இயற்கை கொடுத்த இறுதியாத்திரை

உடல்நிலை சரியில்லை உனது தந்தைக்கு
உடனே கிளம்பி வா என உத்தரவிட்ட உறவினர்கள் உடனில்லை இப்போது...

பயணிக்கத் தொடங்கிய பாதிவழியில் பயம்வந்து எனைதுறத்த
விடைபெற்றுச் சென்றது அவரின் கடைநேர மூச்சுக்காற்று அப்போது...

முற்றத்தை அடைந்த மூத்தவனும் முகம்காண்பததற்குள்
முடங்கிப்போனது அவரின் முற்றுபெறா பயணம்...

இடையவன் என்றும் படைகண்டும் அஞ்சியதில்லை அன்றுமட்டும்
தொடைநடுங்கி உடைந்துவிட்டான் தொலைத்துவிட்ட எங்களின் படைத்தளபதி அவன்மடியில் விடைகொடுத்ததற்காய்...

நயம்பட வாழ்ந்து திறம்பட உழைத்து கரம்உயர்ந்து கண்ணியமாய் கரைசேர
கண்களடைத்து எண்ணிய நாட்கள் கணக்கிலடங்காது எனக்கும் உண்டு...

பிழையான என்வாழ்வில் நிலையின்றி நான்திரிய
இளையவன் எனைக்கான இயலவில்லையா அவருக்கு...?

வெண்தாடிக்காரர் விளைவித்த வெற்றுக்காகித தொற்றுநோயை
அந்நாளிலேயே தன்னுள்புகுத்தி தரணியில் வலம்வந்தவர்...

பள்ளிக்காலங்களில் எனை பாலகனாய் காணாமல்
அள்ளி இறைத்த அவரின் அறிவுச் சொற்கள் ஆயிரமாயிரம்...

கழனிக்குச் சென்றால்கூட காலணி கண்டதில்லை அவர் பாதங்கள் இன்று
காலாவதியானதாய் எண்ணி காற்றோடு கறைந்துவிட்டது...

எத்துனைமுறை இனி அழைத்திடினும் எழும்பிடப்போவதில்லை அவரது இன்னுயிர்
எப்படித்தான் ஈடுசெய்வேன் எங்களுக்கு அவரளித்த பெரும்துயர்...

மொழிந்த தோரணை சரியாது சென்றவர் எம் தந்தை
நலிந்த எங்களுக்கு இனி ஆறுதல் தருபவர்தான் யாரோ...!

இல்லாத கடவுளை அவர் ஒருபோதும் வணங்கியதுமில்லை
பொல்லாத இப் பூவுலகில் புரிந்தவர்மட்டுமே புத்திசாலி...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (14-May-17, 9:47 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 109

மேலே