கல் வீச்சு

கல் வீச்சு !
கவிதை by:கவிஞர் பூ.சுப்ரமணியன்
கூட்டத்தைக் கலைக்க
கூடியவர்கள் பதறி ஓட
எதிரிகள் எதிர்ப்பைக் காட்ட
சதிகாரக் கும்பல் காட்டும்
மனிதநேயமற்ற செயல்
குனிந்து எரியும் கல்வீச்சு !

பொது வேலைநிறுத்தம்
பேருந்துகள் ஓடாது
பள்ளிகள் இயங்காது
பெட்டிக்கடை கூட இயங்காது
போட்டிக்கட்சியினர்
போர்க் குரல் !

பேருந்துகள் இயங்கும்
பள்ளி கல்லூரிகள் இயங்கும்
பெருங்கடைகள் கூட இயங்கும்
ஆளுங்கட்சியினர்
அதிகாரக் குரல் !

அதிகாரக்குரல் போர்க்குரல்
இடையில் ஒலிக்கும்
சோககீதம் பாடும்
மக்களின் மௌனக் குரல்...?

கல்
எவர் கையில் சிக்கியதோ
திறந்த கடையில் கல்வீச்சு
நிற்கும் ஆட்டோவில் கல்வீச்சு
ஓடிய பேருந்தில் கல்வீச்சு
கண்ணாடிகள் சிதறின !

கல் வீச்சினால்
பேருந்தின் கண்ணாடிகள்
மட்டும் சிதறவில்லை
உருவாக்கிய உழைப்பாளிகள்
உழைப்பும் நேரமும்
மக்கள் வரிப்பணம் சேர்ந்தே
மண்ணில் சிதறின!

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (29-May-17, 12:03 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : kal veechu
பார்வை : 48

மேலே