மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு அவர் உணர்வுகளை மதித்தாலே ------

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள். வரப்பிரசாதமான மனைவியின் மனதில் இடம் பிடிக்க நீங்கள் நாலைந்து ரெளடிகளைப் புரட்டிப் போடவோ டூயட் பாடவோ பொன்னும் பொருளும் அள்ளிக் கொட்டவோ தேவையில்லை. மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு அவர் உணர்வுகளை மதித்தாலே போதும். ஒருவரின் ரசனையை மற்றவர் புரிந்து கொண்டு சில அனுசரணைகளைச் செய்து கொண்டு பரஸ்பர புரிதல் + நம்பிக்கை + அன்பைக் கலந்து குடும்பத்தை நடத்துதல் மகிழ்ச்சியான இல்லறத்திற்கு முக்கியம்.



1. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு எண்ணற்ற கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் வரும் மனைவியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக "எங்கம்மா வைக்கும் வத்தக்குழம்புக்கு ஈடு இணையே இல்லை. நீ செய்தது சுமாரா இருக்கு" என்று அம்மா புராணம் பாடதீர். அதற்குப் பதில்,'வத்தக்குழம்பு சூப்பர்' என்று புகழ்ந்து விட்டு "எங்கம்மாவும் நல்லா பண்ணுவாங்க, நீ அவங்க ஸ்டைலும் கேட்டு அசத்தேன். உனக்கும் எங்கம்மா போல கை மணம்" என்று மனதாரப் புகழுங்கள். முதலில் சமையலில் சிற்சில குறைகள் இருந்தாலும் உங்கள் பாராட்டிற்கு ஏங்கி இன்னும் சிறப்பாக செய்வார்கள்.

2. மனைவிக்குத் தெரியாமல் யாருக்கும் பணம் தருவதோ ஜாமீன் கையெழுத்து போடுவதோ வேறு இடத்தில் வட்டிக்குக் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடவே கூடாது. நாளை ஏதேனும் பிரச்சினைகள் என்றால் மனைவி தான் தோள் கொடுப்பாள். மனைவிக்குப் பிடித்தது பிடிக்காதது எது என்று தெரிந்து கொண்டு அதன் படி நடக்க முயற்சியுங்கள்.

3. மனைவி புது ஆடை உடுத்தி இருந்தாலோ ஒப்பனைகள் மாற்றி இருந்தாலோ அதைக் கண்டுபிடித்துப் பாராட்டி ரசியுங்கள். கணவர் தன்னைக் காதலிக்கிறார் என்று அந்தப் பெண்ணுள்ளம் மகிழும்.

4. மனைவிக்கு மல்லிகைப் பூவும் பிடித்த காரமோ ஸ்வீட்டோ வாங்கிக் கொடுங்கள். பொன்னோ பொருளோ சாதிக்காததை மல்லிகைப்பூ சாதிக்கும். மனைவி கணவர் தன்னை நினைத்து வாங்கி வந்த பூ என்று பெருமையாக நினைப்பார்கள்.

5. மனைவியை யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். குறிப்பாக பிற பெண்களுடன் ஒப்பிட்டுவது, குத்திக் காட்டுவது வேண்டாம்.

6. அம்மா பிள்ளையாக மனைவி சொல்ல வருவதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு தலை பட்சமாக நியாயம் வழங்காதீர்.

7. வேலைக்குச் சென்றாலும் மனைவியிடம் ஓரிரு முறையாவது கை பேசியில் 'சாப்பிட்டியா? நான் லேட்டா வருவேன்' என்று அன்புடன் பேசுங்கள்.

8. மனைவியுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது நேரத்தைச் செலவழியுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.ஒரு பிரச்சினை என்றால் உங்கள் கோணத்திலிருந்தே ஆராய்ந்து கொண்டிருக்காமல் மனைவியின் நிலையிலிருந்தும் ஆராய்ந்து முடிவெடுங்கள்.

