தெருவோர வாகன விபத்து

============================
பல்வேறு திசையில் பயணிக்கும்
பாதசாரிகள் ஓரிடத்தில் கூட
வழிசெய்கிறது சம்பவத்தின் சத்தம்.

இதயமுள்ள எவரினதோ
கையடக்கப் பேசிகளில் இருந்து
காவல்துறைக்கும்
மருத்துவத்துறைக்கும் தகவல்
பறந்துவிடுகிறது.

காட்சிகள் மாறுவதற்குள்
செல்பிகள் பதிவு செய்துவிடுகின்றன.

ஊடகங்களின் செய்தி பசிக்கு
நொறுக்குத்தீனியும் சிலவேளை
பிரியாணியும் தந்துவிடுகின்றன

கூட்டத்துள் நுழைந்து
உதவுவதான நோக்கத்துள்
விபத்தில் சிக்கியவர்களிடம்
கைவரிசையைக் காண்பிக்கும்
திருடர்களின் அன்றைய வருமானம்
பூர்த்தியாகிறது

வாடிக்கையாளரற்று உறங்கிவிழும்
வாகன திருத்தும் கடைகாரனை
சுறுசுறுப்படைய வைத்துவிடுகிறது.

அபாய ஒலிமூலம்
மரணத்தின் பீதியை அவசரமாய்
வரவழைக்கிறது அவசர ஊர்தி .

நிகழ்வுக்கு காரணகர்த்தா
தப்பிக்க முயலும் அவசரத்தில்
விளையாட வந்துவிடுகிறது இலஞ்சம்.

உயிரின் விலையை
வாகன சாரதிகளுக்கு பாடமாக்கி
முடியும் விபத்துகள், ஒன்றுமறியா
வழக்கறிஞர்களின் வயிற்றுப்பாட்டுக்கும்
வகைசெய்து விடுகின்றன

எல்லோருக்கும் ஏதாவதொன்றை
வழங்கிவிடும் விபத்துகள்
பெரும்பாலும் பாதிக்கப்படும்
குடும்பத்தாருக்கு இழப்பீடுகளை மட்டுமே
பரிசளிக்கிறது.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-May-17, 2:48 am)
பார்வை : 256

மேலே