ஆட்சியாளருக்கு ஓர் கடிதம்

#ஆட்சியாளருக்கு ஓர் கடிதம்

மாண்புமிகு ஆட்சியர்க்கு வணக்கத்துடன் வாழ்த்து
நல்லாட்சி புரிந்திடணும் நாட்டுமக்களையே காத்து
நீதி நேர்மை நாட்டினிலே நிலவிட வேண்டும்
அந்த நேர்மையிலே நாடுயர்ந்து ஒளிர்ந்திட வேண்டும்..!

ஆரம்ப கல்விக் கூடம் ஆயிரந்தான் இருந்தும்
ஆகவில்லை இன்னுந்தான் ஏழைக்கு கல்வி சொந்தம்
கடைவிரித்து பேரமும்தான் தேர்வு முடிவு நாளில் - கல்வி
கைவிரிக்க கண்ணீர்தான் ஏழைகளின் கண்ணில்..!!

எத்தனையோ இலவசங்கள் தருவதெல்லாம் வீணே
கல்வி இலவசந்தான் ஏழைக்கென்று ஆகட்டுந்தான் உடனே
கல்வி விற்போர் முகவரையே கண்டறிய வேண்டும்
கைவிலங்கு பூட்டியவரை சிறைபிடிக்க வேண்டும்..!

கள்ளுக்கடை மதுக்கடைகள் காணாமல் போகவேண்டும்
நெல்லுக்கடை அரிசிக்கடை நித்தம் பெருக வேண்டும்
வீட்டுமனையான நிலம் விவசாயம் காண வேண்டும்
விவசாயதிற்கே விளைநிலமென கடுஞ் சட்டமொன்று வேண்டும்..!

அதிசயமாய் பெய்யும் மழையை அணை நிறுத்த வேண்டும்
அணைமழையில் பயிரும் செய்து பசுமை காண வேண்டும்..!
ஆற்றினிலே தொழிற்கழிவு அல்லல் நீங்க வேண்டும்
ஆற்றுமணல் திருடர்களை அழித்திடவும் வேண்டும்..!

வீட்டுக்கொரு மனிதருக்கு வேலை வாய்ப்பு வேண்டும்
எந்நோய்க்கும் இலவசமாய் மருத்துவமும் வேண்டும்
தொழில் வளங்கள் நாட்டினிலே பெருக்கிடவும் வேண்டும்
அயல்நாட்டு வேலை மோகம் தணித்திடவும் வேண்டும்..!

லஞ்சம், வஞ்சம் ஏதுமில்லா ஆட்சி நிலவ வேண்டும்
பஞ்சம் பசி ஏழைவிட்டு காணா தொழிய வேண்டும்
கள்ளர் கயவர் குற்றமில்லை என்ற நிலை வேண்டும்
நன்னெறியில்ஆட்சி கண்டு மக்கள் மகிழ்ந்திடவும் வேண்டும்..!

-சொ.சாந்தி-

(2016-ல் எழுதிய கவிதை)

எழுதியவர் : சொ.சாந்தி (29-May-17, 7:55 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 56

மேலே