9. மனைவிக்குப் பிடித்த உணவு, நிறம், பிடித்த விஷயங்கள் தெரிந்து வையுங்கள். குழந்தைகளின் மேல் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டையும் அன்பையும் வெளிப்படுத்துங்கள். சில கணவர்கள் தனக்கும் தன் வீட்டிற்கும் தொடர்பே இல்லாதது போல சம்பாதித்து மட்டும் தருவர், அப்படி இருக்கும் கணவரை மனைவிக்கு அறவே பிடிக்காது. மனைவியின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடங்கள்.

10. ஆண்களை விட பெண்களுக்கு தீர்க்கப்பார்வையும் பின்னாள் நடப்பதை ஊகிக்கும் குணமும் உண்டு. எந்த முடிவு எடுப்பதானாலும் மனைவியின் கருத்தைக் கேட்டே முடிவு செய்யுங்கள்.

11.மனைவிக்குப் பிடிக்காத கெட்டப்பழக்கங்களான மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றவற்றைப் பழக்கப்படுத்தியிருந்தால் அறவே விட்டு விட வேண்டும். கணவருக்கு வியாதி வந்தால் அதிகம் பாதிக்கப்படுவது மனைவி மட்டுமே. மனைவி மந்திரியாய் ஆலோசனைகள் கூறினால் அதைச் செயல்படுத்தத் தயங்காதீர்கள்.

12. நண்பர்களிடமும் சொந்தங்களிடமும் மனைவியைப் புகழ்ந்து அவருடைய நிறைகளை எடுத்துக் கூறுங்கள். குறைகளைத் தனியே தன்மையாகச் சுட்டிக் காட்டலாம். இப்படிப்பட்ட கணவரைத் தான் மனைவிக்குப் பிடிக்கும்.

13. மனைவியைச் சமையல் செய்யும் எந்திரமாக எண்ணாமல் வாரம் ஒரு முறை அவருக்கு ஓய்வளித்து கணவர் சமைத்து அசத்தலாமே. இதன் மூலம் மனைவியின் கஷ்ட நஷ்டங்களும் புரியும், மனைவிக்கும் ஒரு மாறுதலாக இருக்குமே.

14. மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றாலோ மாத விலக்கின் போதோ உங்களால் முடிந்த வரையில் ஆறுதல் வழங்கலாம். அக்கறையுடனும் அன்புடனும் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

15. குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பது மனைவியின் வேலை என்று கடமைகளில் இருந்து விலகி ஓடாமல் குழந்தைகளுடன் நேரம் செலவழித்து பாடம் கற்பித்தால் குழந்தைகளுக்கும் பெற்றோர் தங்கள் மேல் பாசம் வைத்து இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும். மனைவிக்கும் கொஞ்சம் ஓய்வாக இருக்கும்.

16. மனைவியின் உறவினர்களையும் பெற்றோரையும் உயர்வாக எண்ணுவதோடு அவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது அன்பாக விருந்தோம்பினால் மனைவிக்குக் கணவன் மேல் இருக்கும் மதிப்பும் மரியாதையும் கூடும், இதையே உங்கள் உறவினர்களுக்கும் பரிசாகத் தருவாள்.

17. அவ்வப்போது சிற்சில இன்ப அதிர்ச்சிகள், வித்தியாசமான பரிசுகள் என்று கொடுத்து அசத்தலாம். மனைவி வெகு நாட்களாக ஆசைப்பட்ட விஷயத்தை நிறைவேற்றலாம்.

18. அவ்வப்போது ஐ லவ் யூ, இன்னைக்கு ஏன்னே தெரியலே, ஆபீஸ்லே உன் நினைப்பு தான் என்று அன்பு மழை பொழியுங்கள்.

19. வெளியூருக்குச் சென்று வந்தால் உன்னை மிஸ் பண்ணினேன், நல்ல சாப்பாடு சாப்பிட்டே நாலு நாளச்சு. உன் கை மணம் வருமா? என்று உண்மையாகப் பாராட்டுங்கள்.

20. குடும்பத்திற்காக ஓடாய் உழைக்கும் மனைவியை வாரம் ஒரு நாளாவது வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் அழுத்ததைப் போக்க வேண்டும்.

