மாறா இயல்பு இமயத்திற்கு ஈடு

சேற்றில் பிறந்த செந்தாமரை
இறைவன் சேவடி சிம்மாசனம்......
கருத்து உழன்ற கரித்துண்டே காலப்போக்கில் ஜொலிக்கும் வைரம்....
சிப்பியில் விளைந்த நல்முத்து அலங்கரிக்கும் மணிமகுடம்....
பிறக்கும் இடம் எதுவாயினும்
இயல்பால் அடையும் சிறப்பிடம்....!

வான்பன்னீரும் சிற்றருவி வாவியும்
காதம்பல கடந்து கடல் சேரும்
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
சேரிட இயல்பாய் தான் திரியும்
சமுத்திரம் என்றே பெயர் கொள்ளும்

வெண்கதிரின் ஏழுவண்ண நிறப்பிரிகையும்
மென்குரல்வளை அதிர்வில் பன்மொழியோசையும்
ஆதியை ஆதாரமாக்கிய அத்தனை தாளமும்
ஓரிடம் பிறந்து பன்மையில் மிளிர்ந்தன!

எங்கு பிறந்தோம் எப்படி வளர்ந்தோம்
எங்கு சேர்ந்தோம் எப்படி இணைந்தோம்
எங்கு சிறந்தோம் எப்படி உயர்ந்தோம்
எத்தனை எத்தனை வாழ்வியல் மாற்றங்கள்
இயல்பு திரியாது என்றும் இருந்தால்
இமயத்திற்கு ஈடாகும் ஏற்றங்கள்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

இனிய காலை வணக்கம்!

எழுதியவர் : வை.அமுதா (25-May-17, 3:26 pm)
பார்வை : 64

மேலே