காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை- பகுதி 4

காமம், பிரம்மச்சாரியம், சமூகம், மனிதர்கள், குழந்தைகள், பெண்கள், பால், பாலியல் தன்மை, பாலியலுறவுகள் வண்புணர்வுகள் என்பன தொடர்பாக கடந்து மூன்று பகுதிகளிலும் ஒரளவு விரிவாக பார்த்தோம். இக் கட்டுரையினடிப்படையில் ஆணாதிக்க மற்றும் சமய ஆதிக்கம் நிலவும் சமூகங்களில் எவ்வாறு காமம் மற்றும் அது தொடர்பான அறிவுகள் அடக்கப்பட்டு மறுபுறம் பிரமச்சாரியம் சமூகத்தில் அந்தஸ்தில் உயர் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை பெண்களும் குழந்தைகளும் எவ்வாறு பாலியலடிப்டையில் சுரண்டப்பட்டு அடக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தோம். மேலும் மனிதர்களின் பால் (sex), பால்தன்மை (gender) மற்றும் பாலியல் தன்மை (sexuality) அடையாளங்கள் பாலியலுறவுகள் (sexual behaviors) என்பன எவ்வாறு ஆணாதிக்க ஒருதார இருபாலுறவு சமூகத்தால் இரு எதிர் எதிர் முனைகளாக மட்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்தக் கட்டமைவுகளுக்கு அப்பாற்பட்டவர்களை உடல் குறைபாடுடையவர்களாக அல்லது உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட மனப்பிறழ்வு கொண்டவர்களாக சித்தரிக்கப்டுவதையும் பார்த்தோம். இறுதியாக மனிதர்களிடம் உருவாக்கப்பட்ட இவ்வாறான உளவியல் சிக்கல்களையும் மற்றும் குழந்தைகள் இயந்திரமயமாக நெறிப்படுத்தல், பெண்கள் மீதான பாலியலுறவுகளில் நடைபெறும் வன்புணர்வுகளையும் பொதுவாக நடைபெறும் வன்புணர்வுகளையும் அறிந்தோம். இவற்றிலிருந்து நம்மை எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பாகவும் மற்றும் மாற்றிடாக எவ்வாறான ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுவது என்பது தொடர்பாகவும் பார்த்தோம். இந்த அறிவின் அடிப்படையில் மனிதர்களின் பாலியலுறவுகள் வன்புணர்வுகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் போன்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் இவ்வாறன செய்திகள் தொடர்பாக ஊடகங்கள் எந்தளவு சமூகப் பொறுப்புணர்வுடன் வெளியிடுகின்றன என்பதையும் நான்காவதும் இறுதிப்பகுதியுமான இந்தப் பகுதியில் பார்ப்போம்.



பொதுமனிதர்களது குறிப்பாக பிரபல்யமானவர்களது பாலியலுறவுகள் வன்வுணர்வுகள் துஸ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகளை பொது மனிதர்கள் மற்றும் ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன என்றும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன எனவும் விமர்சனபூர்வமாக பார்ப்பது முக்கியமானது. இவ்வாறன செய்திகளை வாசிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் இவை தொடர்பான ஒரு அடிப்படைப் பார்வை இருக்கும். இந்தப் பார்வையானது நம்மை ஆதிக்கம் செலுத்தும் அல்லது நாம் தேர்த்தெடுத்த கருத்தமைவின் அல்லது சமூக சமய நம்பிக்கையின் அடிப்படையிலமைந்ததாக இருக்கும். இதனால் நம் ஒவ்வொருவருக்கும் வேறுவேரான கருத்துக்கள் இச் செய்திகள் தொடர்பாக இருக்கும். இதேவேளை நமது கருத்துக்களை ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக கருவியாக ஊடகங்களும் செயற்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது இவ்வாறான விடயங்கள் தொடர்பாக பொதுவான ஒரு கருத்து மேலாதிக்கத்தை பொது மனிதர்களிடம் உருவாக்குகின்றது. ஆகவே பொதுசன ஊடகங்களுக்கு இவ்வாறன செய்திகளை வெளியிடுவதில் சமூக பொறுப்புணர்வு உள்ளது. ஆனால் குறிப்பிட்ட செய்தி ஒன்றை பிரசுரிக்கும் ஒவ்வொரு ஊடகமும் தமக்கான அரசியல் மற்றும் சமூக கருத்துக்கள் நோக்கங்களை அடிப்படையிலையே வெளியீடுகின்றன. இது அவர்களது கருத்துச் சுதந்திரமாக இருந்தபோதும், நாம் அச் செய்திகளை அது வெளிப்படுத்தும் கருத்துக்களை அப்படியே உட்கொள்ளாது விமர்சனபூர்வமாக பார்க்கவேண்டியது நமது பொறுப்பாகின்றது. குறிப்பாக சாமியார்களின் அல்லது மத குருமாரின் பாலியல் செய்திகளை வெளியிடும் பிரதான ஊடகங்கள் தமது ஊடகங்களை பிரபல்யப்படுத்துவதிலும் வருமானத்தை பெருக்குவதையுமே பிரதானமான நோக்கமாக கொண்டிருப்பார்கள். இது தொடர்பான ஒரு ஆரோக்கியமான உரையாடலை இவை நடாத்துவதில்லை. அதேநேரம் மதங்களின் மீது ஆழமான நம்பிக்கைவைத்திருக்கும் பொது மனிதர்களுக்கு இந்த செய்திகள் முக்கியமானவை. ஆகவே ஊடகங்கள் இந்த மனிதர்களின் மத நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறும் அதேவேளை இந்த நம்பிக்கைகளை மேலும் வலுவுட்டி நிலைநாட்டும் வகையிலையே வெளியிட்டு இதனுடாக தமது பல நோக்கங்களை நிறைவு செய்து கொள்வார்கள். பொது மனிதர்களும் தமது மத நம்பிக்கைகளை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இந்த சாமியர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்குவார்கள். இதற்கு மறுபுறம் நாஸ்திகவாதிகள் சாமியர்களின் ஏமாற்று செயற்பாடுகளினால் மகிழ்வடைந்து இச் செய்திகளை கேலியும் கிண்டலுமாக வெளியிடுவார்கள். இவர்களது பிரதான நோக்கம் சமயங்களையும் அதைத் தலைமைதாங்கி நடாத்தும் இந்த சாமியார்களையும் பொது மனிதர்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதும் அவர்களது இரட்டைவேடங்களை வெளிக்கொண்டுவந்து பொது மனிதர்களது மூட நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் என பொதுவாக கூறலாம். ஆனால் இவர்களும் தங்களது கேலி கிண்டல்களுக்கு அப்பால் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை முன்வைக்காது சமயங்களுக்கும் சாமியார்களுக்கும் எதிரான தமது கொள்கைகள் கோட்பாடுகள் சரியானவை என நிரூபிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கின்றார்கள். மூன்றாவது தரப்பினரான சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் இவ்வாறான விடயங்களை விவாதப்பொருளாக்கி ஆரோக்கியமான உரையாடலை நடாத்த முனைவார்கள். ஏனனில் இவ்வாறான உரையாடல்கள் மூலமே நாம் நமது கடந்தகால நம்பிக்கைகளை கேள்வி கேட்கவும் நமது அறியாமையை நீக்கவும் முடியும். இதுவே சமூக மாற்றத்திற்கான ஆரோக்கியமான பாதையாக அமையும். ஆனால் அவ்வாறான நோக்கத்துடன் பொறுப்புணர்வுடன் இவ்வாறான செய்திகளை சமூக அக்கறை உள்ள ஊடகங்கள் பிரசுரிக்கின்றார்களா ஒளிபரப்புகின்றார்களா அல்லது வாசகர்களும் பார்வையாளர்களும் விமர்சனபூர்வமாக பார்கின்றோமா விவாதிக்கின்றோமா என்பது கேள்விக்குறியதே.



