பரத்தை கூற்று சிசரவணகார்த்திகேயன் அகநாழிகை விலை ரூ50

அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் ‘தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை.

ஜி.நாகராஜன் (சதங்கை, ஏப்ரல் 1984)

கற்பு – அது மகாவார்த்தை

அதுவும் இந்த தேசத்தைப் பொறுத்த வரை அது ஒரு தர்மம் – ஒருதலைப்பட்சமான ஒரு கருத்துருவாக்கத்தை த‌ர்மம் என்ற‌ழைப்பதே முரண்நகை என்ற போதிலும். கற்புக்காக உயிரை விட்ட, ஊரை எரித்த பெண் பிம்பங்கள் வாழ்ந்த இதே மண்ணில்தான் ஒருவேளை சோற்றுக்காக பெண்கள் கற்பை விற்கும் அவலமும் நிகழ்கிறது. பார்க்கப் போனால் கற்பு என்பதே ஓர் ஆணாதிக்க நுண்ணரசியல் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பெண்களுக்கு எதிரான‌ அச்சித்தாந்தத்தை மிகுந்த பிரேமையுடன்‌ முன்னெடுத்துச் செல்வதே பெண்கள் தான் – கற்புக்கரசியாய்த் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் நம் வீட்டுப் பெண்கள்.

இரு உறுப்புக்களின் சில நிமிட உராய்வு எப்படி ஒருத்தியின் ஒழுக்கவியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியத்தின் சுகந்தமே தேங்கி நிற்கிறது. ஆந்த்ரபோலஜியின் அடிப்படையில் பார்த்தால், இன்னாரை இன்னார் மட்டுமே புணரலாம் என்கிற ஆதாரக் கோட்பாட்டுடன் நாகரிக மனிதன் தொடங்கி வைத்த நமது பாரம்பரிய குடும்ப அமைப்பு முறை தான் முதல் வேசி ஜனிக்க‌க் காரணமாய் இருந்திருக்கக் கூடிய ஆணி வேர் எனத் தோன்றுகிறது. இன்று சில்லாயிரமாண்டுப் பரிணாமத்திற்குப் பின் அது முகிழ்த்தெழுந்து கிளை பரப்பி மிகப் பிரம்மாண்ட‌மானதொரு விருட்சமாகியிருக்கிறது.

இன்று இது வெறும் தொழில் அல்ல; வர்த்தகம் – ஓராண்டில் உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் புர‌ளும் விஷயம். ஆனால் அதை நேரடியாய் முன்னின்று நிகழ்த்தும் தொழிற்காரிகளுக்கு உலகின் எந்த மூலையிலும் மதிப்பில்லை – இந்த வியாபாரத்தின் தாய்நாடாகக் கருதப்படும் தாய்லாந்தில் கூட. பெண் எனப்படுபவள் இங்கு தான் நிஜமாலுமே சுரண்டப்படுகிறாள் – தன்னைச் சுற்றி இயங்கும் போலீஸ்காரன், பத்திரிக்கை நிருபன், பாலியல் மருத்துவன், சாராயம் விற்பவன், அரசியல் செய்பவன், சினிமா எடுப்பவன், ஆன்மீகம் போதிப்பவன், ரவுடித்தனம் பண்ணுபவன், வியாபாரத்தில் பழுத்தவன், காசுக்கு வருபவன் என‌ப் பாரபட்சமின்றி எல்லோராலும் எப்போதும் எங்கும்.

இந்தியாவில் 28 லட்சம் பாலியல்தொழிலாளிகள் இருக்கிறார்கள் – இது மே 8, 2007 அன்று அப்போதைய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராய் இருந்த ரேணுகா சௌத்ரி பாராளுமன்ற‌ லோக்சபாவில் அளித்த அதிகாரப்பூர்வத்தகவல். ஆனால் கிட்டதட்ட இதே காலகட்டத்தில் வெளியிடப்பட்ட‌ HUMAN RIGHTS WATCH என்ற சர்வதேசிய‌ அமைப்பின் ரிப்போர்ட் வேறு கணக்கை முன்வைக்கிற‌து. இந்தியாவில் 1½ கோடி பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அது சொல்கிறது. அதாவது‌ இந்த தேசத்தின் மொத்த மக்கட்தொகையான 110 கோடியில் சரிபாதி 55 கோடி பேர் பெண்கள் என்று வைத்துக் கொண்டால், ந‌ம் கல்லூரியில், நம் அலுவலகத்தில், நம் வீட்டில் என நம்மைச் சுற்றியுள்ள, நாம் நன்கறிந்த‌ 36 பெண்களில் ஒருத்தி தன் பாலியலை ஏதேனும் ஒருவகைப் பொருளாதாரப் பண்டமாற்றில் விற்றுக்கொண்டிருகிறாள் என்று அர்த்தம்!

