அன்பு மகனுக்கு

அன்பு மகனுக்கு . . .

அன்பு மகனே....
ஈறைந்து மாத
நிர்பந்தமா...?
கருவறையில்
உன்வாசம் !

செக்கென உணர்வற்று
உன்னை நடுநிறுத்தி
உலகை உனக்குள்ளே
புதைத்திழுத்தேன்
என்மூச்சை. . . .

கடுக்கும் இடுப்போடு
நோவும் கால்மறந்து
கங்காரெனக் கொண்டேனே
உன்னை என்னோடு . . .

கண்டதை நீ உண்டாலும்
காக்காய் கடிகொடுக்க
கண்ணிரண்டும்
கலங்கிநிற்க....
பெற்ற மகன்தானே
பெருமிதமாய்
மனம் தேற்றும் . . .

உன்
கல்வி கட்டணமாய்
கண்டோரின் கையேந்தி
காலமதை கடத்தி வைத்தேன்
கால்தொட்டும் சிலநேரம் . .

உழைப்புக்கு விடிவொன்று
உன்னாலே வருமென்று
காட்டாதா நாள்காட்டி என
பொறுமையின் ஆணிவேரை
நட்டுவைத்தேன் ஆழ்மனதில்
வளர்க்கின்றேன் . . . .
இன்றுவரை
கண்ணீரின் உப்பிலது
பசுமை இழக்கவில்லை . . .

உயிர்கொடுத்த
தாயோடு
உடல் வளர்த்த
மண்மறந்து
கவுரவக் கைதியாக
குடிகொண்டாய்
வெளிநாட்டை. . . .

வாரம இருமுறையாய் . . .
மாதம் இருமுறையாய் . .
வருடம் இருமுறையாய் . .
நம் உறவின் பிரிவு
வளர்ந்தது வளர்பிறையாய் . . .

மகனுக்கு மணமுடிக்க
ஊரெல்லாம் பெண்பார்க்க
வெந்த புண்ணதனில்
வேல்பாய்ச்சி நில்லாது
வெளிநாட்டு சம்பந்தியாய்
வேகவைத்தாய் இதயத்தை . .

ஊரெல்லாம் கூட்டிவைத்த
உன் படிப்புக் கடன்கழிக்க
தெரு இன்றும்
பெருக்குகின்றேன்
எனக்கென்று நல்வழியை
வகுக்காத மதியை எண்ணி . . .

உனைத்தாங்கி
நின்றவளை
நீ தாங்க மறுத்தாலும்
என் பெயர் தாங்கும்
உன் இல்லத்தில்
குடிகொள்ளும் என்மனது . . .
சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (19-May-17, 5:35 pm)
Tanglish : anbu maganukku
பார்வை : 1777

மேலே