21. ஆண்டிற்கு ஒரு முறை குடும்பத்தினருடன் வெளியூர் சுற்றுலா போய் வருவது மனைவிக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். வெளியூர் போக முடியா விட்டாலும் மனைவியின் பிறந்தகத்திற்குப் போய் வர அனுமதி கொடுத்தாலே போதும், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்று வருவார்.

22. வாரம் ஒரு முறை கோவில்களுக்கோ பீச், பார்க், திரையரங்கு என்று மனைவியையும் காதலி போல் நினைத்து சுற்ற வேண்டும். வாரம் முழுவதும் உழைத்துக் களைத்த பெண்ணிற்கு வார விடுமுறை தரும் ஆனந்த உற்சாகம்.

23. மனைவிக்கு எந்தச் சூழ்நிலையிலும் துரோகம் நினைக்காதீர்கள். மனைவிக்குப் பிடிக்காத எந்த விஷயத்தையும் செய்யாதீர்கள்.

24. மனைவியைப் பற்றி சகோதரியோ தாயோ வேறு யாராவதோ வம்பு கூறினால் எடுப்பார் கைப்பிள்ளையாய் அப்படியே நம்பி விடாதீர்கள். உங்களுக்கும் மனைவிக்குமிடையேயான நெருக்கத்தையும் அன்னியோன்னியத்தையும் குறைக்கும் எந்த செயலையும் ஊக்குவிக்க வேண்டாம். மனைவியின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாய் இருங்கள்.

25. வேலைக்குப் போகும் பெண்ணானாலும் வீட்டில் இருக்கும் பெண்ணானாலும் மனதும் உணர்வுகளும் ஒன்று தான். பணத்தால் பேதம் பார்க்காதீர்கள்.

26. கணவர் கோபத்திலோ சண்டையிலோ சாதாரணமாகச் சொல்லும் சொற்கள் மனைவிக்குச் சதா ரணமாய் அரித்துக் கொல்லும். கணவர் மறந்தாலும் மனைவி மறக்க மாட்டார்கள். எனவே உங்கள் மனைவியின் கண்ணாடி போன்ற மனம் கோணாதவாறு நடங்கள்.

27. மனைவியின் வேலைப்பளுவைப் பகிர்ந்து கொள்ளாமல் அதிகமாக வேலை வாங்கி விட்டு இரவிலும் உங்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். அவர்களின் உடல் நிலையையும் மன நிலையையும் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.படுக்கையறையில் வீண் வாதங்களைத் தவிருங்கள். படுக்கையறையில் மனைவியின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளியுங்கள். மனைவிக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவரது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது.

28. அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கணினி முன்போ தொலைக்காட்சி முன்போ அமர்ந்து மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள்.

29. மனைவிக்குப் பிடித்தது எது, பிடிக்காதது எது, மனைவியின் நிறைவேறாத நீண்ட நாள் ஆசைகளைத் தெரிந்து கொண்டு நிறைவேற்றுங்கள். சின்ன சின்ன சந்தோஷ தருணங்கள் கூட பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும்.

30. பெண்மையை இழிவுபடுத்தும் வார்த்தைகள், சந்தேகச் சொற்கள், நம்பிக்கையின்மை போன்றவற்றை எந்த சூழலிலும் பயன்படுத்தாதீர்கள்.

31. நிறைய மனைவிகளின் மனதில் உள்ள குறையே இவை தான், என்னை அவருக்குப் பிடிக்க மாட்டேங்குது, முன்பு மாதிரி பேசறதில்லை, பழகறதில்லை, ஏன் பார்க்கிறது கூட இல்லை என்ற ஆதங்கம் உண்டு.காதலிக்கும் போதும் திருமணமான புதிதில் பேசின காதல் வசனங்களை எப்பொழுதும் பேசுங்கள். உடலிற்குத் தான் வயது ஏறுகிறதே தவிர மனதின் இளமைக்கல்ல.

32. மனைவியின் பிறந்த வீட்டையோ வீட்டினரையோ குறை கூறுவதோ கிண்டல் செய்வதோ மனைவிக்கு எரிச்சலை வரவழைக்கும். அப்படி செய்யும் கணவனை மனைவிக்கு மதிக்கத் தோன்றாது.

