பரீட்சை முடிவு

பரீட்சை முடிவு வெளிவந்த நிலையில் போடும் பதிவுகளில் என் பங்களிப்பு முக நூலில் நேற்றே செய்துவிட்டதால் ஒரு நிறைவு இருப்பினும், இந்த நிகழ்வைக் குறிப்பிடாதது, மனதுக்குள் ஒரு நெருடலாகவே இருந்தது...

நமது நிகழ்வுகள் எல்லாமே பல ஆண்டுகளுக்கு முன்னேதான்....
கொசுவத்தி சுருள் வேகமாகச் சுழன்று பின்னோக்கி மறைய...
+ + +

"உடனே வாங்க வீட்டுக்கு... உங்க பெண் இங்கு அழுது கொண்டிருக்கிறாள்"
தாக்கல் மோக்கல் இல்லாமல் தகவல் சொல்வதில் என் மனைவிக்கு நிகர் அவள்தான். என்ன ஏது என்றால் "வாங்க சொல்கிறேன்".

அலுவலகத்தில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவனை திடுக்கிட வைத்தது அந்த அலைபேசி அழைப்பு. (நான் வீட்டில் இருப்பதை விட அலுவலகத்தில் இருக்கும் நேரம் அதிகம். இந்த நிலையே என் மனைவிக்கு என்னை அதிகாரமாக அலுவலகத்திலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் கூப்பிடும் உரிமையையும் தந்தது என நினைக்கிறேன்.)

தனியார் நிறுவனமாதலில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால், உடனே என் வெஸ்பாவை உதைத்துக் கிளம்பி விட்டேன்.. என்னவாக இருக்கும் என்று வழி நெடுக சிந்தனையாய் அடுத்த அரை மணி நேரப் பயணம் சென்னை கோடை வெய்யிலில் இனிதாய் நகர்ந்தது.

வீட்டில் என் பெண் அழுது கொண்டிருக்க அவள் தோழிகள் இருவர் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர்..

விஷயம் இதுதான். B.E. முதல் ஆண்டுப் பரீட்ச்சையில் ஒரு பாடத்தில் ஃபெயில். அவளை சமாதானப் படுத்தி, "செப்டெம்பரில் எழுதிக் கொள்ளலாம், இதற்கெல்லாம் அழலாமா..." என

உக்கிரமா என் பக்கம் திரும்பி, "அதெல்லாம் எழுத மாட்டேன்.. முதலில் யூனிவர்சிட்டியில் (மதறாஸ்) விளக்கம் கேட்டுச் சொல்.. பதில் வந்த பின் தான் அந்தப் பரீட்சை எழுதுவேன்." .

என் பெண் பிடிவாதம் பிடித்தாள் என்றால் தானகவே முயல்கள் நான்காம் காலை வெட்டிக் கொள்ளும், நான் எம்மாத்திரம்.. 'சரி' என்று சம்மதித்தேன்..

இவள் B.E . வந்ததே ஒரு தனிக் கதை.. +2வில், அரசு/தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டண (ஃப்ரீ) சீட்டிற்கு சற்றே குறைவான மதிப்பெண் என்பதால் அரசு கட்டண இடம் கிடைக்கவில்லை... கட்டணச்சீட்டுக்கு அப்பா தயார் என்றாலும் பெண்ணுக்கு அதில் விருப்பம் இல்லை.. (இந்த விஷயத்தில் இரண்டு பெண்களின் பிடிவாதம் அப்பாவை அதிக பணச் சுமையில் இருந்து காப்பாற்றியுள்ளது எனலாம்.. மேல் படிப்பும் ஒரு வீண் என்பது அவர்கள் இருவர் கருத்து. (வென்றும் நிரூபித்தனர்). ஆதலால் அருகில் உள்ள மகளிர் கல்லூரியில், BSc, இயற்பியல், சேர்த்தாகி விட்டது.. காலாண்டு பரீட்சையும் முடிய, மாலையில் APTECH-ல் கணினிக் கல்வி..

டிசம்பர் மாதம் அந்த பொறியியல் கல்லூரியில் இருந்து அந்த ஓலை வந்தது வாழ்க்கையில் ஒரு திருப்பம்.