0

பாலியல் தொழிலாளி என்பது நாசூக்கு – தேவடியாள் என்பதில் தெறிக்கும் வேதனையும் கம்பீரமும் இதிலிருப்பதாக‌த் தோன்ற‌வில்லை. இன்றைய தேதியில் பொருளாதார, சமூக மற்றும் மத காரணிகள் தாம் விபச்சாரத்தை நோக்கி ஓர் இந்தியப் பெண்ணை இழுப்பவை. இதில் இடம், பொருள், ஏவலுக்கேற்ப‌ Streetwalkers, Brothels, Escorts என‌ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புத்தவதாரம் கொள்கிறாள் அவள். உடலே இதன் முதலீடு.

அதிலும் இளமையே பிரதானம் (“The profession of a prostitute is the only career in which the maximum income is paid to the newest apprentice” – William Booth). இதனாலேயே‌ உலகின் வறுமையண்டிய பிரதேசங்கள் பலவற்றிலும் பூப்படையாத‌ சிறுமிகள் அல்லது just now பூப்படைந்தவர்கள் கூட என்ன நடக்கிறது என்கிற‌ புரிதல் சிறிதுமற்று விபச்சாரத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். இதில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கதை கவிதை காவியம் – இளமை வறுமை மட்டும் பொது. பெண்ணைப் பொதுவுடைமையாக்குகிற‌ புரட்சி இது!

“The world’s second oldest profession” என்ற புகழ் பெற்ற பிரயோகம் மூலம் அரசியல், உலோகவியல், யுத்தம், தத்துவம், உளவு, உழவு, கல்வி, கடவுள் என சில‌வற்றை உலகின் இரண்டாவது மிகப்புராதனமான தொழில் எனக்குறிக்கிறார்கள் – அதாவது இப்பயன்பாடு பிரபல்யமடைந்ததே மறைமுகமாக விபச்சாரத்தை முதலாவதெனக் குறிப்பதால் தான். பால் ரெனால்ட்ஸ் என்ற பிபிசி பத்திரிக்கையாளர் பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஆதாரம் சொல்லி இதன் தொன்மத்தை நிறுவுகிறார் – ஆதாம் ஏவாள் காலத்துப் பழமை!

நமது பண்டைத் தமிழ்க் கலாசாரத்தில் பரம்பரையாகப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு நேர்ந்து விட்ட யுவதிகளை ‘தேவரடியாள்’ என்பர். இதே முறை சில‌ வித்தியாசங்களுடன் வட‌ இந்தியாவில் ‘தேவதாசி’ என்றழைக்க‌ப்படும். இன்னமும் மகாராஷ்ட்டிர‌ – கர்நாடக எல்லை மாவட்டங்களில் இம்முறை புழக்கத்தில் இருக்கிறது. சங்கப்பாடல்களில் வரும் பரத்தையும், சிலப்பதிகாரம் கூறும் மாதவியும் இவ்வினமே. இவர்கள் பிரதானமாக ஆடும் கலையையும், பின் நிதானமாகக்கூடும் கலையையும் கைகொண்டிருந்த‌தார்கள். ஒழுக்க விதிகளின் அழுத்தத்தினின்று ஆண் வர்க்கம் பிசகினால் கெடக் கூடிய‌ சமூக அமைதியை நிலைநிறுத்துவதற்குக்கட்டமைக்கப்பட்ட வடிகால்களாகவே இவர்கள்தென்படுகிறார்கள்.

இவர்களுக்கென்று ஊரில் தனி இடம் (தளிர்ச்சேரி என்பர்) இருந்திருக்கிறது. இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டிய போது சிற்பிகளுக்கும், பிறருக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் 400 தேவரடியார்களை அனைத்து வசதிகளும் செய்து தந்து உடன் வைத்திருந்ததைப்பற்றியெல்லாம் படிக்கும் போது பொது மக்களுக்கும் இவர்களிடம் ஒரு வகையான கலவையான‌ மதிப்பும் மரியாதையும் இருந்திருப்பதாகவே தோன்றுகிற‌து.

