பாவம் அவனுக்கென்ன கஷ்டமோ

தாம்பரம் பேருந்து நிலையம், எதிரில் இருந்த சர்ச் ஒலிபெருக்கியில் ஒரு கிருத்துவப் பாடலின் ரிங்டோனைத் தொடர்ந்து, டிங்ங்ங்ங்...டிங்ங்ங்ங்....... டிங்ங்ங்.......... பதினொரு முறை மணியடித்து "நேரம் இரவு பதினொரு மணி" என்று அறிவிப்புடன் ஒரு வசனத்தை அந்த பெண்மணி சொல்லி முடித்து எப்படியும் ஒரு முப்பது விநாடிகள் கடந்திருக்கலாம் என நினைத்தபடி , என் செல்ஃபோனைப் பார்க்க., நான் யூகித்தது சரிதான். மணி 11:33 p.m என காட்டியது.

சரி.. "வெய்ட் பன்னுனது போதும் அவங்க சரியா இன்னும் ரெண்டு மணி நேரத்துல மேல் மருவத்தூர் வந்து இறங்கிடுவாங்க"..

"திருச்சிலருந்து பெரியப்பா பெரியம்மா மருவத்தூர் வர்ராங்க.. எனக்கு நைட் சிப்ட் டா. நீ போயி இந்தப் பணத்த குடுத்துட்டு வா டா" னு அண்ணன் என்னைப் போக சொன்னதால இப்ப இங்க நிக்கிறேன். மத்திய அரசு கொண்டு வந்த ' பண சீர்திருத்தத்தின்' விளைவு இப்படி ஒரு பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறது..
இதோ திண்டிவனம் பஸ் வந்துடுச்சி. சரி ஏறலாம்னு நினைக்கும் போதே,

"திருச்சி, திருச்சி.. திருச்ச்ச்ச்சி"....

பின்னாடி நம்ம ஊரு வண்டி. "ஹும்ம்ம்.. நம்ம ஊருக்குதான் போகல, நம்மூரு பஸ்லயாவது போவோம்"னு பார்க்க..

"சார் திருச்சியா ஏறுங்க வண்டி ஃப்ரீயா இருக்கு"

" இல்ல மருவத்தூர் போகனும்" ஏறிக்கலாமா?

"ஏறுங்க ஏறுங்க"னு சொல்லி உள்ளே அனுப்பினார்.

பெருங்களத்தூர் டிக்கெட் கூட ஏத்திக்குவாரு போல..அந்தளவுக்கு பஸ் காலி. டிக்கெட் வாங்கி,சென்டர் சீட்ல நம்ம சீட்ட பார்க் செய்து உட்கார்ந்தாகி விட்டது.. வேறு யாரும் வருகிறார்களா என காத்திருந்த பேருந்து தன் பொருமை இழந்து தொண்டைய ட்ர்ர்ர்ரூம்ம்ம் என செறுமிக்கொண்டு கிளம்பியது.

பெருங்களத்தூரில் அவ்வளவு கூட்டம் ஏறுமுனு நினைச்சுக் கூட பாக்கல. கூட்டத்தை முந்திக்கொண்டு ஏறிய அவன் நேராய் என் அருகில் இருந்த சீட்டை ஆக்கிரமித்து அமர்ந்தான். கொஞ்ச நேரத்தில் பேருந்தில் நிற்கக் கூட இடமில்லை.. கூட்ட நெரிசலால் அவன் என்னை நெருங்கி அமரும் போதே.....என் மூக்கின் மொத்த நரம்புகளும் சுருங்கி விரிய ஆரம்பித்தது .. குடிச்சிருப்பான் போல..

" சரிதான் நமக்கு இன்னைக்கு ஏழரை "னு நெனைச்சிகிட்டேன்.