நித்தியானந்தம் என்ற சாமியார் வேடம் அணிந்த மனிதர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அது தொடர்பான செய்திகள் தொடர்பான ஒரு பார்வையை இங்கு முன்வைக்கின்றேன். முதலாவது அவர் தன் மீது நம்பிக்கைவைத்துள்ள மனிதர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்ற அடிப்படையிலும் இம் மனிதர்களது மத நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் மாறாக நடந்து அவற்றை அவமதித்துள்ளார் என்ற அடிப்படையிலும் அவர் மீது ஊடகங்களும் பொது மனிதர்களும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள். இரண்டாவது தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து பல பெண்களை பாலியல் அடிப்படையில் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தும் சுரண்டியுமுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். மூன்றாவது மனிதர்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துகின்றார் என வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள். இன்னுமொருபுறம் இவர் எந்த தவறும் செய்யவில்லை பாலியலுறவில் ஈடுபடுவது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். ஆகவே இவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கத்தேவையில்லை. பாலியலுறவில் ஒருவர் ஈடுபட்டதற்காக தண்டிப்பது தனிமனித உரிமை மீறல் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன. இப்படி பல கோணங்களில் இப் பிரச்சனையை ஆராயலாம். இதில் யார் சொல்வது சரியானது?