பின் வந்த முகமதியர் படையெடுப்பு, ஆங்கிலேயர் ஆட்சி போன்ற பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் அதன் விளைவான கலாசார மாற்றங்களால் இந்த‌ இனம் சிதறிப் போயிருக்க வேண்டும். குறிப்பாய்க் கடைசி ஐந்து நூற்றாண்டுகளில் பிறப்பின் அடிப்படையில் மட்டுமல்லாது வறுமையின் காரணமாகவும் பெண்கள் வேசித் தொழில் புரியத்தலைப்படலாயினர். தேவரடியாள் இறந்தாள்; தேவடியாள் பிறந்தாள்.‌

0

தன் கணவனுடன் மட்டும் கூடி, அவனில்லாத போழ்து (அவனிருக்கும் போதும்!) மனதால் கூட பிற ஆடவனை நினையாத பதிவிரதைகளான உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தினர். கதையில் இங்கு தான் சிக்கல் ஆரம்பம் – ஒன்றை ஏற்றினால் மற்றொன்றை இறக்கித்தானே ஆகவேண்டும். நேரெதிர்நிலையாக‌, வழி தேடியலையும் சுக்கிலத்துக்கும் வக்கிரத்துக்கும் கட்ட‌ணக்கழிப்பிடமாய், ஆண் அவ‌ஸ்தைக்கெனப் பிர‌த்யேகமாய்ப் புனையப்பட்ட‌ தூமைத்துணிக்கிழிசலாய் வாழ்ந்து கொண்டிருந்த‌ வேசியினம் இதற்கு இல‌க்கானது. பத்தினிகள் இன்பந்துய்க்கும் பொருட்டு அத்தினிகள் துன்பமேற்கலாயினர்.

ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் தான் ஆதாரப்பிரச்சனை.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் – நம்மிடையே ஆழப்பதிந்திருக்கும் வேசிகள் குறித்த கோபமும், வெறுப்பும் எவ்வளவு தூரம் நியாயமானது, எத்தனை சதவிகிதம் நிஜமானது. யோசித்துப்பார்த்தால் வேசி என தனித்து ஓரினமும் கிடையாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு கணத்தில் விபச்சாரியாக‌ நடந்து கொள்கிறோம் – மனதாலும் உடலாலும். அதிலும் குறிப்பாய்ப் பெண்ணினம் ஆதிகாலந்தொட்டு ஆணைச் சார்ந்து வாழ நேர்வதால் தன் உடலையே மூலதனமாக்கி தான் விரும்பியதை சாதித்துக் கொள்ள முயல்கிறது. (“இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு” என்று ஒரு புளியமரத்தின் கதை நாவலில் சுந்தர ராமசாமி சொல்வதைக் கவனியுங்கள்). பரிணாமத்தின் ஓர் எளிய சமன்பாடு இது.

வேசியினம் தோன்றும் முன்பே வேசித்தனம் தோன்றி விட்டது என்ப‌து தெளிவு.

க்ளியோபாட்ரா முதல் மர்லின் மன்றோ வரை இதற்கு பல சர்வதேசிய‌ உதாரணங்கள் சொல்லலாம் (இவ்விடயத்தில் உள்நாட்டு சங்க‌திகளை எடுத்துக்காட்டுவது சரீரத்திற்கு அவ்வளவாய் உகந்ததில்லை என்பதாலும், name-dropping செய்வது நவீன‌ இலக்கிய‌‌ மோஸ்தர் என்பதாலும்). நாம் எல்லோரும் தேவையேற்படும் போது மட்டும் செய்யும் விஷயத்தை வேசிகள் தொழிலாகவே செய்கிறார்கள் என்பது தான் பிரதம‌ வித்தியாசம்.

நூற்றாண்டுகளாய் வையம் முழுக்க இது புரிந்து கொள்ளப்படவே இல்லை (அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை). வேசிகள் எதிலும் தவிர்க்கப்பட்டார்கள்; நஞ்செனத் தூற்றப்பட்டார்கள்; காறி உமிழப்பட்டார்கள். புணர்ச்சி தான் அவர்களுக்கு நாமளிக்கும் உச்சபட்ச மரியாதை. தீண்டலால் அவர்கள் அடையும்‌ தீண்டாமை இது. சட்ட‌ ரீதியாய் அவர்களுடைய களப்பணி அங்கீகரிக்கப்படாதிருப்பதால் நிகழும் பிறழ்வு. அவர்களுக்கு நேரும் அத்தனை அவமானங்களையும், துர்அனுபவங்களையும் அதன் நீட்சியாகவே கொள்ள வேண்டும். இந்தத் தொகுப்பின் நோக்கமே அல்லது தேவையே அங்கே தான் மையமிட்டிருக்கிறது – அதாவது விபச்சாரிகள் என்று சிலரை முத்திரை குத்தி, சமூக அந்தஸ்தை மறுத்து கீழானவர்களாக நடத்துவதை எதிர்க்கும் நோக்கிலான‌ அரசியல்.

