நம்பிக்கைத் துரோகி இறந்தவனே --- --படித்ததில் தொகுத்தது

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார்.



பொழிப்புரை :
இறந்தவரின் வேறு அல்லர்; உறுதியுடன், [நம்பி] ஐயுறாதவர் இல்லத்தில் தீமை புரிந்து ஒழுகுவார்.


புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.


விரிவுரை :
ஐயமற்று உறுதியோடு நம்பியவர் வீட்டில் தீமை புரிந்து ஒழுகுபவர், இறந்தவரன்றி வேறு அல்லர்.

துளியும் சந்தேகம் கொள்ளாது, உறுதியோடு நம்பி, நட்புடன் சகஜமாகப் பழக அனுமதித்த குடும்பத்தில்,
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தாற்போல், அவரது பெண்டிரை மயக்கி, ஏமாற்றித் துரோகம் இழைத்தவனை என்ன செய்வது? நம்பிக்கைத் துரோகங்களுக்கு மன்னிப்பே இல்லை. பிறகு எப்படிப் பழி தீர்ப்பது? இங்கேதான் வள்ளுவரின் அருமையான பாணி கை கொடுக்கிறது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் என்பது போல், இந்த நம்பிக்கைக் துரோகியைச் செத்தாருள் வைத்துவிடச் சொல்லுகின்றார். அதற்கான பொருள் அவரைத் தீர்த்துக் கட்டுவது அல்ல. அவரை வாழ்வில் இனிச் செத்தவராய் நினைந்து தோழமையோ, பகைமையோ பாராட்டாது இருந்து விடச் சொல்லுகின்றார். இதுவே இங்கு மறை பொருள்.
நம்பிக்கைத் துரோகம் இழைத்த இழியவரைச் செத்தவராய்க் கொண்டு தொடர்பைத் துண்டித்து விட்டால், இனிமேலாவது துரோகங்கள் தொடராது. நிகழ்ந்த இன்னல் விரிவடையாது. சாத்வீகமான, அமைதியான முறையில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது பொறுப்போடு செய்யும் காரியம், கொடுக்கும் தண்டனை என்பது இது தான். கோபத்தை மௌனத்தால் வெல்லுவது போலும், தவறினை நிறுத்துவதோடு, தவறிழைத்தவரையும் தண்டிக்கும் ஒரே விதம்.

நம்பிக்கைத் துரோகமாய் வீட்டு மனையாளை மயக்கித் தூண்டித் தீண்டிவிட்டு, ஒரு கை மட்டும் ஓசை செய்யாதே என்பவர் கடைந்தெடுத்த அயோக்கியரே. மூலக் காரணனே முழுப் பொறுப்பு. அப்படி என்றால் நம்பிப் பழக விடுத்த இல்லத்தானும் பொறுப்பாவானா? அல்ல. ஐயமின்றி நம்பியவர், அறம் மறுவிச் செய்த குற்றம் ஏதுமில்லையே. துரோகம் இழைத்த இழிமகனே, அவனது கெட்ட எண்ணத்தால், பாவச் செய்கையால் தீதிழைத்தவனாகின்றான்.

துரோகங்களுக்கு மன்னிப்புக் கிடையாது. எனவே மறக்காது அவரை உயிரோடு இருந்தும் இறந்தவராய்க் கொண்டு வாழ்வைத் தொடருங்கள். அவர் செய்த தவறிற்குத் தண்டனை இந்த வாழ்வில் மீண்டும் உங்களது நட்பு, அண்மை கிட்டாது இருக்கட்டும்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உறவுகள் கலக்காது இருப்போமாக.


குறிப்புரை :
நம்பிய நல்லவரின் இல்லாளைத் துரோகமாய்த் தீதுசெய்த இழிந்த நண்பர் இறந்தவரே.


அருஞ்சொற் பொருள் :
விளிந்தார் - இறந்தவர்
மன்ற - தெளிவாக, உறுதியாக, மிகுதியாக
தெளிந்தார் - ஐயம் தெளிந்தவர், ஐயுறாதார்


ஒப்புரை :


திருமந்திரம்: 204
இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

திருநாவுக்கரசர்: தேவாரம்:
4.02 திருக்கெடிலவடவீரட்டானம்*
*திருவதிகைவீரட்டானம் என்பதும் இது: 15

பலபல காமத்த ராகிப்
பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங்
கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும்
வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதென்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.

ஔவையார். ஆத்திச்சூடி:
95. மைவிழியார் மனையகல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற

ஔவையார். நல்வழி:
இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 8
அன்ன விசாரம் அதுவே விசாரம் அதுஒழிந்தால்
சொன்ன விசாரம் தொலையா விசாரம்நல் தோகையரைப்
பன்ன விசாரம் பலகால் துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 182
மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே.

சிவவாக்கியர்: 186
அன்னம் இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
வின்னம் இட்ட பேரெலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே.

எழுதியவர் : (13-May-17, 4:44 pm)
பார்வை : 278

மேலே