நெடி கொஞ்சம் அதிகமாவே இருந்தது. ஆனால் ஆளு தெளிவாதான் இருக்கான். என்னை விட ரெண்டு மூனு வயசு அதிகம் இருக்கலாம். அவன் கழுத்தில் தொங்கிய அந்த குறிப்பிட்ட கொரியர் கம்பெணி அடையாள அட்டை "கார்த்தி , D.O.B ../../1986" என கூறியது. அப்பாடா நான் நினைத்தது போலவே ரெண்டு வயசு பெரியவன் தான். நான் அவன் அடையாள அட்டையைப் பார்ப்பதை புரிந்து கொண்ட அவன்

என்ன பாஸ் அப்படி பாக்குறீங்க? என கேட்க,
"ஒன்னுமில்ல பாஸ் இந்த கொரியர்ல தான் ஃப்ரண்ட் ஒருத்தன் வேல செய்யிறான்"னு சமாளிச்சேன்.
எந்த ஊரு போறீங்க?. "மருவத்தூர்", நீங்க?

"நான் திருச்சி போறேன்"

அட திருச்சிக்காரரா ? "நானும் திருச்சி பக்கந்தான் பாஸ்".
திருச்சில எங்கனு நான் கேக்க,

"பக்கத்துல லால்குடி"(அதுதான் இவ்ளோ குடியா?)
"நான் பெரம்பலூர்"னு என் ஊர சொன்னேன். "இங்கதான் சென்னைல ஒரு ப்ரைவேட் கம்பெணில க்வாலிட்டி கன்ரோலரா இருக்கேன். மருவத்தூர்ல ஒரு வேல .. அதான் போயிட்ருக்கேன்"னு சொன்னேன்.

"பரவால்ல நம்ம ஊருக்காரங்க நெருங்கி வந்துட்டோம்"னு சொன்னான் .

சில நிமிட அமைதிக்குப் பின் ஆமா சென்னைல எங்க இருக்கீங்க? னு நான் ஆரம்பித்தேன்..
"குரோம்பேட்டை" னு அவன் சொன்னதும் எனக்கு சந்தோசம்..
" அட நானும் குரோம்பேட்டைல தான் இருக்கேன் பாஸ்".
அப்படியா?.. னு அவன் ஆச்சரியமாய் கேட்டு அவன் இருக்கும் ஏரியா பெயரைச் சொல்ல அதுக்கு 2K.m தொலைவில் இருக்கும் என் ஏரியாவ நான் சொன்னேன்.
"அட ஒரே ஊருக்காருங்க இங்கயும் ஒரே இடத்துல.. பரவால்லயே" னு சொல்லும் அவன் முகம் அவனுக்கு கொஞ்சம் போதை ஏறியிருந்ததைக் காட்டியது.

சும்மா சொல்லக் கூடாது , குடிச்சிருந்தாலும் அவன் தெளிவான பேச்சு இவனைப் போயி ஏழரை னு நெனைச்சிட்டோமே னு தோனுச்சு.

சரி, அவன அப்படியே விட்டுட்டு, செல்ஃபோன் எடுத்து காதுக்கு ஹெட்ஃபோனைக் கொடுக்க.. அப்போது அவனுடைய செல் 'ஏதோ வானிலை மாறுதே' னு இசைக்க.. போனை எடுத்துப் பேசியவன் கொஞ்சிக் குலைந்தான்.

"அப்பா ஊருக்குதான் வர்ரேன்டா.. காலையில வந்துடுவேன்..... நிஜமா ..இல்ல இல்ல பொய் சொல்லலடா.. பஸ்ல தான் வந்துகிட்டு இருக்கேன். இந்தா பக்கத்துல இருக்க அங்கிள் கிட்ட குடுக்குறேன் நீயே கேளு" என சொல்லிவிட்டு..,
" என் பையன் பாஸ் ஊருக்கு தான் வர்ரேன்னு சொன்னா நம்ப மாட்டேங்குரான்., பேசுங்க பாஸ்" என என்னிடம் நீட்ட அதை வாங்கி நானும் "தம்பி அப்பா ஊருக்குதான் வர்ராரு .. பஸ்ல வந்துகிட்டே இருக்காரு" னு கொஞ்சம் கொஞ்சி விட்டு..அவனிடம் செல்லை நீட்டியபடி "பையன் நல்லா பேசுரான்.. பயங்கர சுட்டியா இருப்பான் போல"..! ..
பேரு என்ன ?னு கேட்டேன் .

