சுக நித்திரையில்

எங்கும் நிறைந்திருக்கும்
எம்பெருமானே!
வரம் ஒன்று தரவேண்டி
வணங்குகிறேன், அய்யனே!

மண்ணில் வாழும் வரை
மறந்து போகாமல்
நற்புண்ணியங்கள் நாளும்
நான் செய்திடல் வேண்டும்

தோல்விகள் வந்தென்னைத்
தொடர்கின்ற போதும்
உள்ளத்தில் நல்லமைதி
குடிகொள்ள வேண்டும்

உளிகொண்டு செதுக்கி
என்னை சிலையாக்கினாலும்
உலை கொதிக்க எரிவதற்கு
விறகாக்கினாலும்

இல்லையென்று வருவோர்க்கு
இல்லையென்று சொல்லாத
நல்லெண்ணம் கொண்ட
நல்லுள்ளம் வேண்டும்

வாரி வழங்குகின்ற
வாழ்வென்ற போதும்
கூடி உண்ண பலர் வந்து
கூடுகின்ற போதும்

அள்ளக்குறையாத
அட்சய பாத்திரம்போல்
எப்போதும் என் வாழ்க்கை
எல்லோருக்கும் பலனளிக்க வேண்டும்

சக்தியுள்ள போதே நான்
சாய்ந்துவிட வேண்டும்
சுக நித்திரையில் என் உயிர்
செத்துவிட வேண்டும்

எழுதியவர் : கோ. கணபதி. (21-May-17, 9:12 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : suga niththiraiyil
பார்வை : 65

மேலே