முடிவில் ஒரு துவக்கம்

இன்றைய நாள் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேர அவகாசமே இருந்தது. இடைப்பட்ட நேரத்துக்குள்ளே முடிவெடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார் சிவபிரகாசம்.

அவரைப் பற்றி என்ன சொல்வது..?

மிகப்பெரிய தொழிலதிபர் இல்லையென்றாலும் வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து தனது கடின உழைப்பால் ஓரளவு வசதியுடைய தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

65 வயதாகும் சிவபிரகாசகத்திற்கு மனைவி இறந்து 15 வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆசையாக பெற்ற மகன்களும் வெளிநாடுகளிலேயே தங்கி விட்டார்கள். தனியாக தொழிலை கவனிக்க முடியாததால் கடனாகிப் போனார். எல்லாத் தொழில்களும் கைவிட்டுப்போனது. கடன்காரர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய வேலை மட்டுமே நிரந்திரமாகிப் போனது. இந்தநிலையில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என்று அவருடைய மகன்கள் தீர்மானமாகக் கூறிவிட்டனர்.

மகன்களுடன் வெளிநாட்டிற்கு சென்று தங்கிவிட அவருடைய மனம் இடம்கொடுக்கவில்லை. கடைசிவரை இந்த வீட்டிலேயே இருந்துவிட வேண்டுமென்பது அவருடைய விருப்பம். அவருடைய விருப்பத்தை மகன்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. வீட்டை விற்று கடன்போக மீதிவரும் பணத்தை பங்கு போடுவதையே குறியாக இருந்தனர்.

வீட்டை விற்றுவிட்டால் சிவபிரகாசத்தின் கதி..? இருக்கவே இருக்கு ஏராளமான முதியோர்கள் இல்லம்.
ஆனால் சிவபிரகாசத்திற்கு முதியோர்கள் இல்லத்தில் போய் சேருவதற்கும் மனமேயில்லை. மற்றவர்களுக்கு அடங்கிப்போய் வாழ்வதில் என்றுமே அவர் உடன்பட்டதில்லை. பாசத்திற்கும் அரவணைப்புக்கும் ஏங்கிய அவரது மனம் எந்திரமயமான வாழ்க்கையை விரும்பவுமில்லை.

இத்தனை வருட போராட்ட வாழ்க்கையும் அவரை சலிப்படைய செய்துவிட்டது. இந்த வீட்டை விற்பதை தன்னுடைய கௌரவ பிரச்சனையாகவும் எண்ணத் துவங்கினார். மானம் போனபின் வாழ்வில் என்ன இருக்கிறது..?. பேசாமல் தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்ற நினைப்பும் அவரை தெளிவான முடிவெடுக்க விடாமல் திணறச் செய்தது. இந்தமாதிரி சூழ்நிலைகளில் உதவிக்கு வருவது இராமசாமி மட்டுமே.

தூக்கம் வராமல் திணறிய சிவபிரகாசம் காரை எடுத்துக்கொண்டு இராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து எலியட்ஸ் பீச்சை நோக்கி ஓட்டினார்.

“என்ன பிரகாசம்... என்ன முடிவு செஞ்சிருக்கா..?”

“குழப்பமா இருக்கு...”

“இதுல என்னடா குழப்பம்...”

“உனக்குத்தான் தெரியும்ல என்னபத்தி... எப்படி வசதிய வாழ்ந்தவன்னு... கொஞ்சம் நோடுஞ்சுபோச்சு உண்மதான்... அதுக்காக வீட்ட வித்துதான் கடன அடைக்கணுமா..?. எம்மவனுங்க நெனச்ச... வீட்ட விக்கமலே பிரசனைய தீர்க்க முடியும். ஆனா... அவிங்க என்னடான... எங்கிட்ட இருந்து எவளவு கரக்கலாம்னுதான் நினக்கிரனுங்கலொழுய... ஏதோ அப்பனுக்கு உதவனும்னு நெனப்பே வரமாட்டுது...”

“ம்...”

“நா... நல்ல இருக்கும்போது எத்தன பேருக்கு ஒதவி செஞ்சேன்னு ஒனக்கு தெரியும்... ஆனா... நா... கஷ்டப்படும்போது எவனும் ஓதவவேணாம்... ஆறுதல ஒரு பேச்சுனாச்சும் பேசலாம்ல... இப்பல்லாம் என்ன பாத்த... ஏமன பாத்தமாரி ஓடி ஒழியிரானுங்க...”

