கண்ட நாள் முதலாய்-பகுதி-07

................கண்ட நாள் முதலாய்..................

பகுதி : 07

யார் அவன்???ஒரு தொடுகையிலேயே என் மனதை கொள்ளையடித்துவிட்டானா??அது எப்படி சாத்தியம்,துளசியின் மனதிலே ஆயிரம் கேள்விகள்,ஆனால் ஒரு கேள்விக்குமே அவளிடத்தில் பதிலில்லை..இதையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தவள்,அம்மாவின் சத்தம் கேட்டே விழித்துக் கொண்டாள்...

"டேய்...சட்டையை விடுடா தம்பி,அவள் கொஞ்ச நேரம் பார்த்திட்டு தரப் போறாள்...அதுக்கு இந்தப் பாடு.."

"இல்லை...அவள் தர மாட்டாள் மா....ரிமோட்டை வாங்கி தாங்க..."

"கொஞ்ச நேரம் சும்மா இருடா,வாங்கித்தாறேன்.."

இது வழமையாக வீட்டில் நடக்கும் நிகழ்வு தான்.அவள் டிவி ரிமோட்டை பறிப்பதும்,ஆதி உடனே அம்மாவிடம் சென்று முறையிடுவதும்....அதன் பின் அம்மா சொன்னாலுமே தான் பார்க்க வேண்டியதெல்லாம் பார்த்துவிட்டே அவனிடம் கொடுப்பாள்....ஆனால் அன்று மனதில் இருந்த குழப்பத்தில் அவளுக்கு தனிமையே தேவைப்பட்டது..அதனால் டீயைக் குடித்ததும் தம்பியிடம் ரிமோட்டைக் கொடுத்துவிட்டு அறைக்குள் ஓடிவிட்டாள்....

கலைவாணியும் இரவு நேரச் சமையலில் பிசியாக இருந்ததால் அவளது முகத்தில் சூழ்ந்திருந்த குழப்பத்தை கவனிக்கவில்லை...

அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தவளுக்கு தூக்கத்தை தவிர அனைத்தும் வந்து தொலைத்தது.அவனை பார்த்திருந்தால் கூட அவளுக்கு இப்படியெல்லாம் தோன்றியிருக்குமோ என்னவோ....அவனைப் பார்க்காமலேயே அவன் தொடுகையில் எதுவோ ஒன்றை உணர்ந்தவளால் அவன் நினைவுகளை எவ்வளவு முயன்றும் அவளது இதயத்தில் இருந்து தூக்கி எறிய முடியவில்லை....

அவள் ஒன்றும் ஆண்கள் வாசமே அறியாதவள் இல்லை....கல்லூரியில் பல ஆண்களோடு நட்பாக பழகியிருக்கிறாள்...இன்று வரையிலுமே அந்த நட்பு கண்ணியமாகத் தொடர்கிறது.பருவ வயதுகளில் அவளுக்கு மூவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பினை அவளாகவே புரிந்து கொண்டு விலகியுமிருக்கிறாள்...

அந்த வயதில் அவளுக்கு ஏற்பட்டதை காதல் என்று சொல்ல முடியாது...அந்த வயதின் மாற்றத்தில் நமக்கு எப்படியான கணவன் அமைய வேண்டும்,அவன் எப்படி இருக்க வேண்டுமென்று எல்லாம் கற்பனையில் அவனை ஒரு ஓவியமாகவே மனதில் வரைந்து வைத்திருப்போம்.அதை ஒத்தது போல் ஒருவரை பார்க்கும் போது நம்மை அறியாமலே அவர்களை பிடித்துப் போகும்....அறிந்தும் அறியாத வயதில் ஏற்படும் அந்த உணர்வைத்தான் பலர் காதல் என்று எண்ணிக் கொள்கிறார்கள்...ஆனால் அது பருவ வயதில் அனைவருக்குமே வருகின்ற ஒரு அழகிய உணர்வு...அதை கடந்து வந்த பின் தான் பலர் அதைப் புரிந்து கொள்கின்றார்கள்...சிலர் அப்போதே புரிந்து கொண்டு விலகிவிடுகிறார்கள்...

இதில் துளசி இரண்டாம் வகையைச் சார்ந்தவள்....13 வயதில் அவளை விட 10 வயது அதிகமான அவளது மச்சான் தீபக் மீது முதல் ஈர்ப்பு வந்தது அவளுக்கு....அவனது குணங்கள் அவளுக்கு பிடித்துப் போக அறியாத வயதிலேயே மனதிற்குள் கற்பனைக் குதிரைகளை பறக்க விட்டாள்....காலப் போக்கில் அது வெறும் ஈர்ப்பு என புரிந்து கொண்டு மனதை மாற்றிக் கொண்டாள்....இன்று தீபக்குக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்...துளசி இப்போதும் தீபக்கோடு கதைக்கிறாள்....ஆனால் இன்று அவளது மனதில் எந்தவிதமான உணர்வுகளும் இல்லை...

துளசியின் மனம் என்றுமே ஒரு நிலையில் நின்றதில்லை...அடிக்கடி அவளது மனதை மாற்றிக் கொண்டேயிருப்பாள்...பலருக்கு இந்த குணம் அவளிடத்தில் பிடிக்காமலிருந்தாலும்...அவள் இப்படி இருப்பதால் தான் பல துயரங்களிலிருந்து அவளால் மீண்டு வர முடிந்தது.அதிக நாட்களுக்கு அவள் சொன்னதையே அவளால் கடைபிடிக்க முடிவதில்லை...இந்த குணம் சிலருக்கு அவள் மேல் கோபத்தை ஏற்படுத்தினாலும் அவளுக்கு நிம்மதியை மட்டுமே கொடுத்துள்ளது..

