இளமை புதுமை

இளமை புதுமை

அச்சுறுத்தும் காதல் பூட்டுகள்


ரயில் பெட்டிகள், பேருந்துகள், சுற்றுலாப் பகுதிகள், ஆலயச் சுவர்கள் என அனைத்து
இடங்களிலும் காதலர்கள் தங்கள் பெயர்களைப் பொறித்து வைப்பது இந்திய வழக்கமாகவே உள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல இதுபோன்ற கிறுக்குத்தனங்கள் நாகரிகத்தின் உச்சம் என்று சொல்லப்படும்
பிரான்சின் பாரிசிலும் இருக்கிறது. அதற்கான உதாரணமே போன் டி சா பாலம். நெப்போலியனால்
கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலத்தின் நகல் பாலம் இது. இளங்காதலர்கள் தங்கள் காதல்
நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலுடன் பூட்டுகளை இந்தப் பாலத்தின் சட்டகங்களில் தொங்கவிட்டு
அதன் சாவியை சீன் நதியில் விடுவது ஒரு சடங்காகத் தொடங்கியது.
தற்போது பூட்டுகளின் சுமையால் பாலமே பழுதாகும் நிலையில் உள்ளதால், பாரீஸ் நிர்வாகம்
‘காதல் பூட்டுகள்’ அனைத்தையும் அகற்ற முடிவெடுத்துள்ளது. எழில் மிக்க பாரீஸ் நகரத்தின்
நடுவே, ஓடும் நதிக்கு மேல் நிற்கும் இந்தப் பாலத்தின் பெருமையைக் காக்கும் நடவடிக்கை இது
என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போன் டி சா பாலம் மட்டும் அல்ல, பாரீஸ் முதல் ரோம் வரையிலான பல நினைவுச் சின்னங்களையும்
காதலர்கள் தங்கள் பிரார்த்தனையால் ஆக்கிரமித்துவருகின்றனர். ஐரோப்பாவின் கட்டிடவியல்
அற்புதங்களைப் போற்றுவதற்கு ‘காதல் பூட்டுகளை’ விட வேறு வழிகள் உள்ளன என்று கலை
ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரபல ஐரோப்பிய எழுத்தாளர் பெடிரிகோ மொக்கியா, 2006-ல் எழுதிய ‘ஐ வாண்ட் யு’ நாவல்
ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவே இந்தப் பழக்கம் ஐரோப்பியக் காதலர்களிடம் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது. அந்த நாவலில் வரும் காதலர்கள் தங்கள் காதலின் அடையாளமாக பழம்பெரும்
மில்வியன் பாலத்தில் உள்ள விளக்குக் கம்பத்தில் ஒரு பூட்டை மாட்டுவார்கள். இது
புத்தகத்துக்கு வெளியே ரோம் நகரக் காதலர்களிடம் தொடங்கி, பின்னர் ஐரோப்பிய பாலங்கள்
அனைத்தும் காதல் பூட்டுகளால் நிரம்பியதாகத் தெரிகிறது. ஈபிள் கோபுரத்தில் கூடப்
பூட்டுகளைத் தொங்கவிட்ட விஷமக் காதலர்கள் உண்டாம்.
நம் காதலைக் கொண்டாட எதற்கு ஒரு நினைவுச் சின்னத்தை சேதப்படுத்த வேண்டும்? காதலர்கள்
தங்கள் வருகையைப் பதிவுசெய்ய இப்போதுதான் யாருக்கும் சேதமற்ற செல்பி ஒன்றை மொபைலில்
எடுத்துக்கொள்ளலாமே. அல்லதுஅந்த இடத்தை மகத்துவப்படுத்த ஒரு முத்தம் போதுமே. காதலை
உயிர்ப்புடன் வைத்திருக்க எதற்குப் பூட்டு? என்று பாரீஸ் நிர்வாகம் காதலர்களைக் கெஞ்சிக்
கேட்கிறது.

வினு பவித்ரா

தி இந்து
அச்சுறுத்தும் காதல் பூட்டுகள்

எழுதியவர் : (26-May-17, 8:43 am)
Tanglish : ilamai puthumai
பார்வை : 149

மேலே