ஓத்தும் ஒழுக்கு முடையவர் செல்லாரே – ஏலாதி 62

'ர்' ஆசிடையிட்ட - ஆ'ர்'த்த - இருவிகற்ப நேரிசை வெண்பா

கூத்தும் விழவு மணமுங் கொலைக்களமும்
ஆ'ர்'த்த முனையுள்ளும் வேறிடத்தும் - ஓத்தும்
ஒழுக்கு முடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கு மிழவுந் தரும். 62 ஏலாதி

பொருளுரை:

கல்வியும் அதற்குத்தக்க ஒழுக்கமும் உடைய சான்றோர்கள் கூத்தாடு மிடத்திலும், திருவிழா நடக்கும் இடத்திலும், திருமணம் நிகழுமிடத்திலும், கொலை பயிலு மிடத்திலும், ஆரவாரிக்கும் போர்க்களத்திலும், இவற்றைப் போன்ற வேறிடங்களிலும் போகமாட்டார்; அங்ஙனம் போவார்களாயின் அவர்களுக்குத் தாழ்வையும் பொருளழிவையுங் கொடுக்கும்.

கருத்து:

கூத்தாடுமிடம் முதலியவற்றிற்குச் செல்லுதல் கீழ்மைத் தன்மையையும் பொருளழிவையும் உண்டாக்கும்.

விளக்கம்:

முனையுள்ளும் என்பதிலுள்ள உள் ஏழனுருபு; இதனை இதன் முன்னுள்ள மற்றைய நான்கனோடுங் கூட்டுக.

ஓத்து, ஓது என்னும் முதனிலையின் றிரிபு. இது தொழிலாகுபெயராய் ஈண்டுக் கல்வியை யுணர்த்திற்று. அவ்விடங்களுக்குச் செல்லுதல் இழுக்கும் இழவும் தரும். ஆர்தல் - கட்டுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-May-17, 10:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே