட்சி நடக்கிறதென ராதிக்கு சுத்தமாக தெரியாது, அவள் சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை, அவள் புரிந்துகொண்ட விஷயம் இதுபோன்ற கண்காட்சிக்கு இதில் தொடர்ந்து கலந்துகொள்ளும் நபர்களுக்கும், வி ஐ பி களுக்கும் தான் அழைப்பு விடுக்கப்படும்.....இந்த பட்டியலில் கண்ணனுக்கும் இடமுண்டு, கண்ணன் மட்டும் அழைத்து வரவில்லையெனில் ராதி இப்படி ஒரு முக்கியமான தருணத்தை நிச்சயமாக இழந்திருப்பாள்.....

ராதியின் மனதை புரிந்து கொண்டு அவளுக்காக ஒவ்வொருஇடத்திலும் மௌனமாக காத்திருந்த கண்ணன் நேரம் ஆவதை உணர்ந்து அவளை பார்த்து போகலாம் என சைகை செய்ய அதற்க்கு மேல் ராதியால் கண்ணனின் வார்த்தையை மீறமுடியவில்லை....

கண்ணன் ராதியை அழைத்துக்கொண்டு காருக்குள் வரும் வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை...காருக்குள் ஏறி சரியாக பத்து நிமிடங்கள் பயணித்திருப்பார்கள், அதுவரைக்கும் கண்ணன் ராதியின் முகத்தை கூட பார்க்கவில்லை......ராதிக்கோ கண்ணன் ஏதாவது பேசுவான், அவனுக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டும் என காத்துக்கொண்டிருந்தாள், ஆனால் கண்ணன் ராதியின் முகத்தை கூட பார்க்காததால் ராதிக்கு அது ஏமாற்றமாக இருந்தது.கொஞ்ச நேரம் முன்பு முத்தம் கொடுக்கும் வரை ரொமான்ஸ் செய்துகொண்டு கலாட்டா செய்த கண்ணன் எங்கே, இப்போது ராதியின் லட்சியத்திற்கு பெரிதளவு உதவி செய்துவிட்டு ஒன்றுமே பேசாமல் மௌனமாகவே அவளுக்கு துணை நிற்கும் கண்ணன் எங்கே...

ராதிக்கு ஒன்றுமே புரியவில்லை, ரெண்டு நாளைக்கு முன் தன்னை தன் விருப்பம் இல்லாமல் தாலி கட்டி தூக்கி வந்தவன் இன்று தான் சொல்லாமலே தன் விருப்பம் அறிந்து சகலத்தையும் செய்துவிட்டு மௌனம் காப்பதேன்....

இவன் நல்லவனா இல்லை கெட்டவனா....

ராதி யோசித்து கொண்டிருக்க கண்ணனோ எந்த சலனமும் இல்லாமல் கேட்ட கேள்வியில் ராதி அதிர்ந்து தான் போனாள்......

"நான் நல்லவனா, இல்லை கெட்டவனான்னு யோசிக்கிறியா???"

தான் மனதில் நினைத்ததை பிசகில்லாமல் அப்படியே கூறும் கண்ணனை நினைத்து அதிர்ச்சியாவதா இல்லை பயப்படுவதா, ராதிக்கு ஒன்றும் புரியவில்லை...

"மனச போட்டு ரொம்ப குழப்பிக்காத, நான் யாருக்கு வேணா கெட்டவனா இருக்கலாம், ஆனா உனக்கு மட்டும் நான் எப்போதுமே நல்லவன் தான்....புரிஞ்சதா"

ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவளுக்கு கண்ணனின் இந்த பதில் மேலும் குழப்பியது.......பேயறைந்த மாதிரி விழித்துக்கொண்டிருந்தவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தபடியே காரை ஓட்டினான் கண்ணன்......அதற்க்கு மேல் இருவருக்கும் இடையில் வார்த்தை பரிமாற்றம் இருக்கவில்லை ....
கடையின் முன்னால் காரை நிறுத்திவிட்டு கண்ணன் ராதியை அழைத்துக்கொண்டு கடைக்குள் சென்றால் ராதியின் தோழிகள் பரபரப்போடு ராதிக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது ராதிக்கு அவர்களின் பார்வையிலேயே புரிந்தது.....

“என்ன ராதி,வர்றதுக்கு இவ்ளோ நேரம் ஆச்சா?? வழியில எதுவும் பிரச்சனை இல்லையே, இவ்ளோ லேட் ஆகும்னா ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாம்ல..நாங்க எவ்ளோ நேரமா காத்துகிட்டு இருக்கோம் தெரியுமா?” என்று அவள் தோழிகளில் ஒருவள் புலம்ப ராதிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை...

"சரி சரி ராதி வந்தாச்சுல்ல, முதல டிரஸ் செலக்ட் பண்ற வழிய பாப்போம், வாங்க போகலாம்....."

அதற்க்கு மேல் டிரஸ் செலக்ட் செய்வதில் எல்லாரும் பிசி ஆக ராதியோ ஒவ்வொரு நிமிடமும் கண்ணனின் செயலை நினைத்து மயங்கி போய் இருந்தாள்......தான் பழி வாங்க நினைப்பவன் கேட்காமலே தன் ஆசைகளை நிறைவேற்றி வைத்து தன் கனவுகளை புரிந்து கொள்கிறான், இவனை போய் பழிவாங்குவது சரியா என்று ராதியின் மனம் குழம்பி போனது....

இப்படி ராதி குழம்பி போய் இருந்ததது அந்த விதிக்கு பிடிக்கவில்லை போலும், ராதியை மீண்டும் வில்லியாக்க அவளை தேடி வந்தது அவள் நினைத்து பார்க்காத திருப்பம்..

எழுதியவர் : ராணி கோவிந்த் (9-May-17, 3:38 pm)
பார்வை : 540

மேலே