காதல் பழக வா-18

காதல் பழக வா-18
பெண் சிங்கம் வேட்டையாடி
ஆண் சிங்கம்
கூட்டில் இருக்குமடா....
இதையறியாமல் என் முன்னே
கர்ஜித்த நீ இன்று
அசிங்கம் என்று ஆகிவிட்டாய்
இல்லை இல்லை ஆக்கப்பட்டாய்
என்னாலே....
புரிந்துகொண்டு மண்டியிடு
என்முன்னே...
இல்லை இனி நீ
தோற்று கொண்டே இருப்பாய் இந்த
பெண் முன்னே......
கண்ணனை பற்றிய நினைவுகளோடே அவனை தேடிய ராதியின் கண்கள் சந்தித்தது ராதியின் ஒன்றுவிட்ட சித்தியை...அம்மா அப்பாவை பிரிந்து வேறு ஒரு புது உலகில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ராதிக்கு அவளின் சித்தியை பார்த்ததும் மனதிற்கு இதமாக இருந்தது....

"சித்தி, சித்தி...."

அத்தனை பெரிய கடையில் அன்று கூட்ட நெரிசல் வேறு அதிகம், ராதி அழைத்தது கூட காதில் வாங்காமல் பர்சேஸில் மும்முரமாயிருந்த காவேரியை அத்தனை கூட்டத்தையும் கடந்து வந்து பிடித்த ராதிக்கு தன் நிம்மதியில் தானே மண்ணை வாரி போட்டது போல் ஆகிவிட்டது....

"சித்தி, நான் ராதி.....எப்படி இருக்கீங்க? உங்களை பாத்து ரொம்ப நாள் ஆச்சு? இப்போல்லாம் வீட்டுக்கு கூட வரமாட்டேங்கறீங்களே, ரொம்ப பிஸி ஆகிட்டீங்களோ"

ராதி சித்தியை பார்த்த சந்தோஷத்தில் தன் நிகழ்கால நிலைமையை கூட யோசிக்காமல் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டுக்கொண்டே போனதில் காவேரிக்கு கடுப்பாகிவிட்டது...

"நீயே வீட்டை விட்டு ஓடிப்போனவளாச்சே, என்னை எந்த வீட்டுக்கு வரலன்னு கேட்கற, உங்கம்மா எப்போ பாரு பெருமையா சொல்லிட்டே இருப்பா, என் பொண்ணு ராதி புத்திசாலி, திறமைசாலி, எல்லாத்தையும் விட அவ எங்க மேல உயிரையே வச்சிருக்கா.....இப்படிப்பட்ட பொண்ணு கிடைக்க நாங்க கடவுளுக்கு காலம் முழுக்க நன்றி சொல்லணும்னு உன்னைப்பத்தியே தான் எப்பவும் பேசுவா, ஆனா இன்னைக்கு அவ உயிரையே வாங்கிட்டல்ல நீ"

"சித்தி நீங்க புரியாம பேசறீங்க"

"எல்லாம் பாத்து புரிஞ்சி தெரிஞ்சி தான் பேசறேன், என் பொண்ணு கல்யாணத்துக்கு அழைக்கலாம்னு போனா அவ பொண்ணு ஓடிப்போய் கல்யாணம் பண்ண தகவல் சொல்றா, நீ இப்படி பண்ணுவேன்னு நான் கூட நினைச்சி பார்க்கல, பாவம் அவ, இவ்ளோ பெரிய ஷாக்கால மைல்டு அட்டாக் வந்து இப்போ தான் வீட்டுக்கு வந்து சேர்ந்துருக்கா....நல்ல வேளையா அவளை பாத்துட்டு பர்சேஸ்க்கு வந்தோம், இல்லைனா இப்படி இங்க உன்ன பார்த்ததும் உறவு கொண்டாடிட்டு உனக்கும் சேர்த்து அழைப்பு கொடுத்துருப்போம்....உங்க அம்மா உனக்கு என்னலாம் செஞ்சிருப்பா,ஆனா காதல்னு ஒன்னு வந்தா அப்படிப்பட்ட அம்மா அப்பாவையே தூக்கி போட்ருவீங்கல்ல, சரி உன் அம்மாவை விடு...உன் அப்பா எவ்ளோ நல்ல மனுஷன், இப்படிப்பட்ட அப்பா கிடைக்கலையேன்னு நான் கூட வருத்தப்பட்டு சொல்லிருக்கேன், அந்த அளவுக்கு ஒரு பிரெண்ட் மாதிரி தானே உன்கிட்ட பழகினாரு அவரை போய் கலங்க விட்டுட்டு வந்திருக்கயே, நீயெல்லாம் எப்படி நல்லா இருப்ப...மரியாதையா இங்க இருந்து நகர்ந்து போ, இதுக்கு மேல என் முன்னாடி இருந்தா நான் எதாவது சபிச்சிட போறேன், உன்னையும் என் பொண்ணா பாத்துருக்கேன், நான் சபிச்சி அது பளிச்சிடுச்சினா காலம் முழுக்க அது எனக்கு மனசு கஷ்டத்தை குடுக்கும், தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பு.... நீ என்ன கிளம்பறது, நான் கிளம்பறேன், இனி எப்பவும் என் மூஞ்சிலயே முழிக்காதே" என்று காவேரி கடையிலிருந்து கிளம்பி போனாள்..."

