தமிழே தயை புரிவாய் - பகுதி 3

ஆரம்பக் கல்வி ஆங்கிலத்தில் இருக்க 'தமிழ்' ஒரு பாடம் மட்டும்.. மேலும் ஐந்தாம் வகுப்புவரை வேறு மாநிலத்தில் வேறு மொழி படிக்க அடித்தளம் இல்லாத கட்டிடம் போலவே என் 'தமிழ்' ஆறாம் வகுப்பில் ஆரம்பமானது.. தாய்மொழி தமிழாகையால் வார்த்தைகள் எல்லாம் பரிச்சயம்... எழுத்துக்கள் ஒரு அட்டையில் அம்மா.. ஆடு படங்களுடன் உயிர் எழுத்துக்களூம் அதன் பின் பக்கம் மெய்/உயிர் மெய் எழுத்துக்களும், தமிழ் 'வடிவமாக' அறிமுகம் ஆரம்பம்..

எனினும், 64 வயதில் ஏற்பட்ட ஒரு உந்துதலில் தமிழ் எழுத ஆரம்பிக்க இப்பொழுது தினம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.. என் ஆரம்பக் கட்ட அல்லல்களைக் கண்ட நண்பன் ஒரு அகராதி பரிந்துரைத்து வாங்க வைத்தான்.. இப்பொழுது எல்லா சந்தேகங்களுக்கும் அகராதி உதவி செய்கிறது..

"செல்ல பாப்பா எங்க சின்ன பாப்பா .." என்ற மெட்டில் "சின்ன 'ராவா' இல்ல பெரிய 'றாவா' ...." என்று அடிக்கடி நான் பாடிக்கொள்வேன்..

நிற்க...

தமிழில் எழுதுவது என்பது அடிப்படையில் ஒரு வார்த்தைக்கு 232 எழுத்துகளில் இருந்து எழுத்துகளைத் தேர்வு செய்து எழுதுவதாகும்... இதில் ஒரே ஒலிக்கு ஒன்றிற்கு மேல் எழுத்துக்கள் உள்ளதால் தேர்வில் தயக்கம்/குழப்பம் உண்டாகிறது.. மேலும் சில உயிர் மெய் எழுத்துக்களில் மெய்யுடன் உயிர் சேரும்பொழுது உயிருக்கான எழுத்து முன்னால் வருவதும் குழப்பமே..

உ-ம்: எ, ஏ, ஐ, ஒ, ஓ சேரும் மெய்-உயிர்பெரும் எழுத்துக்களில் உயிரின் ஓசை குறிப்பிடும் எழுத்து பின்னால் ஒலித்தாலும் அதற்கான எழுத்து முன்னால் வருகிறது... காண்க...
க் + எ = கெ; க் + ஏ = கே; க் + ஐ = கை; க் + ஒ = கொ;
க் + ஓ = கோ

இரண்டாம் வகுப்பு படிக்கும் என் பேத்தி, 'கோ' எழுது என்றால் 'க' எழுதிவிட்டு அதன் பின்னால் 'ஓ' வுக்கான கொம்பு போட முனைகிறாள்... அவள் வசதிக்காக வீட்டில் பல இடங்களில் தமிழ் எழுத்துக்கள் அட்டவனை ஒட்டி வைத்துள்ளேன்.. எழுத்துக்கள் மனதில் பதிய வேண்டும் என்று...
அவளுக்குத் தமிழில் எழுத வேண்டும் என்றால் அத்தனைக் கசப்பு...
வீட்டுப் பாடமாக இரண்டு கேள்விகள்... அதில் ஒன்று..

"ஆசிரியர் வந்தவுடன் மாணவர்கள் எழுந்து நின்று என்ன கூறினார்கள்?"

பதில்: "ஆசிரியர் வந்தவுடன் மாணவர்கள் எழுந்து நின்று வணக்கம் கூறினார்கள்."

பதிலை ஒருமுறை எழுதிப் பழகச் சொன்னால் சொல்கிறாள், "கேள்விக்கும் பதிலுக்கும் ஒரு வார்த்தை 'வணக்கம்' மட்டும் வேறு, நான் அதை மட்டும் எழுதுகிறேன், மற்றவை கேள்வியைப் பார்த்து எழுதி விடுவேன்." என்று.

நான் "ஆசிரியர் கேள்வி எழுதவில்லையென்றால் என்ன செய்வாய்?" எனக் கேட்க,

"இல்லை நிச்சயமாகக் கேள்வி எழுதுவார்கள்" என்கிறாள்..
பள்ளியிலிருந்து வரும்பொழுது கேட்டேன் "கேள்வி எழுதினார்களா?" என்று..

"ஆம்.." என்று சொல்லிவிட்டு முகத்தை 'உம்'மென்று' வைத்துக் கொண்டாள்..
மூன்றாம் வகுப்பிலிருந்து கேள்வியை அவளே எழுத வேண்டுமாம்..!

தமிழே தயை புரிவாய்.......!

----- முரளி

எழுதியவர் : முரளி (25-May-17, 9:57 am)
பார்வை : 619

மேலே