ஒரு குற்றத்தை இரண்டு வழிகளில் அணுகலாம். முறையான சட்டங்களின் மூலமாக‌ யாருமே அதைச் செய்யாது கட்டுப்படுத்துவ‌து முதல் வழி. தடுக்க முடியாத அளவுக்கு கை மீறிப்போன விஷயமென்றால் எல்லோரும் அதைச்செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டப்பூர்வமாக்கி விடுவது மற்றொரு வழி. இந்த இரண்டாவதின் முக்கிய நோக்கமே அதைக் குற்றமில்லை என்று சொல்வதன் மூலமாக தொடர்புடைய உபகுற்றங்களைத் தடுப்பது தான். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதன் மூலமாக மட்டுமே அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் ஒப்பீட்டளவில் ச‌ற்ற‌திக சமூக அந்தஸ்தையும் அளிக்க முடியும்.

நளினி ஜமீலா தனது ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை நூலில் சொல்வது போல் – “இங்கே விற்பனை செய்யப்படுவது அன்போ, காதலோ அல்ல. ஒரு நபருடன் குறிப்பிட்ட நேரத்தைச்செலவிட ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அப்போதைய மன அமைதியையும் பரிவையும் அளிக்கிறோம். இதை விற்பனை செய்யக் கூடாது என்று சொல்வதை விட தேவைப்படாதவர்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வது தான் நல்லது”. இது மிக முக்கிய, முதிர்ச்சி வழி வந்த‌ ஒரு நிலைப்பாடு.

0

சங்க இலக்கியங்களின் புறத்திணைப்பாடல்களில் இன்னாரை இன்னார் பாடியது என்று பெயரோடு வெளிப்படையாகவும், அகத்திணைப்பாடல்களில் இன்னார் கூற்று என்று பெயர் தவிர்த்து பொதுப்படையாகவும் கூறுத‌ல் வழக்கம். இவற்றில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று போன்றவற்றோடு பரத்தை கூற்றும் காணக்கிடைக்கிறது – ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையில்.

பரத்தை கூற்றாய் எட்டுத்தொகையுளடங்கும் சங்க இலக்கியங்களான அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் சில பாடல்கள் இருந்த போதிலும் அவை யாவும் மேலோட்டமாய் பேசிச் செல்லும், பூசி மெழுகப்பட்ட வகையறா. அந்தச் சிற்றினத்தின் (சிற்றின்ப இனத்தின் என்றும் கொள்ளலாம்) உணர்வுகளை வெளிப்படையாய் அவை முன்வைக்கவில்லை. வள்ளுவர் கூட திருக்குறளில் அயல் மகளிரை நாடுதல் பெரும்பாவம் என்பதான ஓழுக்கவியல் கோட்பாட்டைத் தான் நிறுவியிருக்கிறாரே ஒழிய (பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் / ஏதில் பிணந்தழீஇ அற்று) அப்பெண்களின் நிலையிலிருந்து ஏதும் பேசவில்லை.‌ இப்படித் தான் பன்னெடுங்காலம் பயணித்தோம்.

பின்பு நவீனத் தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ், சாரு நிவேதிதா, புஷ்பா தங்கதுரை போன்றவர்களது படைப்புகளில் இது பற்றிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன. நவீனக் கவிதைகளில் தமிழ்நாடன் (காமரூபம்), மகுடேசுவரன் (காமக்கடும்புனல்), விக்ரமாதித்யன் (தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள்) , ஆண்டாள் பிரியதர்ஷினி (மன்மத எந்திரம்), வா.மு.கோமு (சொல்லக் கூசும் கவிதை) என நீளும் காலவரிசையிலான இப்பட்டியலின் வால்புறம் நிற்கிறதென் பரத்தை கூற்று.

இக்காப்பிய‌த்தில் பரத்தையே தலைவி.