காவேரியின் இத்தனை கடுமையான பேச்சை கேட்டதும் ராதிக்கு கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.....முன்பெல்லாம் அடிக்கடி ராதி வீட்டிற்கு வரும் காவேரி ராதியை தான் தன் முதல் மகள் என்று கொஞ்சிக்கொண்டு அவ்வளவு பாசமாக இருப்பார், அந்த பாசத்தில் தான் ராதி சித்தியிடம் பேச வேண்டும் என்று ஓடி வந்தாள், ஆனால் சித்தி கூட தப்பாக நினைத்துக்கொண்டு குற்றம் சாட்டுவது ராதியை மேலும் வேதனைப்படுத்தி அவள் மறந்திருந்த பழிவாங்கும் எண்ணம் மீண்டும் அவளுக்குள் துளிர்விட காரணமாகிவிட்டது.........

ராதி வேதனையோடு திரும்பி வந்தாள்....கண்ணனோ அவன் தங்கைகளோடு நின்றுகொண்டு சிரித்து கொண்டிருந்தான், அதை பார்க்க பார்க்க ராதிக்கு கோபம் ஏறிக்கொண்டே செல்ல அவனை இந்த நிமிடமே எதாவது செய்தாக வேண்டும் என்ற வெறி அவளுக்குள் உருவாக ஆரம்பித்தது......
என்ன செய்வது, ராதிக்கு ஒன்றும் புரியவில்லை...அவள் குணம், அறிவு என அத்தனையையும் கோபம் மறைத்துக்கொண்டிருக்க கண்ணனை எப்படியாவது வேதனைபடுத்தவேண்டும் என்று அவள் பழிவாங்கும் மனம் துடித்துக்கொண்டிருக்க யோசனையோடு கடையை சுற்றி வந்தவளுக்கு கையில் வந்து சிக்கியது கண்ணனை பழிவாங்கும் திட்டம்...
கண்ணா என் சித்திக்கிட்ட என்ன பேசவிடாம பண்ணல்ல, உன் குடும்பத்தை விட்டு உன்ன பிரிக்கிறேன் இரு என்று மனதுக்குள் ஆர்பரித்துக்கொண்டு அவள் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தாள்...

கண்ணன் பார்க்கும் படி அவன் முன்பாக ஒரு சல்வாரை எடுத்துக்கொண்டு ட்ரைல் பார்க்கிறேன் என ட்ரைல் ரூம்க்கு பக்கம் செல்ல கண்ணனோ ராதியை எதிர்பார்த்து கொண்டு காத்திருந்தான்...

புடவை செலெக்ஷனிலே எல்லாரும் பிசியாக இருக்க கண்ணனுக்கோ ராதி இதுவரை வராததை கண்டு அவளுக்கு எதாவது பிரச்சனை நேர்ந்திருக்கலாம் என தோன்ற வைத்தது....

அதற்கு மேலும் அவள் வராமல் போனதால் அந்த கடையின் கார்னரில் இருந்த ட்ரைல் ரூமிற்க்கு அருகில் வந்தவன் அங்கு இருந்த ரெண்டு ட்ரைல் ரூமும் லாக் ஆகி இருந்ததால் இதில் ஒன்றில் ராதி இருக்கலாம் என அங்கேயே நின்று விட்டான்....

கண்ணன் வந்து நின்று ரெண்டு நிமிடம் கூட ஆகிருக்காது, ட்ரைல் ரூமில் இருந்து வெளிவந்த பெண் கண்ணன் முகத்தில் பளார் என அறை விட கண்ணனோ ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றுவிட அடுத்த ட்ரைல் ரூமில் இருந்து வெளிவந்த பெண்ணும் அவனை பார்த்து தெலுங்கில் திட்ட ஆரம்பித்துவிட்டாள்....