முதலாவது பொதுவான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நித்தியானந்தம் மீது வைக்கப்படக் கூடிய குற்றச்சாட்டு பிரம்மச்சரியத்தை போதித்தது மட்டுமல்ல தான் பிரம்மச்சாரி என மற்றவர்களை நம்பவைத்தது மோசம் செய்தது எனக் கூறலாம். இவ்வாறு இவர் போதனை செய்திருக்காவிட்டால் ஒரு பெண்ணுடன் உறவாடுவதோ அல்லது பாலியலுறவில் ஈடுபடுவதோ தவறானதாக கருதப்பட்டிருக்காது. ஆனால் அவர் தனது மத போதனைகளுக்கும் தனிப்பட்ட வாழ்விற்கும் முரண்பாடாக இருந்துள்ளார். ஆதனால்தான் மத நம்பிக்கை சார்ந்த மனிதர்களால் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரும் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார். இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதாக இருப்பினும் இப்படியான இரட்டை வாழ்வை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நமது சமூக அரசியல் மற்று சமய தளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். பல அரசியல் தலைவர்கள் தொடர்பாக ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன்? ஆகவே ஊடகங்கள் இந்த விடயங்களில் பக்கச் சார்பாகவே செய்திகளை வெளியிடுகின்றனர். ஆகவே இவ்வாறன குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் ஒவ்வொருவரும் தமது மனசாட்சியை கேள்வி கேட்டபின் மற்றவர் மீது குற்றம் சுமத்துவதே நியாயமானது. இதன் அர்த்தம் அவரை நியாயப்படுத்துவதல்ல. மாறாக நித்தியானந்தம் போன்றவர்கள் இவ்வாறு ஈடுபடுவதற்கு மறுபுறம் காரணமாக இருக்கும் சமய நம்பிக்கைகளையும், அதன் பழக்கவழங்கங்களையும் மற்றும் சாஸ்திர சம்பிரதாய சடங்குகளையும் கேள்விக்குட்படுத்துவதே நியாயமானதாகும். குறிப்பாக பாலியல் மற்றும் பாலியலுறவுகள் தொடர்பாக சகல சமய நிறுவனங்களின் நிலைப்பாடுகளையும் அவர்களது கருத்துக்களையும் கேள்விக்குட்படுத்துவதே சரியான வழிமுறையாகும். இந்து சமயம் மட்டுமல்ல எல்லா சமய நிறுவனங்களிலும் இவ்வாறன பிரச்சனைகள் இருக்கின்றன. இதில் உள்ள மதத் தலைவர்கள் பலர் இதுதொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து முகம் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். ஆகவே நித்தியானந்தம் போன்ற சாமியர்கள் போன்று எதிர்காலத்தில் மேலும் பலர் வரமால் தடுப்பதற்கும், மற்றும் பொது மனிதர்களின் ஆன்மீக தேடலை சுரண்டி பயன்படுத்தாமலிருப்பதுற்கும் சமய கோட்பாடுகளையே முதலில் கேள்வி கேட்கவேண்டும். இதற்கு மாறாக மதவாதிகள் தமது மதங்களை தூயனவாக கட்டிக் காப்பதற்கும் மூட நம்பிக்கைள் மூலம் பொது மனிதர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கும் வசதியாக நித்தியானந்தம் போன்ற மனிதர்களை குற்றவாளிகளாக்கி பிரச்சனையை தனி மனித பிரச்சனையாக்கி திசை திருப்பிவிடுகின்றனர். இதில் ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஆகவே சமூக அக்கறையுள்ளவர்களும் சமூக மாற்றத்தில் அக்கறையுள்ளவர்களும் சமூகத்தின் பொதுவான கருத்துக்களுக்கும் அதன் ஆதிக்க போக்கிற்கும் தாமும் இழுபடாமல் இந்த வட்டத்திற்கு வெளியில் நின்று நிதானமாகவும் பிரக்ஞைபூர்வமாகவும் இப் பிரச்சனையை பார்ப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்.



இரண்டாவது குற்றச்சாட்டு பெண்களின் பார்வையில் முன்வைக்கப்படுவது, இதுவே மிகமுக்கியமானது. அதாவது நித்தியானந்தம் தனது அதிகாரம் பண பலம் பிரபல்யம் என்பவற்றை பயன்படுத்தி எத்தனை பெண்களை பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பதை அறிவதே இவர் மீதான குற்றச்சாட்டுக்கு நியாயமானதும் முக்கியமானதுமான ஆதாரமாக இருக்கும். ஏனனில் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைத்துள்ள களவாக எடுக்கப்பட்ட வீடியோவில் இவர் ஒரு பெண்ணுடன் எவ்வாறு பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றார் என்பது இவர் தொடர்பான பல கேள்விகளை எழுப்புகின்றது. இதனடிப்படையில் நித்தியானந்தம் இருக்கின்ற வீடியோவை அலசி ஆராய்ந்தால் (அந்த வீடியோவில் இருப்பவர் அவர் என உறுதிசெய்யப்படும் பட்சத்தில்) அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதும் புத்தக அறிவின் மூலம் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார் என்பது வெளிச்சமாகின்றது. வீடியோவின் அடிப்படையில் முதலில் நித்தியானந்தர் முக்தி (ஞானம்) என்ற ஒன்றை அடையவில்லை என்பது புலனாகின்றது. ஏனனில் அவரது செயற்பாடுகள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் பிரக்ஞையற்ற இயந்திரத்தனமான செயற்பாடுகளாகவே தென்படுகின்றன. சாதாரண மனிதர்களைப் போன்று இன்னும் காமத்திலிருந்து விடுபடாமலும் மாறாக அதை அடக்கியே வாழ்கின்றார் என்பதையும் அவரது பிரக்ஞையற்ற சிறுபிள்ளைத்தனமாக சிலுமிச செயற்பாடுகள் மூலம் நிரூபணமாகின்றது. மேலும் மூன்றாவது பகுதி கட்டுரையில் குறிப்பிட்டவாறு ஒரு பெண்ணுடனான அவரது உறவு இன்னும் ஆணாதிக்க தன்மையிலேயே இருக்கின்றது என்பது துல்லியமாக தெரிகின்றது. அதாவது ஆண் பெண் இரு பாலருக்கும் இடையிலான காம உணர்வின் வேறுபாடுகளின் அடிப்படையைக் கூட நித்தியானந்தம் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. உதாரணமாக ஒரு ஆணே முதலில் பெண்ணிற்கான பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவது பொருத்தமானதும் சரியானது எனவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக மூன்றாவது பகுதியில் பார்த்தோம். இதற்கு மாறாக நித்தியானந்தம் என்ற மனிதருக்கே அப் பெண் உறவுக்கு முன்பான பாலியல் விளையாட்டுக்களை செய்கின்றாள். ஆகவே காம மற்றும் பாலியலில் ஆய்வுகள் செய்கின்றேன் என்ற நித்தியானந்தரின் கூற்று பொய்யாகின்றது. இது தொடர்பாக அவர் கேள்விக்குள்ளாக்கப்டவேண்டும். ஏனனில் பாலியலுறவு தொடர்பாக ஆய்வு செய்வதாக இவர் மேலும் மேலும் பொய்கள் கூறி பொது மனிதர்களை ஏமாற்றுகின்றார் என்றே கருதவேண்டும். மேலும் வீடியோவில் காண்பிக்கப்பட்ட பெண்ணைத் தவிற வேறு பல பெண்களுடனும் இவர் இவ்வாறு ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இவரது ஆணாதிக்க செயற்பாடுகள் எழுப்புகின்றன. இதன் அர்த்தம் ஒரு மனிதர் (அவர் ஆணோ பெண்ணோ) ஒருவருடன் தான் பாலியலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்க சமூகத்தின் ஒரு தார பாலியலுறவு கருத்தியலை இங்கு முன்வைக்கவில்லை. மாறாக நித்தியானந்தம் தனது பதவி பணம் அதிகாரம் என்பவற்றை பயன்படுத்தி பல பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியிருக்கலாமா என்ற கேள்வியே முக்கியமானது. அவ்வாறு நிரூபிக்கும் பட்சட்த்தில் அவர் குற்றவாளியாகின்றார்.



