தவித்து நிற்கும் தமிழகம்

குன்றுகள் எல்லாம் குவாரிகளாய்
காடுகள் எல்லாம் வீடுகளாய்
சோலைகள் எல்லாம் பாலைகளாய்
கடல்கள் எல்லாம் கழிவுகளாய்
மணல் மேடுகள் கூட பள்ளங்களாய்
மாறி விட்டது தமிழகத்தில்.....

வறண்டு விட்ட வாழ்க்கையினால்
உயிரை விடுகிறான் விவசாயி
வாட்டி வதைக்கும் வறுமையினால்
நசிந்தே விட்டான் நெசவாளி
வாழ்வு பறிக்கும் இராணுவத்தால்
துவண்டு அழுகிறான் மீனவனோ!
வாழ்ந்து செழித்த மனங்கள் கூட
வாடிக் கிடக்கிறது தமிழகத்தில்.....

நீருக்கு இங்கே வழியில்லை
நிலத்தில் இங்கே மரமுமில்லை
நெருப்பாய் சுடும் சூரியனால்
தவித்து கிடக்கிறோம் நாமிங்கே....

காற்று கூட மாசானதே
ஆகாயம் மழை தர மறுக்கிறதே...
சுற்றும் திசையெல்லாம் சோகங்களே
ஏங்கி தவிக்கிறது தமிழகமே...

கல்வி இங்கே வியாபாரம்
கல்வி கூடத்தில் நடப்பது வெறும் பேரம்...
மருத்துவம் இங்கே தரமில்லை
வருத்தும் நோய்களுக்கோ பஞ்சமில்லை...
மகிழ்ந்து வாழ வழியின்றி
சோர்ந்து கிடக்கிறது தமிழகமே....

மலிந்து விட்டது மதுபழக்கம்
வீடுகளில் அதனால் பெருந்துக்கம்
பெருகி விட்டது கயமைத்தனம்
நாட்டில் அதனால் கடுந்துயரம்
பெண்ணுக்கு இங்கே பாதுகாப்பில்லை
பிஞ்சு குழந்தையும் கூட விலக்கில்லை
காக்க வேண்டியது நம் கடமை
ஆனால் தவறி நிற்கிறது தமிழகமே...

கொளுந்து எரிகிறது சாதி தீ
அதனால் இங்கோ கலவர தீ...
பாசம் வைத்த பிள்ளையையும் இங்கு
வெறுப்பில் வெட்டி வீழ்த்துது சாதியமே...

வளர்ந்து விட்டது செலவிங்கே
வாட்டி வதைக்குது விலையிங்கே
வறுமை முகம் தான் இங்கெங்கும்
வருந்தி தவிக்கிறோம் தினமிங்கு....

வறட்சி கண்டு அழுகின்றோம்
வெள்ளம் கண்டு அஞ்சுகின்றோம்....

ஆனால்,நீரை சேமிக்கும் வழித்தேடி
வறட்சி போக்கும் திட்டமில்லை,இங்கு
வளர்ச்சி திட்டம் எதுவுமில்லை...

நாம் ஏங்கும் நிலை நீங்கி
துயர் மாறும் காலம் எப்போது?

மகிழ்ச்சி உடன் நாம் வாழ
முயற்சி செய்வது நம் கையில்....
மாற்றம் காண முயன்றிடுவோம்
முயன்றால் மாறாத நிலையுமில்லை...!!

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (28-May-17, 3:55 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
பார்வை : 265

மேலே