"அவன் பயங்கர வாலு சார் ..பேரு சுரேஷ் "னு சொல்ல புன்னகைத்தபடி என் கண்கள் விரிந்தது.

அதை கவனித்தவன் என்ன என்பது போல் பார்க்க.. "அட என் பேரும் சுரேஷ் தான் பாஸ்" என நான் சொல்ல.. அதுவரை அமைதியின் உருவாய் அமர்ந்திருந்த அவனுக்கு ஆவேசம் வந்ததைப்போல் என்னை முரைக்க.. நான் புரியாமல் விழிக்க... முரட்டுக்குத்து ஒன்று என் மூக்கில் விழுந்து பொரி கலங்க வைத்தது.

சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் பார்க்கும் போதே அவன் மறுபடியும் கையை ஓங்க.. பக்கத்தில் இருந்தவர் அவனை பிடித்ததில் இரண்டாம் குத்து என் தோலுக்குக் கிடைத்தது. அதற்குள் கண்டக்டர் வந்து விட்டார்.. அவனை தடுத்து என்னவெனக்கேட்க அவன் ஒன்றுமே சொல்லவில்லை. மூக்கில் வழியும் கம்யூனிச திரவத்தை துடைத்தபடி நான் எழ என்ன பிரச்சனை னு என்னிடம் கேட்ட கண்டக்டரிடம்..

" தெரியல சார்..... நல்லாதான் பேசிகிட்டு வந்தான்...... திடீர்னு இப்படி அடிச்சிட்டான்"னு நான் சொல்ல பக்கத்தில் இருந்தவர்களும் அதை வழிமொழிய.. அவனைத்திட்டிய படி அவனை பஸ்ஸிலிருந்து
"இறங்குடா" எனச் சொல்லி விரட்டினார்.
அவன் முரைத்துக் கொண்டு உதறி, 'விடுங்க'னு சொல்லி என்னிடம் "சாரி பாஸ்"என்றான்.

அவனைத்திட்டிக்கொண்டு இருந்த கண்டக்டரிடம் ஒரு பெரியவர் .. "தம்பி அவன் குடிச்சிருக்கான் தம்பி . இப்படி நடு ரோட்டுல விட வேணாம்... அடுத்த ஸ்டாப்புல இறக்கி விட்ரலாம்" னு சொல்லி எங்கிட்ட வந்து,"விடுங்க தம்பி குடிச்சிருக்கான்.. நீங்க முகத்த கழுவுங்க"னு சொல்லி தண்ணி பாட்டில நீட்ட வாங்கி கழுவிட்டு வந்து உக்காந்தேன்..

கடுகடுனு கொஞ்சம் வலி.. என்னவா இருக்கும் , ஏன் அடிச்சான்? பல குழப்பத்தோட நான் யோசித்தபடியே வந்து., மருவத்தூர்ல இறங்கும் போது தான் கவனிச்சேன்., பஸ்ல கூட்டம் குறைந்து இருந்தது. அவனைத் தேடினேன்... அவன் எப்போது படுத்தான் என் தெரிய வில்லை . சீட்டுகளுக்கு இடைபட்ட நடைபாதையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.

ஹும்ம்ம்ம்.... பாவம் 'அந்த' பேரால அவனுக்கு என்ன கஷ்டமோ .... . ....?! என
நினைத்துகொண்டு பஸ்ஸை விட்டு இறங்கி என் பெரியப்பா நம்பருக்கு டயல் செய்தேன்.

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (25-May-17, 1:12 pm)
சேர்த்தது : சுரேஷ் சிதம்பரம்
பார்வை : 416

மேலே