நித்தியானந்தம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைக்கப்பட்ட வீடியோவில் கவனிக்கப்படவேணடிய இன்னொரு முக்கியமான அம்சம் ஒன்று உண்டு. பொதுவான ஆணாதிக்க சமூக வழமையாக பெண் என்பவள் ஆணின் அடிமையாக ஆணுக்கு சேவகம் செய்வதும் அவனது காம மற்றும் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்பவளாகவே இந்த ஆணாதிக்க சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றாள். இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட பெண்ணும் சமூகத்தில் வாழும் பெரும்பான்மையான பெண்களை போல ஒரு ஆணின் தேவைகளை பாலியல் ஆசைகளையும் கனவுகளையும் பூர்த்தி செயற்படுத்துகின்றவளாகவே இருக்கின்றாள். மேலும் மனிதர்கள் தமது ஆணாதிக்க ஆண்டான் அடிமை மற்றும் நிலபிரபுத்துவ உணர்வுகளிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பது இன்றைய அரசியல் நீரோட்டத்தில் மட்டுமல்ல நித்தியானந்தரின் விடீயோவிலும் புலனாகின்றது. எப்படி அரசியலில் குறிப்பாக இலங்கையில் மகிந்தவை துட்டக்கைமுனுவாகவும் பிரபாகரனை எல்லாளனாகவும் கற்பிதம் செய்கின்றோமோ அதேபோல் இந்தியாவில் எவ்வாறு அரசியல் தலைவர்களை அரசர்களுடன் ஒப்பிடுவது மிக சர்வசாதாரணமான இப்பொழுதும் பின்பற்றப்படுகின்றதோ, அதேபோல் நித்தியானத்தனையும் ஒரு அரசனாக கடவுளாக கற்பிதம் செய்து அவரது தொண்டர்களும் இந்தப் பெண்ணும் சேவகம் செய்கின்றார்கள். இந்த வீடியோவில் இருவருக்கும் இடையில் காண்பிக்கப்படும் உறவு ஆணாதிக்க அடிப்படையிலான காதலாக இருக்கலாம். ஆனால் நித்தியானந்தம் போதிக்கும் அல்லது போதித்ததாக கூறப்படும் இரு மனிதர்களுக்கு இடையிலான சமத்துவமான காம மற்றும் காதல் உறவைக் காணமுடியவில்லை. மாறாக அடக்கப்பட்ட காமத்தின் ஆசைகளை பூர்த்தி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டும் செய்ற்பாடுகளாகவே நித்தியானந்தரின் செய்கைகள் இருக்கின்றன. ஒருவரும் இந்தடிப்படையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைக்கமாட்டார்கள். ஏனனில் இவ்வாறன பெண்ணின் செயற்பாடுகள் ஆண் பெண் உறவுகளில் சர்வசாதாரணமான சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பழக்கவழக்கமாகவே பார்க்கப்படுகின்றது. இச் செயற்பாடுகள் எந்த ஒரு மனிதர்களுக்கும் குறிப்பாக ஆண்களுக்குப் பிரச்சனையானதல்ல. ஏனனில் இதுபோன்ற பாலியலுறவு முறைகளே சமூகத்தில் வாழும் ஆணாதிக்கத்திற்குட்பட்ட நம்மைப் போன்ற மனிதர்களால் வழமையாக பின்பற்றப்படுகின்றமையால் இவ்வாறன விடயங்கள் தவறானவைகளாக தெரிவதில்லை. ஆகவே நமது பிரக்ஞைக்கு பிழையாக தெரியாததால், அக்கறைக்கு அப்பாற்பட்டனவையாக இருக்கின்றன. ஆனால் பெண்ணிய பார்வையில் நித்தியானந்தம் இப் பெண்ணை தனது பாலியல் தேவைகளுக்காக சுரண்டுகின்றார் என்பதையே இப் பெண்ணின் செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன. சமூக அக்கறை உள்ள சஞ்சிகைகள் இவற்றை கேள்விக்கு உட்படுத்தியிருக்கவேண்டும் ஆனால் அவையும் அதைச் செய்யத் தவறிவிட்டன. இதனால்தான் பொதுமனிதர்களுக்கும் ஊடகங்களுக்கும் தமது அல்லது ஒரு சமயத்தை அவமதித்தது மட்டுமே முக்கியமான விடயமாக இருக்கின்றது. இதனடிப்படையிலையே நித்தியானந்தம் மீதான பிரதான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. இதற்குக் பாலியல் பாலியலுறவு மற்றும் பெண்களை எவ்வாறு இந்த சமூகம் பார்க்கின்றது பயன்படுத்துகின்றது போன்றன தொடர்பான நமது அறிவின் எல்லையும் வறுமையுமே காணரம்.