“இதாண்ட ஒலகம்... இப்பவாது புரிஞ்சுக்கோ...”

“நல்ல புரியுதுடா... அதான்... ஒரும் முடிவு எடுத்திட்டேன்...”

“என்ன முடிவு..”

“இந்த நன்றி கேட்ட ஒலகத்துல வாழ விரும்பல...”

“அதால தற்கொல பண்ணிக்கப்போற... அப்படித்தான..?”

“யெஸ்... தற்கொல தான் பண்ணிக்கனும்...”

“எத்தனாவது தடவ...?”

“என்னடா ஒளர்ற...?”

“இல்ல... நீ எத்தனாவது தடவ தற்கொல பண்ணிக்கபோற தெரியுமா..?”

“பழச எடுக்காத...”

“சொல்றவன் எதையும் செய்யமாட்டான்...”

“அப்பல்லாம் நீ என்ன காப்பத்திட்ட... இப்ப ஒன்னால முடியாது...”

“ம்ம்... கண்டிப்பா... என்னல முடியாது... ஆனா....?”

“என்ன... ஆனா....?”

“ஒன்னால முடியும்...”

“எவன் கால்லயாவது விழச்சொல்றியா...?”

“ச்ச்சீ...அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்...”

“பின்ன..?”

“ஒன்னோட பழய வாழ்க்கைய நெனச்சுபார்... போதும்...”.

நாற்பது வருடங்களுக்கு முன்னர் மதுரையிருந்து வேலை தேடிவந்த இதே சிவபிரகாசம் எங்கேயும் வேலைகிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள எலியட்ஸ் பீச்சுக்கு வந்தபோதுதான் இராமசாமியை கண்டான். இராமசாமியின் அறிவுரையால் அந்த எண்ணத்திலிருந்து மீண்டு கடுமையாக உழைக்கத் துவங்கினார்.

அவ்வப்போது பிரச்சனைகள் எழும்போதெல்லாம் இராமசாமிதான் உதவிக்கு வாருவான். சில நேரங்களில் இராமசாமியின் அறிவுரைகள் தவறுதலாக முடிந்தாலும் பெரும்பாலும் வெற்றியே பெற்றுத்தந்துள்ளது.

பீச்சில் சில காவலர்களைத் தவிர யாருமில்லை. வழக்கமாக நிறுத்தும் இடத்தில் தனது காரை நிறுத்தினார். எப்பொழுதும் அமரும் பெஞ்சை நோக்கி நடந்தார்.

“என்ன சார் ?... மனசு சரியில்லையா....?” என்ற பழக்கப்பட்ட குரல் வந்த திசையை நோக்கினார். அங்கே இரண்டு போலீஸ்காரர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள். மெதுவாக புன்னகையை உதிர்த்த சிவபிரகாசம்,

“சும்மா ... காத்து வாங்க...”

“தெரியும் சார்... எப்பவும் வழக்கமா வர்றதுதானே...?, சார்... கொஞ்சம் சீக்கிரம் கெளம்பிட்ட நல்ல இருக்கும்...” என்று சொல்லி லேசாக நெழிய ஆரம்பித்தனர்.

தன்னுடைய பர்ஸிலிருந்து இரு நூறுரூபாய் தாள்களை எடுத்து அவர்களிடம் கொடுத்தார் சிவபிரகாசம்.
“தாங்க்ஸ் சார்... நாங்க இங்கதா இருப்போம் சார்... ஏதாதுன்ன... கொரல் கொடுங்க சார்....” என்று சொல்லிவிட்டு, சற்று தள்ளிருந்த பெஞ்சில் படுந்திருந்த ஒருவனை லத்தியால் அடித்துவிரட்டினார்கள். அந்த பெஞ்சை அவருக்காக ஒதுக்கி கொடுத்திருப்பதாக நினைப்பு அவர்களுக்கு,

சிவபிரகாசம் அதனைப்பார்த்து மெல்லிய புன்னகை பூத்தார்.

“என்ன பிரகாசம் இப்ப பிரியுதா...?” என்றார் இராமசாமி.

“என்னான்னு...?”

“ இல்ல.. ஒரு காலத்துல படுக்க எடமில்லா... நீயும் இந்த பெஞ்சுல படுத்திருக்கும்போது... எத்தன தடவ போலிஸ்கரன்கிட்ட அடி வாங்கிருப்ப... இப்ப அதே போலீஸ்காரங்க ஒனக்கு எவ்வளவு மரியாத தர்றனுங்க...”

“எல்லாம் பணம்தான்டா...”

