உழைக்கும் பெண்கள் உலகின் கண்கள்

உழைக்கும் பெண்கள் உலகின் கண்கள்..!
======================================


பெண்கள் முன்னேற்றமானது பேச்சள வில்தானோ
கண்கள் கசங்காத நாளில்லை..!

பணிக்குச் சென்றால்தான் எம்பசி தீருமென்று
பலவிதப் பணிக்கும் செல்கிறோம்..!

கல்மண் சுமந்து பெருங்கட்டிடங்கள் உருவாக
நெல்மணி வயலிலுழைத்தும் வாழ்கிறோம்..!

துவைப்பதும் சுத்தம் செய்வதும் பாத்திரம்
துலக்குவது மெங்களிதர வேலையாகும்..!

இடுப்பிலும் தலையிலும் இன்னலுறக் கைவண்டி
இழுக்கும் வேலைகூடச் செய்வோம்..!

அண்டை அயலூருக்குத் தினமுழைக்கச் செல்லும்
அவலத்தையும் நாங்கள் பொறுப்போம்..!

நாயுடனே நடைபயிலும்நகர நங்கைவாழ் மத்தியிலே
வாயுடன் வயிற்றிற்கும் போராடுகிறோம்..!

சுகம்காணும் எண்ணமுடன் சும்மாயில்லை நாங்கள்
சோதனைகள் ஏற்பதற்கே பிறந்தவரே..!

பிள்ளை சுமந்துகொண்டு உழைக்கும் வர்க்கமென
வெள்ளை மனக்கறுமேனி மாந்தர்கள்யாம்..!

முடமாகி வாழ்வில் முடங்காமல் வறுமையகலக்
கூடையேந்தி கூவிபலவிற் கவும்செய்வோம்..!

கல்யாணமானாலும் உழைத்து உழைத்து மனம்
கல்லாகிய வர்க்கம் தானெனினும்..

பற்றாக்குறைக் கூலியில் பகல்பூரா உழைத்துவிட்டுப்
பற்றுடன் நல்லுறவோடுதான் வாழுகின்றோம்..!

பெண்ணாய்ப் பிறந்தது உழைத்து மடிவதற்கேவெனும்
எண்ணத்துடன் வாழ்வதுதான் எங்கள்நிலையோ..!

நலிந்தால் வாழ்விலையென உழைப்பின் உயர்வை
மெலிந்தயெங்கள் தேகமதைச் சொல்லுமென்பதை..

களைபோக்குச் சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன் – இவ்வுலகு
உழைப்பவர்க்கு உரியதென் பதையே..!

பாவேந்தர் பாரதிதாசன் உழைப்பின் உயர்வைப்
பக்குவமாக பாருக்கு உணர்த்தியதையறிவீர்..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (29-May-17, 2:10 pm)
பார்வை : 3141

மேலே