மறுபுறம் நித்தியானந்தம் உறவு கொண்ட பெண் அவர் மீது எந்தவிதமான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டையோ அல்லது பாலியல் மற்றும் அதிகாரத்துவ துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்வில்லை. ஆகவே அப் பெண்ணுடன் உறவாடியதை எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி தமது செய்திக்கு ஆதாரமாக முழுமையாக ஒளிபரப்பியமை ஊடகங்களின் தனிமனித உரிமை மீறல் ஆகும். ஊடகங்கள் நித்தியானந்தம் மீதான குற்றச்சாட்டை மட்டும் நிரூபிக்க வேண்டுமாயின் அவரின் முகத்தை மட்டும் ஒளிபரப்பியருப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். குறிப்பிட்ட பெண்ணின் முகத்தை முழுமையாக மறைப்பது மட்டுமல்ல யாரென அடையாளப்படுத்தியுமிருக்கக் கூடாது. ஆனால் இந்த குற்றச் சாட்டுக்களுடன் எந்தவகையிலும் நேரடியாக தொடர்பற்ற ஆனால் தன் விருப்பத்துடன் ஒரு உறவில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் செயற்பாடுகளை ஒளிபரப்பியது மட்டுமல்லாமல் அதை மீள மீள ஒளிபரப்பியமை அப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்வில் தலையீடு செய்த அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். அதில் காண்பிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தனி மனித உரிமை மீறல் தொடர்பாகவும் கருத்துக்கள் பல வலைத்தளங்களில் வெளிவந்தமை மகிழ்ச்சியான விடயமே. ஆனால் பிரதான ஊடகங்கள் இந்தவிடயத்தில் எந்த பொறுப்பும் இல்லாமல் இவ்வாறு ஓளிபரப்பியமை அவர் ஒரு பெண்ணாகவும் மற்றும் பிரபல நடிகையாக இருந்தமையுமே காரணமாகும். ஏனனில் இதன் மூலம் ஊடகங்கள் இச் செய்தியை தமக்கு வருவாயை மட்டுமே பெருக்கிக்கொள்ளும் ஒரு பொருளாக பெரும் வியாபாரமாக்கியது. இது மட்டுமல்ல இவ்வாறு கேள்வியின்றி விமர்சனமின்றி ஓளிபரப்பியமை ஆணாதிக்க சமூக பழக்கவழக்கங்களை மேலும் வலுப்படுத்துகின்றன என்றால் மிகையல்ல. இந்த ஊடகங்கள் மீது அப் பெண் தனிமனித உரிமை மீறல் அடிப்படையில் மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யவேண்டியது முக்கியமான ஒரு விடயமாகும்.



இதன் மூலம் ஊடகங்களின் வரையறை மட்டுமல்ல அவர்களின் சமூக பொறுப்பு என்ன என்பது தொடர்பாகவும் தெளிவான ஒரு பார்வை இனிவரும் காலங்களில் முன்வைக்கப்படவேண்டும். இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளினால் இதுபோன்ற தனி மனித உரிமைகளை மீறும் விடயங்களை இலகுவாக செய்துவிடலாம். ஆகவே தனி மனித உரிமை, சமூக அக்கறை மற்றும் பொறுப்பு தொடர்பான விடயங்களிலும் ஊடகங்களின் எல்லைகள் அல்லது அவர்கள் இவ்வாறான செய்திகளைத் தெரிவிப்பதிலுள்ள பொறுப்புணர்வு என்பவை தொடர்பான வரையறைகள் முன்வைக்கப்படவேண்டியது தவிர்க்கப்படமுடியாததாக எழுகின்றது. அல்லது 50 வருடங்களுக்கு முன்பு ஜோர்ஜ் ஒவல் (George Orwell) எழுதிய “1984” கதைபோன்று சிதைந்துபோன அல்லது சிதைக்கப்பட்ட அல்லது சிதைந்துபோவது தவிர்க்கப்பட முடியாத சோவியத்யூனியனுக்குள் இருந்த வாழ்வைப் போன்று நமது வாழ்வின் ஒவ்வொரு கணமும் இவ்வாறான நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாக கண்காணிப்பட்டு நமது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதுபோய்விடும். இன்று இவ்வாறன விடயங்களில் மதவாதிகள் மட்டுமே அதிகமாக அகப்படுவதால் மனித உரிமைவாதிகளும் மற்றும் நாஸ்திகர்களான இடதுசாரிகளும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் நாளை ஒரு சமூக மாற்றத்திற்காக சுரண்டல்களுக்கு எதிராக உழைக்கும் மனிதர்கள் மீதும் அவர்களது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்த இவ்வாறான விடயங்களை அதிகாரத்தில் உள்ள ஊடகங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது கட்டாயமானதாகும். ஏனனில் இந்த வியாபார ஊடகங்களின் நோக்கம் இவ்வாறனா செய்திகளுடன் இலாபம் பெறுவது மட்டுமல்ல தொடர்ந்தும் பிற்போக்கு ஆணாதிக்க மற்றும் மூட மத சிந்தனைகளை சமூகத்தில் உறுதியாக நிலைநாட்டுவதற்கு இவ்வாறான செய்திகளைப் மீள மீள பிரசுரிப்பதும் ஒளிபரப்புவதுமாகும் ஒரு காரணமாகும்.