களைத்துறங்குபவன் குறட்டையொலிக்கும், ஓயாது மனதிசைக்கும் சிருங்கார ஒலிக்கும் இடையே இழைக்கப்பட்டவை இக்கவிதைய‌னைத்தும். அழுக்காய் அசிங்கமாய் நாசி பெயர்த்தெறியும் துர்வீச்சத்துடன் இருக்கலாம் பிசுபிசுத்த‌ ஈரச்சீழ் வடிந்துலர்ந்த இந்த‌ யோனியெழுத்து – அது படிப்பவர் மனசு பொறுத்து. என் வரையில் குற்றவுணர்ச்சியோ பாசாங்கோ இல்லாததொரு நனிநெஞ்சம் மிக விரும்பும் இக்கவிதைகளை. அதே போல் இவற்றை நிராகரிக்கும் உரிமையும் தகுதியும் உண்டு உண்மையுணர்ந்த வேசிகளுக்கு.

கோயிலில் பூஜை செய்வதைப்போல், எல்லையில் யுத்தம் புரிவதைப்போல், உள்ளாடை ஏற்றுமதி செய்வதைப்போல், சாக்கடையில் மலம் அள்ளுவதைப்போல், ஐபிஎல் க்ரிகெட் விளையாடுவதைப்போல், உடம்பை விற்கும் விபச்சாரமும் மற்றுமொரு தொழில் தான் – நெல்முனையளவு கூட எந்த வித்தியாசமும் இல்லை, அதைச் செய்து பிழைக்கும் பெண் எந்த வகையிலும் தீங்கானவள் அல்ல என்ற சமூக உளவியலை ஏற்றவே இக்கவிதைகள் பிரயத்தனப்படுகின்றன – அவள் உடல் அல்லாது மனமே இதில் நிர்வாணப்பட்டிருக்கிறது.

இக்கவிதைகள் தீர்ப்போ தீர்வோ அல்ல. எது நிலையோ எது நிஜமோ அதைப் பற்றின‌ ஒரு புனிதம் கெடாத பகிரல் மட்டுமே. கோபமாக, விரக்தியாக, எள்ளலாக, புலம்பலாக, சோகமாக, சாபமாக எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையாக அவர்களின் உண‌ர்வுகளை அவர்களின் உணர்ச்சிகளை அவர்களின் பாஷையிலேயே எவ்வித‌ கவித்துவப்பூச்சுகளோ, படிமங்களின் பாசாங்கோ இன்றி‌ (கவிதைகளின் ஐந்திணைக் கருப்பொருள் பகுப்பும் கூட‌ loosely-coupled சமாச்சாரமே) அசலாய்ப் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். மற்றபடி, வசன கவிதைகள் எழுதிப் படிப்பதால் எல்லாம் மாறிவிடப்போவதில்லை இந்தப் புராதனப் பேரினத்தின் சரித்திரமும் தரித்திரமும் – புன்னகை அல்லது கண்ணீர் கூடப்பயனில்லை.

தேவை புரிதல் – இந்த Vaginal Monologues யாசிப்பதெல்லாம் அதைத்தான்.

0

காமம் என்பதை வெறும் பெயர்ச்சொல்லாக‌வும் (அதுவும் தொழிற்பெயர்!), கொஞ்சம் கற்பனையாகவும் மட்டுமே ஸ்பரிசித்திருந்த ஓர் இருபத்தியொரு வயது இளைஞனால் இன்றிலிருந்து சரியாய் நான்கரை வருடங்களுக்கு முன்பு வேசியின் கவிதைகள் என்ற தலைப்பில் ஐந்நூறு சிறுகவிதைகள் ‌(மூன்று முதல் ஒன்பது அடிகளுள்அமைந்தமையால் சிறுகவிதை என்றழைக்க விரும்புகிறேன்) எழுதப்பட்டன – கிறுக்கப்பட்டன என்பதே சரி.

அந்தக் கவிதைகள் இவை; அந்த இளைஞன் நான்.

கடந்து போன சமீபங்களில், குறைந்தபட்சம் பத்து முறைகளேனும் அக்கவிதைகளைத் திருத்தியிருக்கிறேன்; பல்வேறு அடிப்படைகளில் சொல், பொருள், வரிசை எல்லாம் கலைத்துப் போட்டு மறுபடி சீராக்கியிருக்கிறேன்; ஓர் அறுவை சிகிச்சைக்கொப்பாக அவற்றின் உருவத்தை, உள்ளடக்கத்தை கூறாக்கிக் கூராக்கியிருக்கிறேன்; கிட்டதட்ட முக்கால்வாசிக்கும் மேல் பலவீனமானவை என்று நிராகரிக்கவும் செய்திருக்கிறேன். சில புதிதாகச் சேர்த்தவை. இறுதியில் மிஞ்சியவை தாம் இந்த நூற்றைம்பது பாக்கள்.