எதற்கு அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என புரியாமல் கண்ணன் தவிக்க நடந்த கலாட்டாவால் கண்ணனின் குடும்பம் விவரம் அறிந்து அங்குவந்து சேர்ந்தது...

"என்னப்பா ஆச்சு, இங்க என்ன நடக்குது"

"பெரியப்பா என்னனு தெரியல, நான் ராதிய தேடி தான் இங்க வந்தேன், ஆனா இவங்க தப்பா புரிஞ்சிகிட்டு என்கிட்ட சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க"

"இங்க பாருங்கம்மா, அவரோட மனைவியை தேடிட்டு தான் அவர் இங்க வந்திருக்காரு, நீங்க தேவை இல்லாம பிரச்சினை பண்றிங்க"

"சார், அவர் பொய் சொல்றாரு.... இங்க யாரும் இல்லாததால அவர் என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண பாத்தாரு, அதுக்காக தான் நான் அவரை அடிச்சேன்"

"இங்க பாருங்க எங்க பையன் ஒன்னும் அப்படிபட்ட ஆள் இல்லை, நீ தப்பா புரிஞ்சிகிட்டு அவனை அடிச்சதும் இல்லாம அவன்மேலேயே பழி போடறியா?பொண்ணா இருக்கியேனு பார்க்கறேன் இல்லனா நடக்கறதே வேற"

ரெண்டு தரப்பும் மாறி மாறி சண்டை போட கடைசியில் சண்டை சிசிடிவி கேமராவை பார்த்து உண்மையை நிரூபிப்பது என்பது வரை போக அந்த நேரத்தில் ராதி சரியாக ஆஜர் ஆனாள்.....

"இவங்க தான் என் வைஃப், இவங்கள தேடி தான் இங்க வந்தேன்...அவங்ககிட்டயே கேட்டு பாருங்க....ராதி நான் உன்ன தேடி தான் வந்தேன், ஆனா இவங்க என்னவோ நான் மிஸ்பிஹேவ் பண்ணேன்னு என்னென்னவோ சொல்றாங்க, நீயே இவங்ககிட்ட உண்மைய சொல்லு"
கண்ணன் தான் களங்கமில்லாதவன் என நிரூபிக்க போராட ராதியோ உள்ளுக்குள்ளே கண்ணனின் நிலைமையை எண்ணி ரசித்து கொண்டிருந்தாள்...

"ராதி என்னம்மா பாத்துட்டு இருக்கே, கண்ணன் தான் கேட்கறான்ல, பதில் சொல்லு"

"ஆமாங்க, நான் ட்ரைல் ரூம்க்கு வர்றது பாத்துட்டு தான் அவரும் வந்தாரு, அவரு என்ன தேடி தான் வந்துருப்பாரு, அவரு பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கறவரு இல்ல...தயவுசெஞ்சு இந்த பிரச்னையை இத்தோட விட்ருங்க..."என்று கெஞ்சும் வண்ணம் ராதி பேச அந்த பிரச்சனை அங்கேயே முடிந்து சந்தோஷமாக போன குடும்பம் சோர்வும் சோகமுமாக வீடுவந்து சேர்ந்தது...

வீட்டுக்கு வந்து சேர்ந்து ஹாலில் நுழைந்ததும் ராதியின் தோழிகள் அவளை பார்த்து கேட்ட முதல் கேள்வி இதுதான்...

"ராதி நீ எப்போ ட்ரைல் ரூமுக்கு போன, நீ எங்ககூட தானே இருந்த"

வீட்டுக்கு வந்த அத்தனை பேரும் இந்த கேள்வியில் குழம்ப ஆரம்பிக்க கண்ணனும் ஒன்றும் புரியாமல் ராதியின் முகத்தை பார்த்தபடி நின்றுவிட்டான்.....

"இப்போ எதுக்கு இந்த பேச்சு, எல்லா பிரச்னையும் தான் முடிஞ்சிடுச்சு இல்ல, அப்புறம் எதுக்கு திரும்ப ஆரம்பிக்கற"

"இல்ல ராதி, நீ ட்ரைல் ரூம்க்கு போகவே இல்ல, எனக்கே நல்லா தெரியும், ஆனா நீ போனதா சொல்ற, அது தான் குழப்பம்"

"மித்து, ப்ளீஸ், இந்த விஷயத்தை இத்தோட நிறுத்து, இப்போதான் ஒரு பிரச்சனை முடிஞ்சி வீட்டுக்கு வந்து சேர்ந்துருக்கோம், நீ வேற ஆரம்பிக்காத"

"ராதி, இங்க என்ன நடக்குது, உன் பிரெண்ட் என்னமா சொல்றா? நீ ட்ரைல் ரூம்க்கு போகலையா, ஆனா நீ ட்ரைல் ரூம்க்கு போய் வராததால் தான் கண்ணன் அங்க போனேனு சொன்னானே"
அங்கு இருந்த அத்தனை பேருக்கும் குழப்பம் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருக்க அவர்களின் குழப்பத்தை வைத்து ராதி விளையாட ஆரம்பித்தாள்....