ஆணாதிக்க சமூகத்தால் ஒரு ஆணாக கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நான் முழுமையாக ஆணாதிக்க கருத்துக்களிலிருந்து விடுபட்டிருப்பேன் என உணரவோ நம்பவோ இல்லை. இருப்பினும் எம் மீதான ஆதிக்கங்களை கட்டுடைத்து நம்மை புதிதாக மீள் உருவாக்கம் செய்வது என்பது ஒர் தொடர்ச்சியான பயணம். இந்தவடிப்படையில் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணைவிட ஒரு ஆண் பெண்ணியவாதியாக இருப்பது அவ்வளவு கஸ்டமானதல்ல. ஆனாலும் ஒரு நபருக்குள் நடைபெறும் மாபெரும் உள்போராட்டம் என்றால் மிகையல்ல. ஒரு புறம் ஆணாதிக்க சிந்தனைகளின் ஆதிக்கம். அதேவேளை எது ஆணாதிக்கம் என்றும் அல்லது எது இல்லை என்றும் புரியமுடியாத கையறுநிலை. இந்ந நிலையில் ஒரு ஆண் வழமையாக மேற்கொள்ளப்படும் மனித வாழ்விற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை அந்த ஆண் பெண்ணியவாதியாக இருந்து பெண்களையும் அவர்கள் உணர்வுகளையும் மதித்து அவர்களை சுரண்டாது பாலியலுறவு வன்புணர்வுகளிலோ பாலியல் துஸ்பிரயோகங்ளோ ஈடுபடாது ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக வாழ்வது என்பது மிகவும் சவலான ஒரு விடயம். இது நான் மட்டுமல்ல சமூக மாற்றத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதரும் குறிப்பாக ஆணும் முகம் கொடுக்கவேண்டிய பிரச்சனை இது. இந்தவடிப்படையில்தான் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர்.உ.ரா.வரதராசன் அவர்களது இறப்பும் மற்றும் அவர் குறிப்பிட்ட தனது அக வாழ்வுக்கும் புற அல்லது பொது வாழ்வுக்கும் இடையில் மட்டுமல்ல அவற்றுக்குள்ளான பிரச்சனைகளையும் பார்க்கவேண்டி உள்ளது. இவரது கட்சியும் இது தொடர்பான பிரச்சனையை பூசி மெழுகியுள்ளதாகவே தெரிகின்றது. இதற்கு காரணம் பாலியல் மற்றும் பாலுறவு தொடர்பாக இந்த இடதுசாரி கட்சிகளும் மரபாந்த சமூக கருத்துக்களையா கொண்டிருக்கின்றார்கள் என சந்தேகிக்க வேண்யுள்ளது. இது தொடர்பாக பொறுப்புணர்வுடன் ஆனால் வெளிப்படையான ஒரு கலந்துரையாடலை அவர்கள் நடாத்துவது இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை முகம் கொடுப்பதற்கு சரியான ஒரு பார்வையைக் கொடுக்கலாம். ஆல்லது தொடர்ந்தும் நமது மனதில் ஆழப்பதிந்திருக்கும் பிற்போக்கான சமூக சிந்தனைகளுடன் பிரக்ஞையற்று சமரசம் செய்வதையே தொடர்ந்துகொண்டு இருப்போம்.



இவ்வாறான பிரச்சனைகளைப் பார்ப்பதற்கு நமது அறிவு தொடர்பான விளக்கத்தையும் தெளிவாக்கி செல்வது நன்மையளிக்கும். இன்றைய காலத்தில் குறிப்பாக தென்னாசிய சமூகங்களில் வாழும் மனிதர்களின் அறிவை, அவர்கள் மீதான சமூக ஆதிக்கமானது ஆகக் குறைந்தது இரு வழிகளிலாவது கட்டுப்படுத்துகின்றது. முதலாவது மேலைத்தேய சிந்தனைக்கான முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலம். இரண்டாவது சமயங்களில் மீதான நம்பிக்கையும் அது ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் கட்டாயமாகவும் விமர்சனமின்றியும் பின்பற்ற நிர்ப்பந்திப்பதன் மூலம். லவ்லொக்(lovelock) என்ற சூழலியல் அறிஞர் கூறுகின்றார் இன்றைய மேற்கத்தைய விஞ்ஞான அறிவை உற்பத்தி செய்யும் சமூக அரசியல் விஞ்ஞான நிறுவனங்கள் கலிலியோ காலத்து சமய நிறுவனம் போலவே செயற்படுகின்றன. ஏனனில் அன்று கலிலியோ ஏற்படுத்திய அறிவுப் புரட்சியை எப்படி சமய நிறுவனங்கள் நிராகரித்தார்களோ அதேபோல் இன்று உருவாக்கப்படும் புதிய அறிவுப் புரட்சிகளை இன்றைய மேற்கத்தைய விஞ்ஞான அறிவை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிராகரிக்கின்றன அல்லது அடக்குகின்றன என்கின்றார். மறுபுறம் தென்னாசியாவில் இருக்கின்ற சமய நிறுவனங்கள் இப் பிரதேசங்களில் உருவாகிய கடந்தகால அறிவையும் அதற்கான தேடல்களையும் சமய அறிவாக மாற்றி அதனை ஒரு சடங்காக மட்டுப்படுத்தி தம் மதத்துடன் இணைத்து பொது மனிதர்களைக் கட்டிப்போடுதவற்கும் கேள்வியின்றி அவர்கள் பின்பற்றுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மறுபுறம் சமயங்களுக்கு எதிரானவர்கள் அல்லது இவ்வாறான கீழைத்தேய அறிவை விஞ்ஞான அறிவல்ல என வாதிடும் ஐரோப்பிய சிந்தனைக்கு அடிமைப்பட்ட அறிஞர்கள் தென் பூகோளம் (Global South- இது வட அமெரிக்க மற்றும் மேற்குலகையும் மற்றும் வட பகுதி தவிர்ந்த பிரதேசங்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது) உருவாக்கிய அறிவையும் அதன் உண்மையான பயன்பாட்டையும் புரிந்துகொள்ள தவறுகின்றனர். இயற்கையான வழிகள் மூலம் இந்த மன நோய்களை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதைபற்றிய அக்கறையும் ஆர்வமும் நமக்கு வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவெனில், இயற்கையான வழிகளான தியானம் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா, தந்திரா போன்ற ஆசிய பிரதேசங்களில் உருவான அறிவுகளை அங்கு ஆதிக்கத்திலிருக்கும் சமயங்களும் அதன் சாமியார்களும் ஆட்கொள்வதால் அந்த அறிவின் முக்கியத்துவம் பொது மனிதர்களுக்கு பயனில்லாமல் போகின்றது. மறுபுறம் இந்த சமயங்களும் சாமியார்களும் தம் பிரதேசங்களில் உருவான அறிவை மனிதர்ளை சுரண்டுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப் பிரதேசங்களில் உருவான இவ்வாறன அறிவுகள் மனிதர்களின் காமம் பாலியலுறவு மனித உறவு மற்றும் உளவியல் என்பவற்றை மேம்படுத்த நன்றாகவே பயன்படுத்தப்படக் கூடியன. ஆனால் இந்த அறிவுகள் இப் பிரதேசங்களின் பிரதான ஆதிக்க அறிவுத் தளங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிகவும் துயரமானது.