முதலில் இத்தொகுதிக்கு வைத்திருந்த தலைப்பான வேசியின் கவிதைகள் என்பது ஓர் ஆரம்பக்கல்விப் பாடப்புத்தகத்தனத்துடன் இருப்பதாகத்தோன்றியதாலும், அத்தலைப்பில் நவீனத்துவம் அல்லது பின்நவீனத்துவம் போன்றவை கிஞ்சித்தும் இல்லாதிருந்ததாலும்‌, அந்த லேபிளெல்லாம் இல்லாவிட்டால் தீவிர இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாது புத்தக‌ விநியோகஸ்தர்கள், பழைய பேப்பர் வியாபாரிகள் கூட‌ பிரதியை நிராகரிக்கும் அபாயம் இருந்ததாலும் தொடர்புடைய‌ சிலபல பெயர்களைப்பரிசீலித்து (அவற்றில் ஒன்று யோனி; மற்றொன்று அதன் பிரபலமான‌ தமிழ்க்கொச்சை!) இறுதியில் தேர்ந்தது பரத்தை கூற்று.

யோனி என்று தலைப்பு யோசித்தது கூட‌ அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக (மட்டும்) அல்ல.அதை விடப்பொருத்தமாய் இதற்கு வேறொ‌ரு பெயர் இருக்க முடியாது என்பது என் அந்தரங்க நினைப்பு. மென்பொருள் துறையில் வேலை செய்பவர்களைப் பற்றிய ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு கணிப்பொறி என்று பெயர் வைப்பதைப் போல், சாவு மேளம் அடிக்கும் சகோதரர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட ஒரு தடிமன் நாவலுக்கு பறை என்று பெயர் வைப்பதைப் போன்றதே இது. வேசித்தொழிலுக்கு யோனியே குறியீடு. அதைத் திரிதலின்றிப் புரிந்துணரும் பக்குவம் சமூகத்துக்கு வாய்க்க‌ இன்னுமொரு யுக‌ம் தேவை. காத்திருக்கும் பொறுமையில்லாததால் சிறிய ஏற்பாடாகத் தலைப்பை மாற்றினேன்.

அதே போல், புத்தகத்தின் அட்டைக்கு எம்.எஃப்.ஹுசைனின் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஓவியங்களைப் பயன்படுத்தலாம் என்கிற எண்ணத்தை நமது கலாசார காவலர்களின் மேலுள்ள அபிரிமித மரியாதையினால் கைவிட வேண்டியதாயிற்று. பதிலாய் தற்போது அட்டையிலிருப்பது 1907ல் பிக்காஸோவால் வரையப்பட்ட Les Demoiselles d’Avignon என்ற ஆயில் பெயிண்டிங். ஒரு விபச்சார விடுதியில் ஐந்து வேசிகளை காட்சிப்படுத்தும் இதற்கு ஆணாதிக்கம் முதல் காலனியாதிக்கம் வரை பல அர்த்தங்கள் சொல்கிறார்கள்.

இக்கவிதைகள் “Of the Prostitutes, By the Prostitutes, For the Prostitutes” என்ற போதிலும் இவையாவும் யான் கண்டு கேட்டு கற்றுயிர்த்தவையின் ஞாபகச்சில்லுகளே. மற்றப‌டி, வேசியைப் பற்றி எழுத உனக்கென்ன தகுதியிருக்கிறது, உனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம், நீ போயிருக்கிறாயா ஒருத்தியிடமாவது, குறைந்தபட்சம் சாவித்துவாரம் வழியாகவேனும் பார்த்திருக்கிறாயா போன்ற அறிவுஜீவிக் கேள்விகளையெல்லாம் எளிமையான ஒரு புன்னகையின் துணையோடு கடந்து போக உத்தேசித்திருக்கிறேன்.

இங்கே நான் நிறுத்துகிறேன் – இனி வேசிகள் பேசுவார்கள்.

(பரத்தை கூற்றின் முன்னுரை)

0

சி. சரவணகார்த்திகேயன்

எழுதியவர் : (27-May-17, 11:40 am)
பார்வை : 177

சிறந்த கட்டுரைகள்

மேலே