33. மனைவியின் பிறந்த நாள் மனைவியை திருமணத்திற்கு முன் சந்தித்த நாள் போன்ற நாட்களை நினைவில் வைத்துக் கொண்டு மனைவிக்கு அசத்தல் பரிசுகள் கொடுக்க வேண்டும்.

34. மனைவியின் திறமைகளைக் கண்டறிந்து மேலும் படிக்க வைக்கவோ வேலைக்குப் போக ஆசைப்பட்டால் வேலைக்கு அனுப்பவோ தயங்கக் கூடாது. மனைவியை மதித்து நீங்கள் செய்யும் செய்கைகள் உங்கள் மனைவி மனதில் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தைக் கூட்டுமேயன்றி குறைக்காது.

35. மனைவி தோல்வியால் துவளும் போது 'உன்னால் முடியும்' என்று உற்சாகப்படுத்த வேண்டும். திமிரெடுத்து என் பேச்சை மீறி வேலைக்குப் போனேல்ல நல்லா வேணும் என்று அவர்கள் துன்பத்தில் இன்பம் காணக் கூடாது.

36. மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செய்யும் கடமைகளில் ஒரு குறையும் இருக்கக் கூடாது.

37. அகந்தை, ஆணாதிக்க மனோபாவம் கொண்ட கணவன்மார்களை மனைவிகளுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

38. வழக்கமான வாழ்க்கைமுறையை மாற்றி திடீரென்று வெளியில் போவது, உணவகத்திற்குச் சென்று வருவது, உறவினர்கள் வீட்டிற்குப் போய் வருவது என்று தினசரி வாடிக்கையை மாற்றுவதும் மகிழ்ச்சி தரும்.

39. பெரும்பாலான மனைவிமார்களுக்குக் கணவன்மார் ஊதாரித்தனமாகப் பணத்தைச் செலவழிப்பது பிடிக்காது, சிக்கனமான மனிதரைத் தான் எந்தப் பெண்ணிற்கும் பிடிக்கும்.

40. மனைவி கருவுற்றிருக்கும் போதும் இளம்தாய்மாராய் இருக்கும் போதும் அவர்களின் உடல் நலம் பேண உதவியாய் இருக்க வேண்டும். இதே போல் மனைவியின் மாதவிடாய் நிற்கும் காலகட்டங்களில்(மெனோபாஸ்) அவர்களுக்கு நேரிடும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு உதவியாக இருக்க வேண்டும்.

41. மனைவியைத் தன்னைப் பெற்றவர்களிடமும் உடன் பிறந்தவர்களிடமும் நண்பர்களிடமும் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது.

42. மனைவியிடம் சண்டை போட்டால் எந்த ஈகோவும் பார்க்காமல் சமாதானம் ஆகி விட வேண்டும். பிரச்சினைகளைப் பேசி தெளிவுபடுத்தி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

43. மனைவியின் மாண்பை உணர்ந்து அவரில்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என்பதை அடிக்கடி மனைவியிடம் கூறி உயர்வுபடுத்த வேண்டும்.

44. மனைவி செய்யும் சிறு நல்ல செயலையும் ஊக்கப்படுத வேண்டும். உங்கள் பாராட்டினால் இன்னும் குடும்பத்திற்காகப் பாடுபடத் துடிக்கும் அந்த அன்புள்ளம்.

45. கணவருக்கு ஏதாவது என்றால் அதிகம் துடிக்கும் பாதிப்படையும் உறவு மனைவி. எனவே மனைவியை விட எதுவும் பெரிதில்லை என்று அவரை எந்தச் சூழலிலும் கைவிடவோ பிரியவோ கூடாது.

46. பொய் சொல்வது, உண்மைகளை மூடி மறைப்பது, நம்பிக்கைத் துரோகம், கள்ள உறவு இவற்றை எந்த மனைவியாலும் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே எந்த சூதுவாதுமின்றி உண்மையான பாசத்துடன் நேர்மையான நல்ல கணவராய் நடத்தல் உத்தமம்.