தென்னாசிய மனிதர்கள் அறிவை மதிக்கும் அல்லது பெற்றுக்கொள்ளும் முறைகளில் இருக்கும் முரண்பாடுகள் கவனத்திற்கு உரிய விடயம். மேற்குலகில் அறிவு தொடர்பான விடயங்கள் சமய நிறுவனங்களிலிருந்தும் அச் சமூகம் சார்ந்த காலாசார பாதிப்புகளிலிருந்தும் ஒரளவாவது விடுதலை பெற்று சுதந்திரமாக இருப்பதுதான் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த நிலை இன்னும தென்னாசிய சமூகங்களில் ஏற்படவில்லை. அகவே இச் சமூகங்களில் அறிவு என்பது அதன் சமய கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக இயங்க வேண்டிய தேவை உள்ளது. மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுற்று சூழலைப் பாதுகாப்பதற்குமான அக்கறையும் அது தொடர்பான அறிவுத்தேடலும் சமூக சமய முதலாளித்துவ ஆதிக்க நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக அதேவேளை அடக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்து ஆனால் சுதந்திரமாக வளர்ந்தும் வந்திருக்கின்றன. இந்த அறிவுகள் பிரபஞ்சத்தையும் அதில் வாழும் மனிதர்களையும் எவ்வாறு சமநிலையில் வைத்திருப்பது என்பது தொடர்பான அக்கறை கொண்டவை. ஆனால் சமூக சமய ஆதிக்க நிறுவனங்களால் அவை உள்வாங்கப்ட்டோ அல்லது அழிக்கப்பட்டடோ அடக்கப்பட்டோ வந்திருக்கின்றன. இதன் ஆதிக்கங்களிலிருந்து இந்த அறிவைப் பிரித்து சுதந்திரமாக்க முடியுமானால் அதைப் பொது அறிவாக்க முடியுமானால் இந்த சமய நிறுவனங்களும் சாமியார்களும் மதகுருமார்களும் மற்றும் முதலாளித்துவ மருந்து நிறுவனங்களும் மனிதர்களை தொடர்ந்தும் சுரண்டுவதிலிருந்தும் ஏமாற்றுவதிலிருந்தும் விடுவிக்கலாம். மேலும் காமம் காதல் மற்றும் தியானம் என்பனவும் அவைபோன்ற மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான பல விடயங்கள் சமூக விஞ்ஞான தத்துவார்த்த அடிப்படையில் நோக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் இவை ஒரு புறம் சமயங்கள் சார்ந்தும் மறுபுறம் மேற்கத்தைய விஞ்ஞானம் சார்ந்தும் மற்றும் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு சுதந்திரமாகவும் இதற்கான தேடல்கள் முயற்சிகள் நடைபெற்றுவந்திருக்கின்றன. ஆனால் குறிப்பாக தென்னாசிய சமூகங்களில் இவ்வாறன ஒரு சூழல் இன்னும் உருவாகவில்லை. அனைத்தும் மதங்களுக்குடாகவே பார்க்கப்படுன்றன. மத நிறுவனங்களின் கட்டுப்பாடுகளை மீறி கூறப்படுகின்றனவைக்கு மதிப்பு இல்லை. இந்த நிலை மாறப்படவேண்டும். அப்பொழுதே மனிதரின் பிரக்ஞை, மூச்சு, காம சக்தி மற்றும் தியானம் தொடர்பான சுயாதினமான சுதந்திரமான கருத்துக்கள் அறிவுகள் பரவலாக்கப்டும் சாத்தியம் ஏற்படும். ஆகவே பிரக்ஞை, மூச்சு, காம சக்தி மற்றும் தியானம் என்பன சமய நிறுவனங்களில் இருந்து விடுதலை பெற்று பொதுவான பாடங்களாக அனைவருக்கும் கற்பிக்கப்படவேண்டும். ஏனனில் இவை தொடர்பான அறிவு மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையானவையும் முக்கியமானதுமாகும். இது தொடர்பாக ஞானி அவர்களும்; தனது குமுதத்தற்கான பத்தியிலும் வலைப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 70 ஆண்டு கால் சோவியத் யூனியன் வரலாற்றில் அதாவது பல தலைமுறைகளை கண்ட நாட்டில் 90களின் பின் ஏற்பட்ட மாற்றம் அதவாது முதலாளித்துவ ஐனநாயக சூழல் மனிதர்களை மீண்டும் மதங்களை நோக்கி மிக இலகுவாக இழுத்துள்ளது. இது எதனால்? இது போன்று ஆசிய நாடுகளில் பல சாமி மனிதர்கள் பொது மனிதர்களை தொடர்ந்தும் ஏமாற்றிய பொழுதும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு சாமியாரிடம் பொது மனிதர்கள் அடைக்கலமாகின்றார்கள். இவ்வாறு நடைபெறுவதற்கான மனித தேவையையும் அதற்கான உளவியல் காரணத்தையும் சமூக மாற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது மிக முக்கியமானதும் அவசியமானதுமான ஒன்று. இதைப் புறக்கணிப்பதானது உண்மையான முழுமையான சமூக மாற்றம் என்பது தொடர்ந்தும் குறைபாடு கொண்டதாக மட்டுமல்ல பாரிய தவறொன்றை தொடர்ந்தும் சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் விடுவதாகவே இருக்கும்.