"மாமா, கண்ணன் மாமா சொன்னது தான் நிஜம்,இதுக்குமேல இத பேச வேண்டாம், நான் உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன், நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க"

"ராதி பேச்சை மாத்தாத, அங்க என்ன நடந்துச்சுனு சொல்லு"

ராதி உள்ளுக்குள் தன் திட்டம் நிறைவேறிய சந்தோஷத்தில் வெளியே அழுது நடிக்க ஆரம்பித்தாள்...

"மாமா, அது வந்து....நான் ட்ரைல் ரூம்க்கு போகவே இல்ல, ஆனா கண்ணன் மாமா எதுக்கு அப்படி சொன்னாருன்னு தெரியல, அதுவும் இல்லாம அங்க அவரை பத்தி தப்பு தப்பா சொல்லி அந்த பொண்ணு சண்டை போட்டுட்டு இருந்தது …அதனால தான் நானும் கண்ணன் மாமா சொன்னதுக்கு ஆமான்னு சொல்லிட்டேன்....இருந்தாலும் கண்ணன் மாமா தப்பா எதுவும் செஞ்சிருக்க மாட்டாரு, உங்க எல்லார்கிட்டயும் கெஞ்சி கேட்டுக்கறேன், இந்த விஷயத்தை பத்தி திருப்பி திருப்பி பேசி சங்கட படுத்தவேண்டாம்...."என்று ராதி கையெடுத்து கும்பிட அங்கிருந்தவர்களுக்கு கண்ணன் எதோ தவறு செய்ததை போல தோன்ற ஆரம்பித்துவிட்டது….ஒருபக்கம் கண்ணன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான் என தெரிந்தும் ராதி எதையோ மறைத்து பேசுவதை போல் இருக்க கண்ணன் மேல் கொஞ்சம் நம்பிக்கை குறைந்து சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது....ஒருவேளை கண்ணன் பெண்விஷயத்தில் பலவீனமானவனோ, அன்று ராதியை கூட நடுஇரவில் நடுஹாலில் வைத்து எதற்கோ வற்புறுத்தியது மாதிரி இருந்ததே, ராதி கூட ஏதோ சொன்னாலே,கண்ணன் தான் வற்புறுத்தியதாய்....ஒருவேளை கண்ணன் அப்படி தானோ என்று சிலருக்கு தோன்ற ராதியின் கெஞ்சலால் அந்த பேச்சு அப்போதைக்கு முடிக்க வேண்டியதாய் போயிற்று...

"ராதி என்ன சொல்ற, எதுக்கு இப்படி மாத்தி சொல்ற, பெரியப்பா அவ சொல்றமாதிரி இல்லை" என்று கண்ணன் விளக்கம் தருவதற்குள் "கண்ணா இதப்பத்தி இனி பேசவேண்டாம், எல்லாரும் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுங்க, யாரும் இதப்பத்தி இனி பேச வேண்டாம் என பெரியவர் கூற அத்தனை பேரும் கண்ணனை பார்க்க தயங்கிய படி அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்...

ராதி மட்டும் அங்கயே கண்ணனை பார்த்தபடி நின்றுகொண்டு புன்னகைக்க அப்போதுதான் கண்ணனுக்கு ராதியின் திட்டம் புரிய ஆரம்பித்தது..

"ராதி என்னடி ஆச்சு, திடிர்னு என்கிட்ட வந்து வீட்டுக்கு போனதும் எல்லார் முன்னாடியும் நீ ட்ரைல் ரூம் பக்கம் போகவே இல்ல, எங்க கூட இருந்துட்டு எதுக்கு பொய் சொன்னனு கேட்க சொல்லிட்டே, எனக்கு ஒண்ணுமே புரியல, நீ சொன்ன மாதிரி நானும் செஞ்சுட்டேன், கடைல என்ன ஆச்சுன்னு சொல்லு , எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு"

"இருடி சொல்றேன் கொஞ்சம் பொறுமையா இரு"....
தான் செயல்படுத்திய திட்டத்தை மெதுவாக விளக்க ஆரம்பித்தாள் ராதி

எழுதியவர் : ராணி கோவிந்த் (19-May-17, 5:45 pm)
பார்வை : 487

மேலே