“ம்ம்...அததான் சொல்லவந்தேன்... நீ பணம்னு சொல்ற... நா சுழற்சின்னு சொல்றேன்...”

“புரியல...”

“டேய்... பிரகாசம்... இதே பெஞ்சுல படுத்ததால... அடிவாங்கின ஓனக்கு... அதே பெஞ்சை ரிசர்வேஷன் பண்ணித் தர்றனுங்க... ஒன்ன அடிச்ச அதே போலீஸ்காரனுங்க...”

“ இத தான் பணம்னு சொல்றேன்..“

“ நா அத சொல்லல...மொதமொதல்ல தற்கொல செஞ்சுக்க இங்க நீ வந்தபோ... இவ்வளவு பெரிய ஆள வருவேன்னு... அன்னக்கி நெனச்சு பாத்திருப்பியா...”

“சத்தியமா நெனைக்கல...”

“ அன்னக்கி நீ நெனச்ச மாதிரி ஒ வாழ்க்க முடிஞ்சிருந்தா...?”

பதில் பேசமுடியாமல் மெளனமாக கடலையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்தார் சிவபிரகாசம்.

“ இந்த மனுஷ வாழ்க்கையே எதிர்பாராதது. ஆனாலும்... நாமதான்... எதிர்பார்புள்ள வாழ்க்கையா மாத்திக்கணும்... தற்கொல செஞ்சுக்குவது ஒலகத்திலேயே மிக கேவலமான விசயம்டா... வீடுவாச சோத்துக்கே வழியில்லாம பிளட்பாரதில்ல வாழ்றான்களே... பாத்துருக்கலே... அவுங்க யாராச்சும் தற்கொல செஞ்சுட்டதா கேள்வி பற்றிக்கியா....? பெறப்பு எப்படி ஒனக்கு தெரியாம நடந்ததோ... அதுபோல எறப்பும் நடக்கனும்... அதுதான் நியதி... ஒவ்வொரு தொவக்கத்துக்கும் முடிவும்... முடிவுக்கு பின் தொவக்கமும் இருக்கும்... இதுதான் சுழற்சி... இதுதான் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியது...” என்றார் இராமசாமி.

“அப்டின்னா சுழற்சி வாழ்க்கையில எறப்புக்கு பின்னாடி....?”

“தாகூரின் பொன்மொழி ஒன்னு சொல்றேன்... ’இறப்பை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள் ?... நீ பிறக்கும் முன்னே உனக்காக உனது தாயின் உதிரத்திலிருந்து பாலை சுரக்கச் செய்தவன் இறைவன்.... நீ இறந்த பின்பும் உனக்காக வேறு உலகத்தையே படைத்து வைத்திருப்பான்....’ , அதல எறப்பு வரும்வரை காத்திரு... ஒவ்வொரு செயலின் முடிவுக்கு பின்னாலையும் நல்ல தொவக்கம் இருக்கும்...”
இராமசாமி சொல்வதை கேட்ட சிவபிரகாசம் மிகவும் தெளிவடைந்தது போல் காணப்பட்டார்.

“ ரொம்ப தாங்க்ஸ்டா இராமசாமி... உண்மதான் எத்தனயோ முடிவு எனக்கு நல்ல தொவக்கத்த தந்திருக்கு... இப்ப நா வாழ ஆசப்படறேன்... தற்கொல நெனப்புக்கு இப்பவே முடிவு கட்டிட்டேன்....” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நேரம் மெளனமாகவே கடலைப் பார்த்துக் கொண்டேயிருந்தார் .

ஏ.சி. அறையில் மெத்தையில் படுத்திருக்கும்போது வராத தூக்கம், இப்பொழுது அவரை தழுவ ஆரம்பித்தது. மெதுவாக கண்களை மூடி தூங்க ஆரம்பித்தார், அந்த ரோட்டோர பெஞ்சில் சென்னையில் சிவபிரகாசமாக பெயர் மாற்றிக்கொண்ட இராமசாமி.

சற்று நேரத்தில் அவருடைய செல்பேசி சிணுங்க ஆரம்பித்தது. ஆனால் அவருக்குத்தான் கேட்கபோவதில்லை. அவருக்கு ஒரு நல்ல துவக்கத்தை அவருடைய முடிவே ஏற்படுத்தி கொடுத்திருக்கும்.

சிகுவரா
மே 2௦௦4 ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவரா (27-May-17, 9:47 pm)
சேர்த்தது : சிகுவரா
பார்வை : 484

மேலே