இயற்கை

தொல்காப்பியம் கூறும் நிலம், பொழுது ஆகிய இரண்டின் இயல்பு இயற்கை எனப்படும். சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் தோன்றி, வளர்ந்த ஒவ்வொரு காலச்சூழ்நிலையிலும், அவை பெரும்பாலும் இயற்கையோடு இணைந்து வாழ்வு கண்ட மக்களைப் பற்றிப் பாடப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் காணப்படும் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களுள் ஒருவர் ஔவையார். ஔவையார் பாடல்களில் -இயற்கை பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.
]இயற்கை என்பது இயல்பானது; மனித சக்தியில்லாமல் தானே தோன்றிய பொருள்கள் அனைத்தும் இயற்கை எனப்படும். இதனைத் தொல்காப்பியம்,

நிலம்நீர் தீவளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் -(தொல்.மரபு–90)
இவ்வைந்தும் இணைந்தது உலகம் என்று கூறுகிறது. இயற்கை என்ற சொல்லிற்கு “இலக்கணம், பான்மை, சுபாவம், வழக்கம், நிலைமை, கொள்கை” என்று பல பொருள்களைக் (கழக அகராதி ப.114)-ல் கூறப்பட்டுள்ளது. கௌரா தமிழ் அகராதி, “இயல்பு, ஏது, குணம், தகுதி, திராணி, முறைமை என்று பல பொருள்களைக் கூறுகிறது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “மனிதனால் உண்டாக்கப்படாமல் தானாகவே காணப்படும் (மலைநீர்) போன்ற பொருள் அல்லது (மழைநீர், இடி,காற்று) போன்ற சக்தி என்று பொருள் தருகிறது”. இவ்வாறான பல விளக்கங்களின் அடிப்படையில் “இயற்கை” என்ற சொல் நம்மைச் சுற்றியிருக்கின்ற மனிதனால் உண்டாக்கப்படாத நிலம், நீர், காற்று, வானம், தீ ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது எனக் கொள்ளலாம்.

ஔவையார் கூறும் இயற்கை[
சங்க இலக்கியத்தில் ஔவையார் பாடிய பாடல்களான ஐம்பத்தொன்பதுள் அகம் பற்றியன இருபத்தாறு; புறம் பற்றியன முப்பத்து மூன்று பாடல்கள். இவரது பாடல்களில் இயற்கை வருணைகள் இடம் பெற்றுள்ளன. புறப்பாடல்களையும் இணைத்து நோக்குமிடத்து எல்லா நில வருணைகளும் இடம் பெற்றிருக்க காணலாம்; ஆயினும் மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிக் காட்சிகள் பெருவாரியாகப் பாடப்பட்டுள்ளது. முல்லை முதலான ஏனைய இயற்கை ஓவியங்கள் குறைவே” என்கிறார் மு.வரதராசனார் (பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை-ப.98). இயற்கை அரங்கில் நிலவும் காலநிலை மாற்றங்களை ஔவையார் அந்தந்த நிலைகளுக்கேற்ப மாறிமாறித் தெளிவாக படம் பிடித்துக்காட்டுகிறார்.

அகநானூறு[தொகு]அகநானூற்றில் அவ்வையின் நான்கு பாடல்களும் பாலைத் திணைக்கு உரியனவாக அமைகின்றன.

சூரியன்: “வானம் ஊர்ந்த வயங்குஒளி மண்டிலம்” (அகம் -11) வானத்தில் ஓங்கி உயர்ந்து விளங்கும் நெருப்பு பந்தானது பூமியில் உள்ள அனைவருக்கும் நல்லவர் கெட்டவர் என்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் வெளிச்சத்தைத் தருகிறது என்று பாடுகிறார்.

பறவையும் பூமாலையும்:

“விசும்பு விசைத் தெறித்த கூதளங் கொதையின்
பசுங்கால் வெண்குருகு” -(அகம்273:1-2)
கூதள மலர்களைக் கொண்டு கட்டிய ஒரு மாலையினை வானில் வீசி எறிந்தால் எப்படி இருக்குமோ, அவ்வாறு இருந்தது என்று பறக்கும் நாரைகளின் கூட்டத்தை வருணித்துப் பாடுகிறார். அழகிய நீல வானத்தில் மேகமானது இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

மிகப்பெரிய கொல்லிமலையின் உச்சியில் தோன்றும் நீரானது வேகமாக பெருக்கெடுத்து ஓடிவந்து கீழே வீழ்கின்ற அருவியாக காட்சியளிக்கிறது என்பதை விளக்குகிறார்.

நற்றிணை[தொகு]நற்றிணையில் முல்லைத் திணையில் மூன்றும், நெய்தல் திணையில் இரண்டும், மருதத் திணையில் ஒன்றும், குறிஞ்சியில் ஒன்றும் என ஔவையார் ஏழு பாடல்களைப் பாடியுள்ளார். இடி, மின்னல், என மாலை நேரம் மழை வருவதற்குரிய நிலைகளை வருணிக்கிறார்.

“கேழ்கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படுமலை உருமின் உரற்று குரல்” (நற்-129;7,8)
மேகத்தின் திரள் மலையடுக்கின் சாரலில் வாழும் பாம்புகள் பயப்படுமாறு விரைந்தெழும் இடியோசையானது வருத்துகிறது என, இடியின் துணையுடன் காற்றோடு கலந்து வரும் மேகத்திரளானது அனைவரையும் அஞ்சச் செய்கிறது என்பதைக் கூறுகிறார்.