இந்தக் குணம் அவளிடத்தில் இருந்ததால் தான் 16வயதில் முகநூலில் முகமறியா நபர் மீது ஏற்பட்ட ஈர்ப்பையும்,20 வயதில் பவியின் நண்பர் ஒருவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பையும் கடந்து வர முடிந்தது.20 வயதில் பவியின் நண்பன் ஹர்சனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஹர்சன் விளையாட்டிற்கு என்னை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? என கேட்டது முதலில் அவளுள் கோபத்தை ஏற்படுத்தினாலும் அதுவே அவள் மனதில் இது தான் காதல் என்ற மாயையையும் ஏற்படுத்திவிட்டது...

இரவுகளின் கனவுகளில் ஹர்சனையே நினைத்து தினம் தினம் மனதோடு யுத்தம் நடத்திக் கொண்டிருந்தாள்..அவளின் மாற்றத்தை முதலில் கண்டறிந்தவள் பவி தான்...பவி கேட்டதும் அவளிடம் அனைத்தையும் கூறியவள்...அடுத்து என்ன செய்வதென்று அவளிடமே கேட்டாள்...

"மனதில் போட்டு குழம்பிக் கொண்டு இருப்பதை விட உன் மனதில் இருப்பதை ஹர்சனிடமே நேரடியாக சொல்லி விடு...இதை உன் மனதில் ஒளித்துக் கொண்டு அவனோடு பழகுவதை விட...அவனிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டால் உன் கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்....உன் மனமும் அமைதியாகிவிடும்...."

"ம்ம்....நீ சொல்றதும் சரி தான்....எனக்கு ஹர்சனை ரொம்ப பிடிச்சிருக்கு என்றது உண்மை தான் ஆனால் அது காதல் இல்லை பவி...ஹர்சனை மாதிரி ஒருத்தன் கணவனாக வந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் என்ற எண்ணம் மட்டும் தான் என் மனசில....அதான் இத பத்தி அவன்கிட்ட பேச தயக்கமா இருக்கு..."

"அதனால தான் சொல்லுறன்....நீ ஹர்சனோட நேரடியாவை கதைச்சு ஒரு முடிவுக்கு வா...அதுக்கு பிறகு உன் மனசில எதுவும் இருக்காது.."

அன்று பவி சொன்னதிற்கு மௌனத்தை மட்டுமே பதிலாக விட்டு வந்தவளுக்கு ஒரு கட்டத்தில் அதுவே சரியென்றும் பட்டது....அதனால் மறுநாளே ஹர்சனிடம் தன் மனதில் இருந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறிவிட்டாள்....அதன் பின்னே பவி சொன்னது போல் துளசியின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது....சில நாட்களில் அவளது பேச்சில் ஒரு பக்குவம் வந்திருப்பதை பவியாலேயே உணர முடிந்தது....அதன் பின் ஹர்சன் வெளிநாடு செல்லும் வரையிலும் அவர்களுக்கிடையே தூய்மையான நட்பு தொடர்ந்தது....அவன் வெளிநாடு சென்ற பின் தொடர்புகள் குறைந்துவிட்டாலும் அவ்வப்போது பேசிக் கொள்ளும் வேளைகளிலும் நட்பென்னும் உறவைத் தாண்டி அவர்கள் மனதில் ஒன்றுமே இல்லை....இன்று துளசியின் மனதில் இருப்பது ஹர்சனோடு நட்பாக பழகிய அந்த அழகிய நாட்களின் பசுமையான நினைவுகள் மட்டுமே....

அதன் பின் படிப்பில் மட்டுமே துளசி தன் முழுக் கவனத்தை செலுத்தினாள்....அவளது அந்த கடின முயற்சிக்கு வெற்றியாக மெரிட்டில் பாஸாகி அவள் கற்ற அதே கல்லூரியிலேயே விரிவுரையாளராகவும் இணைந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டாள்....படிக்கும் போது அவளோடு படித்த ஆண்களோடு நட்பு என்ற எல்லையைத் தாண்டி அவள் பழகியதுமில்லை...அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் அவளுக்கு யார்மீதும் எந்தவித உணர்வுகளும் தோன்றவுமில்லை...

இப்படி அமைதியாகச் சென்று கொண்டிருந்த துளசியின் வாழ்க்கையில் யாரென்றே அறியாத ஒருவன் புயல் வீசிச் சென்றால் அவள் தான் என்ன செய்வாள்...முன் தோன்றிய ஈர்ப்புகளை ஒதுக்கி அதிலிருந்து மீண்டு வந்தவளால் அவனை ஓரங்கட்டி அதிலிருந்து மீண்டு வர மட்டும் அவளால் முடியவில்லை..

இதையே யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தவள்....அவளை அறியாமலேயே அன்றைய நாளுக்கான டயரியின் பக்கத்தில் சிறு கவிதையொன்றை எழுதினாள்...

"தொடுகையொன்றில்
என் மனம் தொட்டுச்
சென்றவனே...
மோதலில் எனக்குள்
காதல் விதைத்துச்
சென்றவனே...
என் கண்கள் கண்டு
கொள்ளாத உன்னை
என் கரங்கள் பற்றிக்
கொள்ளுமா....??"

காலம் அவளது மனதை மட்டுமில்லை...வாழ்க்கையையுமே போர்க்களமாக்க காத்திருக்கிறது என்பதை அறியாமல் அவனது நினைவுகள் தந்த மயக்கத்தில் அப்படியே உறங்கியும் போனாள் துளசி..



தொடரும்.....

எழுதியவர் : அன்புடன் சகி (27-May-17, 9:51 am)
பார்வை : 711

மேலே