காதல் என்பது காமத்தைப் போன்றோ பிரம்மச்சாரியத்தை போன்றோ மனித வாழ்வில் இடையில் உருவாகி இடையில் இல்லாமல் போகும் ஒரு விடயமல்ல. ஒரு மனிதர் உருவாவதில் இருந்து இற்ப்பதுவரை அவரது வாழ்வில் ஒன்றாக பயணிக்கும் ஒரு முக்கியமான உந்து சக்தி. ஆனால் காமத்தையே இன்னும் கடக்காத நாம் (அல்லது நான்) காதல் தொடர்பாக எழுதுவது அர்த்தமற்றது. ஏனனில் எனது பிரக்ஞையற்ற நிலையின் காரணமாக நான் எழுதும் விடயங்கள் ஆணாதிக்க கருத்தியலாகவும் மற்றும் காம மற்றும் பாலியல் அடக்குமுறையின் வெளிப்பாடாக எக் கணத்திலும் வந்துவிடலாம். ஏனனில் அந்தளவிற்கு இவ்வாறான கருத்தாக்கங்கள் நமக்குள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில் நமது காம உணர்வையும் மற்றும் பாலியல் உறவுக்கான தேவையையும் நாம் விரும்புகின்றவர்களிடம் எவ்விதமான பயமுமின்றி தயக்கமுமின்றி நாகரிகமாக வெளிப்படுத்தும் கலாசாரமும் அதேநேரம் மற்றவர் மறுக்கும் சமயத்தில் அதை ஏற்கும் பண்பும் கொண்ட ஒரு சமூகம் உருவாக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் பாலியல் சுரண்டல்கள் வன்புணர்வுகள் துஸ்பிரயோகங்கள் என்பவற்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட முடியும். இதற்கு முதலடிப்படையானது காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் பரவலாக தயக்கமின்றி வெளிப்படையாக தமிழ் எழுத்து சூழலில் நடைபெறவேண்டும். இரண்டாவது தியானம் மற்றும் பிரக்ஞை என்பனவற்றின் முக்கியத்துவமும் தேவையும் வரலாற்றில் பல்வேறு வழிகளில் தேடலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றன. துரதிர்ஸ்டவசமாக சமய நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் இது அவர்களுக்குரியதாக மட்டும் பார்க்கப்படுவது துர்ப்பாக்கியமானது. அவற்றிலிருந்து அவை விடுதலை செய்யப்பட்டு மனித வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் சமய நிறுவனங்கள் சாராத அறிவாக பயன்படுத்தப்படவேண்டும். அப்பொழுதே மத நிறுவனங்களிலிருந்தும் அதை பிரதிநிதித்துவப்படுத்தும் சாமியார்கள் மற்றும் மதபோதகர்களிலிருந்தும் நாம் விடுதலையடைவது மட்டுமல்ல அவர்கள் நம்மை ஏமாற்றாமலும் சுரண்டாமலும் இருப்பதிலிருந்து விடுபடுவோம்.



இக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கனடாவில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் மூன்றாம் வகுப்பிலிருந்து பால், பாலியல் மற்றும் பாலியலுறவு கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டுரை எழுதிமுடியும் தறுவாயில் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவானது பாலியல் சுதந்திரம் இருக்கின்றதாக கூறப்படுகின்ற மேலைத்தேய நாடுகளின் கூட பாலியல் மற்றும் அது தொடர்பான கல்வியை கற்பிப்பதற்கு எவ்வளவு தடைகள் இருக்கின்றன என்பதை காண்பிக்கின்றது. ஆனாலும் பாலியல் கல்வி போன்ற செயற்பாடானது கனடாவில் மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவலாக்கப்படவேண்டிய அவசரமான தேவை உள்ளது. இதன் மூலம் சமூகத்தில் நடைபெறும் பாலியல் பாலியலுறவு மற்றும் வன்புணர்வு துஸ்பிரயோகங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரளவாவது தீர்வு ஒன்றைக் காணலாம். ஆரோக்கியமான ஒரு மனித சமூகம் ஒன்று தொடர்ந்தும் இந்த பூமியில் உயிர் வாழவேண்டுமாயின் இவ்வாறன ஒரு கல்வித்திட்டம் முன்நிபந்தனiயானது என்றால் மிகையல்ல.



-முற்றும்-
மீராபாரதி

எழுதியவர் : (25-May-17, 2:18 am)
பார்வை : 154

மேலே