கதிரவனின் மறைவு கதிரவன் மலையின் பின்பு சென்று மறைந்தான் என்பதை இதழ் குவிந்த நெய்தல் மலரும் மலர்ந்தது. மாலை நேரத்தில் மேற்குத் திசையில் கதிரவன் மறைந்தான், அதனால் கிழக்குத் திசையில் நிழல்கள் நீண்டன, ஞாயற்றின் தோற்றமானது செந்நிறமாகத் தோன்றியது; நிலத்தின் வெப்பம் தணிந்தது என்று வருணிக்கிறார். மேலும்,

“காயாக் குன்றத்துக் கொன்றை போல
மாமலை விடரகம் விளங்க மின்னி
………………………………………………………………
வியலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்
பெயல் தொடங் கினவே பெய்யா வானம்” (நற்-371)
நீலநிறமுடைய வானமானது கருநிற மேகத்தை மறைத்துள்ளது என்றும், அம்மேகக் கூட்டத்திடையே தோன்றும் மின்னல் ஒளியால் பெரிய மலையகத்திலிருந்த பிளவுகளைக் காண முடிகின்றது என்றும், வானகத்தில் தோன்றும் மின்னல் ஒளியானது பளிச்சென வீசிய மேகத்திரளானது மழை பொழியத் தொடங்கியது என்கிறார்.

குறுந்தொகை[தொகு]
வெம்மையான பாலைநில சூறைக் காற்றானது வேகமாக வீசி மரக்கிளையுடன் பறக்கிறது. அவ்வாறு பரவி வரும் காற்று உலர்ந்து இருக்கும் வாகை நெற்றுகளைத் தாக்கி ஒலியை கிளர்ந்தெழச் செய்கிறது என்பதை,

“வெந்திறற் கடுவெளி பொங்காப் போந்தென
நெற்றுவீளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம்” (குறு 39;1-3)
என்று வருணிக்கிறார். மேலும் நீர் வளமும் நில வளமும் நிறைந்த வயல் சூழ்ந்த இடங்களையும் தம் பாடல்களுக்கு பின்னணியாக ஔவையார் அமைத்துள்ளார்.

“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன்” (குறுந்-91)
என்று நீர்நிலைக் காட்சிகளைப் படம் பிடித்து காட்டுகிறார்.

நெருங்கியும் பிணங்கியும் உள்ள பிரம்பங் கொடியில் விளைந்த பழத்தைக் குளத்து மீன்கள் கொத்தும் காட்சியையும் நீர் நிறைந்த குளத்தின் அடியில் தன் அழகிய தண்டினை ஊன்றப் பெற்ற குவளை மலரானது கொடிய கோடை வெயில் வாட்டினாலும் வாடாத தன்மை உடையது. ஏனெனில் அதன் தண்டு நீரில் பதிந்துள்ளது என்பதையும் இவ்வரிகள் தெரிவிக்ககின்றன.

புறநானூறு[தொகு]சங்க அகப்பாடல்களைப் போன்று புறப்பாடல்களில் இயற்கை அதிகமாக இடம் பெறவில்லை. இதற்கான இயற்கையின் தன்மை இடம்பெறுவது குறித்த காரணங்களை ஆராய்ந்த வ. சுப. மாணிக்கம், “வீரம், கொடை, புகழ் என்பனவெல்லாம் புறத்திணைப் பொருளான இத்திணைக்கு முதற்பொருள், கருப்பொருள் என்று அவர் கூறவில்லை. புறப்பாடல்களிலும் முதலும் கருவுமாகும் அமைப்பு முறையனாது காணவில்லை” (வ. சுப. மாணிக்கம்-தமிழ்க் காதல்-ப.208) என்கிறார். ஆதலால் பொதுவாக சங்க இலக்கிய புறப்பாடல்களில் இயற்கைகான இடமும் குறைவாகவுள்ளது. புறநானூற்றில் முப்பத்துமூன்று பாடல்கள் ஔவையார் பாடியுள்ளார். புறப்பாடல்களில் போர், அறம், அரசியல் என்ற நிலைகளில் தான் பெரும்பாலும் காணப்படுகிறது; எனினும் இயற்கையைப் பற்றி சிற்சில இடங்களில் வருணிக்கப்படுகிறது,

ஞாயிறும் திங்களும்: தகடூரில் நல்லாட்சி புரிந்து வந்த அதியன், சேரனுடன் போர்புரிந்து உயிர் துறந்தான். அதனைக் கண்ட அவ்வை அவன் ஆட்சியின் தன்மைக்கும் புகழுக்கும் திங்களையும் ஞாயிற்றையும் ஒப்பிட்டு கூறுகிறார்,

“திங்க ளன்ன வெண்குடை
ஓண் ஞாயி றன்னோன் புகழ்மா யலவே” (புறம் 231;5-6)
அதியனின் ஆட்சி திங்களைப் போல குளிர்ச்சி உடையது; அதியனின் புகழானது ஞாயிற்றைப் போன்றது; ஞாயிற்றின் (கதிரவனின்) ஒளியை என்றுமே யாராலும் மறைக்க முடியாது. அதே போன்று அதியனின் புகழையும் மறைக்க முடியாது என்பது இவ்வரிகளின் பொருளாகும்.

"

எழுதியவர் : (17-May-17, 5:27 am)
பார்வை : 1925

சிறந்த கட்டுரைகள்

மேலே