தொலைந்த கவிதை

அடர்ந்த வனத்துக்குள் வனப்புடன் அமர்ந்த குடிசை
வைக்கோலினால் வேயப்பட்டு, களிமண்ணினால் மெழுகப்பட்ட
மிதுபாலனின் அரண்மனை.ஏர் ஏந்தியிருந்தாலும் எழுதுகோல் சட்டைப்பையில் தினம் வைத்திருப்பான்.

பசுக்களை மேய விட்டு விட்டு மரநிழலில் பசுமைகளை இரசித்த படி
இவன் எழுதுகோல் நடை பயிலும் அழகுத்தமிழால்
இந்த உழவனின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வின் வலிகள் ஏராளம்.

பல்லாயிரம் கவிதைகள் எழுதியிருந்தான் பல நண்பர்களிடம் படித்துக்காட்டி
பாராட்டும் பெற்றிருந்தான்.இவனது கவிதைகள் உலகம் அறியாது போனாலும்
அவனும் ஓர் பாவலன்.மற்றவர்கள் எழுதும் கவிதைகளை களவாடி தங்கள் பெயர் பொறிக்கும் பொய்க்கவிஞர்களுள்
இவன் உண்மையான கவிஞன்.

அடர்ந்த வனத்துக்குள் ஆங்காங்கே அமர்ந்திருந்த குடிசைகளில் எழுத்தறிவுள்ளவன்
இவன் மட்டும் தான் இருந்தும் தற்பெருமை இல்லாதவனாக வாழ்ந்தான் .வறுமையும் ,சிறுமையும் வாட்டினாலும் அவன் வரிகளில் அவைகளை ஏழ்மையாக எழுதியிருக்கவில்லை.தாய் மண்ணில் ஓர் தீவிர பற்றாளன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அவன் எழுதிய கவிதைகள் எலிகளுக்கும், கறையானுக்கும்,இடைவிடாது பெய்த மழையிலும்
இரையாகிப்போனவைகொஞ்சமல்ல
இருந்தும் இவன் எழுதுகோல் எழுதாமல் இருந்ததேஇல்லை.

தட்டச்சு செய்யாமல் தடம்பதித்த கவிதைகளில்
அனுபவத்தில் இவன் பெற்ற பாடுகளை அழகாக எழுதியிருந்தான்.
வரலாற்றில் இடையன் புல்லாங்குழலால் இடம் பிடித்தான்.
இந்த இடையன் எழுத்தால் இடம்பிடித்தான் என்று சொன்னால் மிகையில்லை.இடையனின் இருதயத்தில் இதமான காதல் நினைவுகளும் பிரிவுகளும் புதைந்திருந்தது.

பட்டுச்சட்டை பரிமாறலும்,
பருவத்தின் முத்தத்தின் தடங்களும்,சிறு சிறு முறுகல்களும்
ஆழமான மனதில் அடக்கி வைக்காமல் அழகாய் பதிந்திருந்தான் மிதுபாலன்.

அகதியாக்கப்பட்ட போது மண் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த பையை
மறந்துவிட்டு இடம்பெயர்ந்திருந்தான் ஆதலால் இவன் சுவடுகளை படிக்க வரமாகக்கிடைத்தது
தூசுகள் படிந்த புத்தகத்தினுள் தூசுகள் படியாமல்
ஒளிந்திருந்தது காதலியின் புகைப்படம். காதல் ஊற்றின் படர்வுகளை படிக்கையில்
கண்ணீர் படர்ந்தது படிப்பவர்களின் கன்னங்களில்

மக்களின் அவலங்களை மறைக்காமல் உரிமைகளை உதறாமல் உண்மைகளை ஊன்றியிருந்தான்.
வரம்புகளிலும் ,மரநிழலிலும் அமர்ந்து கிறுக்கிய வார்த்தைகள் வைரங்களானவை.
மடிந்து கிடந்த காகிதத்துக்குள் மண்ணை நேசித்த மாவீரனின் கடைசிக்குறிப்பையும் பாதுகாத்திருந்தான்.

அகதி முகாமில் சுற்றி வளைப்பில் இனம்தெரியாதவர்களால் இடைமறித்து காணாமல் போகின்றான் கவிஞன். அவனுடன்
இன்னும் பல்லாயிரம் கவிதைகளும் தொலைந்து போனது.
கடத்தப்பட்டவன் சடலமாக மீட்கப்படுகின்றான். ஓர் பாவலனின் பிரேதத்தை பயங்கரவாதி என்ற பெயருடன்
பிரதேச வைத்திய சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டது.மீட்கப்போனால் அச்சுறுத்தப்படுவதோடு அவர்கள் காணாமல் போன கலிகாலம்உண்டு ஆதலால்
யாருமே போகவில்லை.வைத்திய சாலையிலே அடக்கம் செய்யப்பட்டது
கவிதைகளை தொங்கவிட்ட படி தொலைந்து போனான் கவிஞன்
இன்னும் பல கவிதைகள் அவனோடு புதைந்து போனது.

மட்டுநகர் கமல்தாஸ்

எழுதியவர் : மட்டுநகர் காமல்தாஸ் (28-May-17, 2:52 am)
Tanglish : tholaintha kavithai
பார்வை : 334

மேலே