47. கணவருக்கும் மனைவிக்குமிடையே எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது, எந்த அன்னிய சக்தியும் ஊடுருவாத வகையில் நெருக்கமாகப் பழக வேண்டும்.

48. மாமியார் மருமகள் சண்டையில் நீங்கள் தாயா? தாரமா? என்று தலையைப் பிய்த்துக்கொள்ளாமல் நடுநிலையுடன் நடக்க வேண்டும்.

49. இரவு உணவு மனைவியுடனும் குழந்தைகளுடனும் வீட்டிலுள்ள பெரியவர்களுடனும் சேர்ந்து உண்ணுங்கள்.

50. குழந்தைகளிடம் மனைவியின் தியாகங்களையும் அன்பையும் கருவுற்று சுமந்து பெற்ற பெருமைகளையும் எடுத்துச் சொல்லி மனைவியை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் எப்படி மதிக்கிறீர்களோ அது போலத் தான் மனைவிக்கு அந்த வீட்டில் மரியாதை கிடைக்கும் என்பதை மறந்து விட வேண்டாம். மனைவியை மட்டம் தட்டுதல், திறமைகளைக் குறைத்து மதிப்பிடுதல் போன்றவை கூடவே கூடாது.

இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டி மாதிரி தான் கணவரும் மனைவியும் இணைந்து நடத்தும் வாழ்க்கை. ஒரு மாடு ஒரு புறமும் இன்னொரு மாடு இன்னொரு புறமும் இழுத்தால் வண்டி போகுமிடம் போய்ச் சேராது. அது போலத் தான் கணவன் – மனைவி உறவும். ஒரு கை ஓசை சத்தம் தராது. ஒருவர் கோபபபடும் போது மற்றவர் பொறுமையாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் ஆளாமல் நிபந்தனை அன்பு செலுத்தாமல் விட்டுக் கொடுத்து, புரிந்து கொண்டு உணர்வுகளை மதித்து வாழ்ந்தாலே போதும் அதுவே அழகான தாம்பத்தியம். நீங்கள் இருவருமே உங்கள் சுயங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம். இயல்பாய் யதார்த்தமாய் தத்தம் எல்லைகளுக்குள் சுயமரியாதையுடனும் அன்புடனும் புரிதலுடனும் வாழ்ந்தால் போதும், அதுவே பூலோக சொர்க்கம்.

பாசத்தில் தாயாகவும் வழி நடத்துவதில் மந்திரியாகவும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதில் தோழியாகவும் எல்லாமாக இருக்கும் மனைவி என்ற தேவதையின் மனம் கவர, மேற்கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றினாலே போதும். உங்கள் காதலின் ஆயுளும் மனதின் இளமையும் வசந்தமாய் நீளும். உங்கள் இல்லம் இனிய இல்லறம் தான். பிறகென்ன குடும்பத்தின் அச்சாணியும் ஆணிவேருமான மனைவியின் உள்ளம் கவர்ந்த கள்வன் நீங்கள் தான், உங்கள் அன்பிலே மகிழ்ச்சியாய் இல்லறம் நடத்தும் அந்த அன்புள்ளம்.

இந்தியக் குடும்பங்களில் மாமியார்-மருமகள் பிரச்சினைகள் தான் பெரும்பாலும் கணவன் – மனைவி உறவிற்குள் விரிசல் வரக் காரணமாகிறது. உரலிற்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பது போல் மாமியார் – மருமகள் சண்டையில் அந்த வீட்டுப் பிள்ளைக்குத் தான் தலை உருளுவது. தனிப்பட்ட முறையில் மாமியார்- மகன் – மருமகள் அனைவருமே நல்லவர்கள் தான். இவர்களுக்குள் எந்த இடத்தில் முட்டிக் கொள்கிறது? மாமியார் மருமகள் உறவு மேம்பட மாமியார் மனதில் மருமகளும் மருமகள் மனதில் மாமியாரும் இடம் பெற காத்திருங்கள் அடுத்த பகுதிக்கு

காயத்ரி வெங்கட்

எழுதியவர் : (29-May-17, 5:15 am)
பார்வை : 607

மேலே