வறட்சி மாநிலம்

வறட்சி மாநிலம்
================


மண் வெளியில் தண்ணீரின்றித் தவிக்கையில்
***விண்வெளியில் தண்ணீர் தேடும் விந்தையாம்
நிலத்திலே நீர்த்துளி ஏதுமில்லா நேரம்தனில்..
***நிலவிலினிலே ஆராய்ச்சி செய்தென்ன பயன்..?

தாயிழந்த குழந்தை மிரண்டு விழிப்பதுபோல..
***வாய்பிளந்தஏரி நீருக்காக நீலவானம் நோக்குமோ.!
திட்டமுடன் ஆறுகுளம் ஏரிமடு வயலென..
***பட்டாபோட்டு விற்றதால் வந்தது நீர்வறட்சி..!

இரத்தம் சுண்டி உதட்டில்வரும் வெடிப்புபோல
***ஈரம்வற்றிய நிலமும் வெடித்து பிளக்குதுபாரடா..!
பொக்கையும் பிளவுமாய்க் காணும் ஏரிகளங்கே..
***கொக்கையும் காணொம் மீனையும் காணொம்..!

தன்னிலத்தோடு தரிசு நிலத்தையும் வளைப்பதில்..
***தன்னிகரில்லாப் போராளிகள் அரசியல் வாதிகள்..!
வெட்டிய மரமெலாம் கட்டுமரமாகிக் காசாகும்..
***கட்டுப்பாடின்றி கட்டிட மெழும் குளக்கரையில்..!

சதிசெய்தே வாழப்பழகிய சதிகார ரவர்களிடம்..
***விதிசெய்யும் வேலைகள் ஒருபோதும் பலிக்காது..!
காண்பது எதையும் பார்வையிலேயே வளைத்து..
***தன்னகம் கொள்வதில் பெருவல்லமை யாளர்கள்..!

தூற்றும் அரசியலில் பொதுநலமென்று சொல்லி..
***தூர்வாரும் காட்சி நாடகம்கூட அரங்கேறுமப்பா..!
போராடி ஆறுஏரி குளம்மடு மீட்டெடுத்தால்பின்..
***நீராடி மகிழலாம்நாம் பருவமழை பொய்கையில்..!

பிறை வடிவிலமைத்த பழந்தமிழர் குளம்ஏரிதனில்..
***குறையில்லா நீரிருப்பில் கொண்டாடி மகிழ்ந்தனர்..!
மழை வரும்போதெல்லாம் மறந்து தூங்கியமக்கள்..
***மழைவருமுன் விழிப்புடன் தூர்வார வேண்டுமப்பா..!

பழங்கோவில் அருகருகே பெருங்குள மிருக்குமாம்
***விழும்மழைநீர் வீணாகாது குளம்வந்து சேருமாம்
வீணாகும் மழைநீரைநுண் மதிகொண்டு சேமித்தால்
***வான்பொய்த்தாலும் வாளாது சுகமாய் வாழலாம்..1

குளமிருந்தால் நீரில்லை குளமேயில்லை யிப்போது
***குளமிருக்கும் இடத்தில் குடியிருப்பு காண்கிறோம்..!
குளங்களைப் பராமரிக்கும் குடிமராமத்து திட்டமது..
***உளமுடன் செயல்பட்டால் வளமுடனுண்டு வாழ்வு..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (29-May-17, 2:23 pm)
பார்வை : 100

மேலே