உழுத உழவன் அழுகும் அவன் மனம்

அழுது பார்த்திட்டான் ஆறுதல் இல்லை
பழுது பார்த்திடவே வாழ்வை முடியல்ல‌
தொழும் அவன் நிலமோ வறண்டு
முழுதும் இருக்கிறான் அவன் துவண்டு

முப்போகம் விளைஞ்சதெல்லாம் எங்கோ ஞாபகத்தில்
மும்மாரி பொழிஞ்சதெல்லாம் கனவாக நினைவலையில்
தப்பெல்லாம் சரியாக நடக்குதவன் வாழ்வினிலே
சரிமட்டும் தவறாமல் ஓடிப்போச்சு எங்கேயோ

மனசெல்லாம் காயங்கள் மனதிற்குள் ஓலங்கள்
பாதிநிலம் வித்துப்புட்டான் மீதிநிலம் எதுவரையோ
நிம்மதியென்று ஒன்றிருக்கா எல்லோரையும் கேட்டிருக்கான்
நிலம்படும் பாடுபார்த்து தன்பாடு மறந்திருக்கான்

ஊருக்குச் சோறிடவே உழவனவன் ஏர்பிடிச்சான்
பேருக்கு உண்டுஅவன் நிலமுழுது உழைச்சிருந்தான்
யாருக்குத் தெரியும் அவன்வாழ்க்கை இப்படியாகுமுன்னு
பாருக்குள் நடக்கும்கதை பலரின்னும் அறியலையே

ஏதோ வாழுகிறான் ஓகோன்னு வாழ்ந்தவந்தான்
கொள்ளை அடிச்சவ‌னெல்லாம் உலகத்தை சுத்தயில‌
சோறு போட்டவந்தான் பித்துபிடிச்சு அலையறானே
வாழும் காலம்வரை இதுவென்ன தொடர்கதையோ

விவசாயி யாரெனவே காணாத தலைமுறையே
விவசாயம் உயர்ந்ததென்றால் என்னவென்று கேட்குதின்று
பண்டிகைக்கும் திருவிழாக்கும் இட்லி சாப்பிட்டவன்
குடும்பமே அழுதிருக்க பட்டினி கிடக்குறானே....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-May-17, 6:55 pm)
பார்வை : 63

மேலே