வரம்பெற்ற தமிழ்காக்க கரம்கொடு எம்தமிழா

நிறைகுளம் நீர்வழிய அதனிடையில் பிறைநிலவும் நாட்டியமாட என
திரைகாணா எந்நாட்டில் செந்தமிழுக்கு குறைகளில்லை அன்றையநாளில்...

சிலகாலம் சிறைபிடித்த சிறுநாட்டு மொழியிடம்நாம் என்றோ சிரம்தாழ்த்த
சிலந்திவலையில் சிக்கிய சிறுவண்டின் நிலையாய் எம்மொழி மீளாது பயணிக்கிறது இதுவரை...

பிறழாது தமிழ்பேசி வாழ்ந்திட்ட பெருமக்கள் பதித்தசுவடுகளை
வரையாது போனதனால் இன்று வாய்க்கால்மேட்டில் இளைப்பாறுகின்றது...

அரசு மருந்தகத்தில்கூட ஆளும் தமிழ் இன்றில்லை
ஆதாரம் காண்பதற்கு ஆவணங்கள்கூட அருகில் இல்லை...

தேனிசைத் தமிழினை தினந்தோரும் தேடிப்பார்க்கின்றேன்
தேரோடும் வீதியில் தேவாரம்பாடும் பூசாரி வாயிலாவது பூத்திடுமா என்று...

பாய்ந்தோடும் மகிழுந்தில்கூட இன்தமிழ்தனை எழுதிக் காணவில்லை
பழுதுபட்ட பரணியில்கூட வண்டமிழ் வாழ்ந்த சுவடுகள் இல்லை...

நடை உடை பாவனைவரை அந்நியன் நாகரிகமே ஆட்கொள்கிறது
விடைகொடுத்த உடைவாளும் எடைகுறைந்து மெலிந்துவிட்டது...

செல்லாது செம்மொழியென சேக்கிழாரா எழுதிவைத்தார்...?
சொல்லாடல் மட்டுமல்ல பிழையானதென சொல்லிக்கொள்ள...!

வயதெட்டிய குமரிகள் வாரிச்சுருட்டிய சேலைகளை
வயற்காட்டு வரப்புகளில் வளர்ந்து நிற்கும் பொம்மைகள் வாங்கிக்கொண்டது...

நாணிச்சென்றே நளினம்காத்த நங்கையர்கள் எல்லோரும்
மேனியைகாட்டியே மேனாட்டு நாகரிகத்தை பேணிக் காக்கின்றனர்...

அரசமரப் பிள்ளையார்கூட துறம் துறக்கும்நிலை
ஆட்சிகொண்ட தமிழன்னைகூட ஆடம்பரமாய் உடுத்தப் பிழை...

உறைகிழிந்த கூர்வாளில் துருப்பிடித்த சுவடுகளாய்
கறைபடிந்த தமிழ்வரிகள் தரம் உயர தவறிவிட்டதா...?

செங்கோல் உயர்த்தி சினம்கொண்டு செம்மைபடுத்த சீறிவந்திடு எம் தமிழன்னையே
மங்காத நம்மொழியை மாற்றார்மொழிக்கும் மேலானதாய் மேலும் செம்மைப்படுத்திடவே...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (23-May-17, 9:32 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 121

மேலே