துவங்கி ஒரு வருடம் முடிந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டுக்கு ஆள் சேர்ப்பு முயற்சி. மயிரிழையில் ஃப்ரீ சீட் தவற விட்டவர்களுக்கு (பொறி) பொறியியல் படிக்க அரிய வாய்ப்பு.. - ஃப்ரீ சீட்டுடன், ரூ20,000/- டொனேஷன் மட்டுமே.. (வருடத்திற்கு ரூ10,000/- என்ற தவணை வேறு). சேர்த்து விட்டேன்..

(இன்று பிரபல தன்னிலை யூனிவர்சிடியாகத் திகழும் அந்த ஆரம்ப நிலைக் கல்லூரியின் வாசலில் தினம் காலையில் கல்லூரி துவங்கும் நேரத்தில் நின்று கொண்டிருப்பார் அதன் தாளாளர்.. அப்பொழுது ஒரு முறை பிருந்தாவன் விரைவு வண்டியில் அவரைச் சந்திக்க, கல்லூரியை முன்னேற்ற அறிவுரை கேட்டார்.. அரசியலில் அவர் முன்னேற்றம் போலவே கல்லூரியும் முன்னேறியது... மேலே சொன்னது போல் today it is a Deemed University)

ஒரு வருடப் படிப்பை நான்கு மாதம் படித்ததில் எங்கோ கோட்டை விட்டிருப்பாளோ என்று மனதுக்குள் லேசான உறுத்தல் இருந்தாலும், யூனிவர்சிடி சென்று ஒரு கடிதம் கொடுத்தேன்..

அங்கிருந்தவர், ஒரு இரண்டு வாரம் கழித்து வாருங்கள் பார்த்துச் சொல்கிறேன் என்றார்.. இரண்டு வாரம் கழித்துச் சென்றேன்.. மீண்டும் ஒரு இரண்டு வாரம் கழித்து வரும்படிக் கேட்டுக் கொண்டார்... இப்படி நாட்கள் கழிய, அடுத்த செமெஸ்டர் பரீட்சை வர, சொன்னபடி பெண் அந்தப் பரீட்சை எழுதவில்லை.. "முதலில் நீ யூனிவர்சிடியிலிருந்து பதில் வாங்கி வா" என்று எனக்கு கெடு வைக்கிறாள்..

நானும் ஒவ்வொரு வாய்தாவையும் தீவிரமாகப் பணிந்து சென்று கொண்டிருக்க, வரும் வழியில் மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு வருகை தரும் காக்காவும் பரிச்சயமாக, கடக்கும் போழுதெல்லாம் என்னைப் பார்த்து "கா... கா..." எனும்.

இதைத் தவிர ஒரு இஸ்லாமிய சகோதரர் என்னைக் கவனித்திருக்கிறார்.. அந்த அலுவலகத்தின் மேலாளர் போலும்.. ஒரு நாள் என்னை நிறுத்தி, "நீங்கள் ஏன் அடிக்கடி இங்கு வரீங்க..." என்றார். நான் விவரம் அனைத்தையும் சொல்ல, தகவல்களைப் பெற்றுக் கொண்டவர், "இரண்டு நாள் கழித்து வாருங்கள்... நானே என்னவென்று பார்க்கிறேன்" என்றார்..

இரண்டு நாள் கழித்து நான் ஆஜர்.. என்னைப் பார்த்தவுடன் புன்னகையுடன் வரவேற்றவர், உங்கள் பெண் பாசாகி விட்டாள்.. சிவில் மெக்கானிகல் இரண்டு தாள்களில் ஒரு தாள் மதிப்பெண்ணை விட்டு விட்டிருக்கிறார்கள், இரண்டும் சேர்த்து 65/100. ஒரிஜினல் மார்க் லிஸ்ட் கொண்டுவாருங்கள் திருத்திய ஒன்றைத் தருகிறோம்.. பெண்ணுக்கு வாழ்த்துக்களையும், தவறுக்கு வருத்ததையும் தெரிவித்தார்...

மிக மகிழ்ச்சிப் பெருக்கில் நன்றி கூறி, வெளிவர, உழைப்பாளர் சிக்னல் சிவப்பையும். காக்காவையும் கவனிக்க வில்லை...

போலீஸ்காரர் நிறுத்தி, கையில் இருந்த 30ரூ வாங்கி விட்டார்...
---முரளி

எழுதியவர் : முரளி (20-May-17, 9:21 am)
Tanglish : pareetchai mudivu
பார்வை : 123

மேலே